மரியாவும், அமீனாவும் மரியாவின் கணவன் மன்சூர் மூவரும் விசாரணைக்காகக் காத்திருந்தனர். மரியா முஸ்லிம்கள் நல சங்கத் தலைவர் எம்.ஏ.மஜீத் வீட்டில் தங்கியிருந்தாள். வெளியே சென்றால் பொதுமக்கள் அவளை அதிக ஆர்வத்தோடு கவனித்தனர். இது மரியாவுக்கு அதிக சங்கடத்தை ஏற்படுத்தியது. இந்த அளவுக்கதிமான கவனிப்பால் மரியா வெளியே செல்வதைக் கூடியமட்டும் தவிர்த்து வீட்டிலேயே இருந்தாள். சிங்கப்பூரில் மட்டுமல்லாது உலகஅளவில் அனைத்து இஸ்லாமிய நாடுகளில் இருந்த மக்களும் கவனிக்கத் தொடங்கினர்.
பாகிஸ்தான் முஸ்லிம் சங்கங்கள் மரியாவுக்குத் தேவையான நிதியுதவி செய்வதாகக் கடிதம் அனுப்பின. மேலும் சில இஸ்லாமிய நாடுகள், மரியாவை அவள் கணவனிடமிருந்து பிரித்தால், டச்சு அரசாங்கத்தை இஸ்லாமிய நாடுகள் சும்மா விடாது என்ற மிரட்டல்கள் தொடர்ந்தவண்ணம் இருந்தன. இந்தோனேசியாவிலிருந்து சௌதிஅரேபியா வரை இருந்த இஸ்லாமிய நாடுகள் அனைத்திலும் டச்சு அரசாங்கத்துக்கு எதிரான குரல் எழுப்பிய வண்ணம் இருந்தனர்.
விசாரணை நாள் நெருங்கியது. மரியாவின் தாய் அடிலைன் நெதர்லாண்ட்ஸிலிருந்து இந்த வழக்கிற்காக சிங்கப்பூர் வந்துவிட்டாள். நீதிபதி பிரௌன் இரண்டு வாரங்களில் தீர விசாரித்து தீர்ப்பு வழங்கினார். மரியாவுக்கும் மன்சூருக்கும் நடந்த அவசரத் திருமணம் பிரச்சனைகளை தீர்த்துவைக்கும் என்று நினைத்ததற்கு மாறாக பிரச்சினைகளை உலகளவில் கொண்டுபோய் பெரிதாக்கிவிட்டது என்று கூறினார்.
அவர் பிரச்சினையைத் தர்க்கரீதியாக ஆராய்ந்து அதன் அடிப்படையில் தன் தீர்ப்பை வழங்கினார். முதல்கேள்வி நடந்த திருமணம் சட்டப்படி அங்கீகரிக்கப்படுமா? இரண்டாவதுகேள்வி? மரியாவை அமீனா தன்னுடன் வைத்துக்கொள்ள சட்டம் அனுமதிக்குமா?
முதலில் மரியாவின் திருமணம் சட்டப்படி அங்கீகரிக்கப்படாத ஒன்று எனத் தீர்ப்புக் கூறினார்.இதற்குக் காரணம் மரியாவின் சொந்தநாடு அவள் தந்தையின் நாடாகத்தான் இருக்கவேண்டும். எனவே நெதர்லாண்ட்ஸ்தான் அவள் நாடு.
டச்சுநாட்டுச் சட்டப்படி பெண்ணிற்குத் திருமண வயது 16.சிங்கப்பூரில் பின்பற்றப்பட்டு வந்த ஆங்கிலேயத் திருமணச் சட்டங்கள்படி திருமணம் செய்துகொள்பவரின் சொந்தநாட்டுச் சட்டங்களில் என்ன பின்பற்றப்பட்டு வருகின்றதோ அதையே பின்பற்ற வேண்டும் என அங்கீகரித்துவந்தது.
இந்தத் திருமணத்தை ஒரு விதிவிலக்காகக் கொண்டு அங்கீகரிக்கவேண்டும் என்று நினைத்தால் மரியாவைத் திருமணம் செய்துகொண்ட மன்சூரும் சிங்கப்பூரைச் சேர்ந்தவர் கிடையாது. அவர் மலேசியாவில் கிளந்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் .மரியாவும் சட்டப்படி முஸ்லிமாக அங்கீகரிக்கப்படவில்லை. உரிய வயது வந்து சொந்தமுடிவு எடுக்கும்வரை குழந்தைகளின் தந்தையான எட்ரியனஸ் எந்த மதத்தைப் பின்பற்றி வருகிறாரோ அந்தமதம்தான் குழந்தையின் மதம்.
தந்தை மட்டும்தான் தன்குழந்தை எந்தமதத்தைச் சார்ந்து வாழவேண்டும் என்பதை முடிவு செய்ய முடியும் .மரியாவின் தந்தை தன்மகள் இஸ்லாமியச் சமயத்தைச் சார்ந்து வாழ்வதில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதைத் தெளிவாகக் கூறிவிட்டார். இந்நிலையில் நடந்த திருமணம் அங்கீகரிக்கப்படவில்லை என்பது முதல்தீர்ப்பு .மரியாவைத் தன் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள நடைபெற்ற திருமணம் செல்லுபடி ஆகாது என்று சொல்லிவிட்டு தீர்ப்பின் அடுத்த முக்கியமான கேள்விக்குச் சென்றார்.
இரண்டாவதாக மரியாவுக்கு யார்பெற்றோர்? யாருடைய பாதுகாப்பில் மரியா வாழவேண்டும்? ஒரு நீதிபதியாக இந்த்த் தீர்ப்பை அந்தக் குழந்தையின் நலத்தையும் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு இந்த விசித்திர வழக்கை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தார். மரியாவின் தற்போதைய மனநிலையின்படி பார்த்தால் அவளுக்கு அமீனாதான் தாய். அவள் வாழும் உலகம் மலேசியா மற்றும் சிங்கப்பூர். அவளுக்குப் பழகிய மொழி, மக்கள் வாழும் இந்த இடத்தில்தான் அவள் இப்போது வாழ விரும்புவாள்.
ஆனால் பிற்காலத்தில் அவள் வாழ்க்கையின் பாதைமாறி மனது விசாலமடையும்போது அவள் தன் சொந்த குடும்பத்துடன் தொடர்பு வைத்துக்கொண்டு அவர்களில் ஒருவளாக வாழவிரும்பலாம். எனவே அவள் தன் சொந்த பெற்றோரிடம் சேர்ந்து வாழ்வதே சட்டப்படிசரியானது.
1942 ஆம்ஆண்டு அமீனாவுக்கும் மரியாவின் தாய் அடிலைனுக்கும் என்ன பேச்சுவார்த்தை நடந்தது, எந்தச் சூழலில் மரியா அமீனாவிடம் ஒப்படைக்கப்பட்டாள் என்பது குறித்து அவள் தந்தைக்கு எதுவும் தெரியாது. மேலும் அவள் தந்தை தன் கடமையிலிருந்து தவறவில்லை. எனவே மரியாவை ஹெர்டோக்கிடம் ஒப்படைக்கவேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
காவலர்கள் மரியாவை அழைத்துச்செல்லமுற்பட்டபோது அவள் அழுதுபுரண்டு அமீனாவையும் மன்சூரையும் பிரிய மறுத்தாள். அமீனா இந்தப் பிரிவைத் தாங்கமுடியாமல் மயங்கி விழுந்தாள்.அருகிலிருந்த மருத்துவர் அமீனாவுக்கு சிகிச்சைக் கொடுத்துக் கொண்டிருந்தபோது மன்சூர் மரியாவின் கையைப் பிடித்துக்கொண்டு சிறிது காலம் பொறுத்துக்கொண்டிரு, நாம் சட்டப்படிப் போராடி வெற்றிபெறுவோம் என்று ஆறுதல் கூறினான்.
இந்த வார்த்தைகளில் சமாதானமடைந்து வண்டியில் ஏறினாள்.சுற்றிலும் இருந்தநூற்றுக்கணக்கான மக்களைக் காவலர்கள் கஷ்டப்பட்டு அடக்கினர்.
அவள்தாய் அடிலைன் வேறு ஒரு இடத்தில் தங்கிக் கொண்டு தினந்தோறும் மரியாவை வந்து சந்தித்துக் கொண்டிருந்தாள். பிறகு சிறிது நாட்களில் அடிலைனும் மரியாவுடன் தங்க ஆரம்பித்தாள்.இந்த ஏற்பாடு வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது சற்று வசதியானது, பாதுகாப்பானது என்று டச்சுத்தூதரகம் நினைத்தது. ஆனால் இந்த சிறுபொறியாகக் கிளம்பிய முரண்பாடுதான் சிங்கப்பூரின் வரலாற்றில் இன்றும் பேசப்படுகின்ற மிகப்பெரிய இனக்கலவரத்தை உருவாக்கியது.
சிங்கப்பூரில் இருக்கும் ஊடகங்கள் இந்தக் கன்யாஸ்திரிகள் இருக்கும் மடத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் நுழைந்து தகவல்கள் திரட்டத் தொடங்கின. நடந்ததவற்றில் மிகப்பெரிய தவறு இது! டிசம்பர் மாதம் 5 ஆம்தேதி சிங்கப்பூர் ஸ்டாண்டர்ட் என்ற பத்திரிகை தன் முதல்பக்கத்தில் மரியா கன்யாஸ்திரிகளின் தலைவியின் கைகளைப் பிடித்துக்கொண்டு நிற்பதைப்போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டது.
இரண்டாம் பக்கத்தில் கன்னிமேரியின் சிலையின் கீழ் மரியா முழங்காலிட்டுப் பிரார்த்தனை செய்வது போன்ற புகைப்படங்களை வெளியிட்டது. இதற்கு பதில் கொடுப்பது போல் உட்டு சன்மெலாயு என்று பத்திரிகை கன்யாஸ்திரிகளின் மத்தியில் அழுதுகொண்டிருக்கும் மரியாவின் புகைப்படம், கன்யாஸ்திரிகள் மரியாவை சமாதானப்படுத்துவது போன்ற புகைப்படம் இவற்றை வெளியிட்டு மரியாவின் தனிமை மற்றும் வெறுமை வாழ்க்கை என்ற கட்டுரையைப் பிரசுரித்தது. கன்யாஸ்திரிகள் மடத்தில் மரியா எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பதை விளக்கியது.
இந்தப் புகைப்படங்கள் மரியா என்ன மனநிலையில் இருக்கிறாள் என்பதை வெளிக்காட்டியதுடன் அவளைச் சுற்றி எப்போதும் கிறிஸ்துவ மதச்சின்னங்களும், நம்பிக்கைகளும், கிறிஸ்தவ கன்னிமார்களும் இருந்தது தங்களில் ஒருத்தியாக மரியாவை நினைத்திருந்த முஸ்லிம்களுக்கு ஆத்திரத்தைக் கிளப்பியது. வெளிப்படையாக முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கு மான மதச் சண்டை என்று செய்திகள் வெளி வரத்தொடங்கின.
டிசம்பர் மாதம் 6 ஆம்தேதி நாதிரா செயல் குழு என்ற ஒரு குழுவை உருவாக்கி அதன் தலைவராக ரங்கூனைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல் சீர்திருத்தவாதியான கரீம் கனி நியமிக்கப்பட்டார். இந்த அமைப்பு தன் கருத்துகளை சற்றுத் தீவிரமாகச் செயல்படுத்தும் அமைப்பு. திடான் (THE DAWN) என்ற செய்திப்பத்திரிகையை அனைவருக்கும் இலவசமாக வழங்கியது.
நாடெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் தங்கள் ஆதரவை நாதிராவுக்குத் தரவேண்டும் என்ற கருத்தைப் பரப்பியது. டிசம்பர் 8 ஆம்தேதி சுல்தான் பள்ளிவாசலில் கரீம் கனி பொதுமேடையில் பேசியபோது இந்தவழக்கின் முடிவு நமக்குச் சாதகமாக முடியவில்லை என்றால் இறுதிக்கட்ட நடவடிக்கையாக ஜிஹாத் என்ற புனிதப்போரில் ஈடுபடத் தயாராகவேண்டும் என்றுபேசினார்.
இந்த மேடைப்பேச்சை வரவிருக்கும் ஒரு பெரிய கலவரத்துக்கான அறிகுறி என்று குற்ற கண்காணிப்புப் பிரிவு அரசாங்கச் செயலாளருக்கு ஒரு அறிக்கை அனுப்பியது. இந்த அறி்க்கையில் மரியாவைத் தொடர்ந்து தாம் சன்சாலையில் இருக்கும் கன்யாஸ்திரிகள் மடத்தில் தங்கவைத்தால் பிரச்சினைகள் அதிகரிக்கும். எனவே மரியாவை யார்க் ஹில் பெண்கள் காப்பகத்தில் தங்கவைத்தால் முஸ்லிம்களின் கோபத்திலிருந்தும் அதிருப்தியிலிருந்தும் சற்று சமாதான வடைவார்கள் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
ஆனால் செயலாளர் இந்த பரிந்துரைகளை ஏற்கமறுத்தார். இஸ்லாமிய மதத்தலைவர்கள், மற்றும் அவர்கள் பிரதிநிதிகளிடமிருந்து எந்தவித மறுப்புக் கடிதம் இதுவரைத் தனக்குக் கிடைக்கவில்லை .நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மரியாவை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு தனக்கு அனுமதி கிடையாது என்றும் கூறினார்.இது சற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.மரியாவின் தாய் அனுமதி பெற்று அவளைப் பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்திருக்கலாம்.
நிலைமை இவ்வளவு தீவிரமடைந்த பிறகு மரியாவை கன்யாஸ்திரிகள் மடத்திலிருந்து வெளியே அனுப்புவது அவள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என்று நினைத்து தற்காலிகமாக ஒரு சாக்குபோக்குச் சொல்லி பிரச்சினைகளை சற்றுத் தள்ளிப்போடலாம் என்று நினைத்தார். ஆனால் நடந்தது என்ன? நாதிராவின் கதை என்ன ஆயிற்று? யார் இந்த நாதிரா?
தொடரும்…