வில்லியம் ஃபர்குவார் மலாக்காவில் தங்கியிருந்த நாட்கள்தான் அவர் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாட்கள். இளமையான துடிப்பான வாலிபனாக பலவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் கிழக்கிந்தியக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். டச்சுக்காரர்கள் வசம் இருந்த மலாக்காவைக் கைப்பற்றி பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வசம் கொண்டு வருவதற்கான சண்டையில் கலந்து கொண்டு மலாக்காவை பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வந்தார் என்பதை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம்.
மலாக்காவின் இராணுவத் தலைமையும், ஆட்சியாளர் பொறுப்பையும் இவர் ஏற்றார். சுல்தான்களின் அரசாட்சியில் இருந்த மலாக்காவின் அமைப்பும், அதன் பிறகு ஐரோப்பிய தாக்கத்தினால் பழமையும் புதுமையும் கலந்த கலாச்சாரமும் அவரை ஒரு புதிய உலகத்திற்கு அழைத்துச் சென்றது. மலாய் மொழியைக் கற்றுத் தேர்ந்தார். மலாய் கலாச்சாரத்தில் ஒன்றினார். கிளமெண்ட் என்ற மலாய் பெண்ணை மணந்து கொண்டார்.
கிளமெண்ட் மலாக்காவில் வாழ்ந்த ஒரு பிரெஞ்சு அதிகாரிக்கும் அவரது மலாய் மனைவிக்கும் பிறந்த பெண்மணி. கிளெமெண்ட் மூலம் ஆறு குழந்தைகளுக்கு அப்பா ஆனார். தன்னைக் கிட்டத்தட்ட ஒரு ஆசிய நாட்டைச் சேர்ந்த அதிலும் குறிப்பாக மலாயாவைச் சேர்ந்த ஒரு மனிதனாக நினைத்து வாழ ஆரம்பித்தார். இதனால்தான் மலாக்கா மக்கள் இவரை ‘மலாக்காவின் ராஜா’ என்று அழைத்தனர்.
ஐரோப்பாவிலிருந்து வணிக நோக்கத்துடன் வந்த பல நாட்டு வணிக நிறுவனங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பலருக்கு ஆசிய நாடுகள் ஒரு கனவுப் பிரதேசமாக இருந்தது. ராஃபிள்ஸ் எப்படி உயிரியலில் ஆர்வம் மிக்க ஒரு உயிரியலாளராக வாழ்ந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். பார்க்கும் இடமெல்லாம் புதிய செடிகள், மரங்கள், பூச்சிகள், விலங்குகள் என்று மழைக்காடுகள் கொண்ட மலேயா, இந்தோனேசியா போன்ற நாடுகள் இவர்களின் உயிரியல் ஆர்வத்துக்குத் தீனி போடுவது போல் அமைந்தன.
ராஃபிள்ஸ் போல் வில்லியம் ஃபர்குவாரும் உயிரியலில் அதிக ஆர்வம் காட்டினார். தினந்தோறும் புதிய தாவரங்கள், விலங்குகள் என்று தேடி எடுத்து வரும்படி தன் பணியாளர்களுக்கு வேலை கொடுத்தார். அவற்றை ஆவணப்படுத்த சிறந்த சீன ஓவியர்களை அழைத்து அவற்றைப் படம் வரையச் செய்தார். வில்லியம் ஃபர்குவாரின் படச் சேகரிப்புகள் பல இன்றும் கிடைக்கின்றன. சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் சென்ற வருடம் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வில்லியம் ஃபர்குவாரின் உயிரியல் படங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
அரசாங்க அதிகாரிகள் நிரந்தரமாக ஒரே இடத்தில் தங்க விடாமல் அவர்களை ஊர் ஊராகச் சுற்றச் செய்யும் பழக்கம் கூட பிரிட்டிஷ்காரர்களால் தான் நமக்கு கிடைத்த பழக்கம்! 1818 ஆம் ஆண்டு மீண்டும் ஃபர்குவார் வாழ்வில் இட மாற்றம்! கிட்ட்த்தட்ட பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்த மலாக்காவை விட்டுப் பிரிய வேண்டிய சூழல்!! லண்டனில் போட்ட ஒப்பந்தப்படி மலாக்காவை மீண்டும் டச்சு அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயம்.
ஃபர்குவார் மீண்டும் தன் சொந்த நாடான ஸ்காட்லாந்து செல்வதற்கு பயண ஏற்பாடுகளைச் செய்ய முனைந்தார். ஆனால் அரசியல் சதுரங்கத்தில் இதைப் போன்ற சிறிய மனிதர்கள் பகடைச் சிப்பாய்களாக பயன்படுத்தப்படுவது அடிக்கடி நிகழும் ஒரு சாதாரண சம்பவமே! இத்தனைக் காலம் தென் கிழக்கு ஆசியப் பகுதிகளில் பணி செய்து கொண்டிருந்த ஒரு உண்மையான ஊழியனை இழக்க விரும்பாத ஆங்கிலேய அரசு பென்கூலனில் லெஃப்டினன்ட் ஜெனரலாக இருந்த ராஃபிள்ஸுக்கு உதவியாக இருந்து மலாக்காவைப் போன்ற ஒரு புதிய இடத்தைக் கண்டுபிடிக்கச் சொல்லி பணித்தது.
மலாக்கா இருந்த இடம் அருமையான இடம். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே அமைந்திருந்தது. அதைப் போல் ஒரு இடத்தைத் தேட வேண்டும். பென்கூலன், பினாங்கு இரண்டுமே துறைமுக நகரங்களாக இருந்தாலும் இந்தக் கடல் வழியில் இல்லாமல் தொலைவில் இருந்தது.
மலாக்காவிலிருந்து 200 மைல் தொலைவில் இருந்த சிங்கப்பூர் இவர்கள் இருவரின் கவனத்தைக் கவர்ந்தது. 1819ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் தேதி வில்லியம் ஃபர்குவாரும், ராஃபிள்ஸும் மாலை நான்கு மணி அளவில் சிங்கப்பூரை முதன் முதலில் பார்த்தனர். சிங்கப்பூர் ஆற்றின் முகத்துவாரத்தில் கப்பலை நிறுத்தி விட்டு பார்த்தனர்.
கடற்கரையை ஒட்டி அமைந்திருந்த மலாய் கிராமம், அதன் அமைதி, சிங்கப்பூர் ஆற்றை ஒட்டி நிறுத்தப்பட்டிருந்த சிறு படகுகள், பாய்மரப் படகுகள், தென்னை மரங்கள், வெயிலில் காய்வதற்காக வைத்திருந்த கருவாடு வாசனை, அந்தக் கிராமத்தின் காவல் அதிகாரி தெமங்காங் அப்துல் ரஹ்மான் குடியிருப்பின் பின்னால் யாரும் இதுவரை நுழையாத காடு!! மலாக்காவின் பரபரப்பான சூழலில் வாழ்ந்து பழக்கப்பட்ட ஃபர்குவாருக்கு இந்தப் புதிய சூழல் மிகவும் பிடித்திருந்தது.
மறு நாள் காலை ஃபர்குவாரும் ராஃபிள்ஸும் ஒரே ஒரு சிப்பாயுடன் கரைக்கு வந்து இறங்கினார்கள். தாங்கள் வந்தது நல்லெண்ண நோக்கத்துடன் என்பதைக் காட்டுவதற்காக ஒரே ஒரு சிப்பாய். அவன் கையில் நீள் துப்பாக்கி. தெமங்கங் முகத்தில் புன்னகையுடனும், கையில் ரம்புத்தான் போன்ற பழங்களைக் கொண்ட மரத்தட்டுடன் இவர்களை வரவேற்றார்.
தாங்கள் சிங்கப்பூர் வந்த நோக்கத்தை மலாய் மொழியில் சொல்லி அதனால் தெமங்கோங் அப்துல் ரஹ்மானும், ஜோஹோர் சுல்தான் ஹுசேன் ஷா இருவருக்கும் கிடைக்கும் ஆதாயத்தை விளக்கியதும் இருவரும் சம்மதித்தனர். அந்த ஒப்பந்தப்படி சிங்கப்பூரில் ஒரு வணிக அலுவலகம் அமைப்பதற்கு மட்டும் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஃபிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி எழுதப்பட்ட உடன்படிக்கை அடுத்த ஐந்தாண்டுகளில் மாற்றி எழுதப்பட்டு சிங்கப்பூர் ஒரு பிரிட்டிஷ் காலனி ஆக்கப்பட்டு விடும் என்பதை அப்போது யாரும் அறிந்திருக்க முடியாது. பெரிய விருந்தோடு பல பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. அவற்றில் முக்கியமான பரிசு துப்பாக்கி, கையெறி குண்டுகள் போன்ற ஆயுதங்கள் மற்றும் ஓபியம்!! இது நடந்த மறு நாளே வில்லியம் ஃபர்குவாரை சிங்கப்பூரின் முதல் அரசாங்கப் பிரதிநிதியாக ராஃபிள்ஸ் நியமித்தார். தான் வடிவமைத்த படி நகரத்தை ஃபர்குவார் உருவாக்குவார் என்ற நம்பிக்கையில் பென்கூலனுக்குக் கிளம்பினார்.
ஆனால் அப்படி செய்ய முடியாதபடி ஃபர்குவாருக்கு என்ன தடைகள் இருந்தன என்பதைச் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். சீனாவிலிருந்து பட்டுத்துணிகளையும், பீங்கான் பொருள்களையும் கொண்டு வரும் கப்பல்கள், பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து சணல், சாயங்கள், இந்தியாவிலிருந்து முக்கியமாக இண்டிகோ டை என்று அழைக்கப்பட்ட இந்தியச் சாயம், பருத்தி துணிகள், இந்தோனேசியாவிலிருந்து அரிசி மற்றும் நறுமணப் பொருள்கள், அரேபியாவிலிருந்து கம்பளங்கள் என்று பலவிதப் பொருள்களால் சிங்கப்பூர் துறைமுகம் நிரம்பி வழிந்தது.
யாரும் உள்ளே நுழைய முடியாத அடர்ந்த காட்டுப் பகுதிகளைச் சீரமைத்து மரத்தால் வீடு கட்டிக் கொண்டு மக்கள் சிங்கப்பூரில் நிரந்தரமாகத் தங்குவதற்கு அனுமதி தந்தார். கூரை வேய்ந்த வீடுகள், வராந்தாக்களோடு கூடிய கூரை வீடுகள் பல கட்டப்பட்டன. ஹை ஸ்ட்ரீட் என்பது இன்றும் சிங்கப்பூரில் நகர வர்த்தக மையத்தில் உள்ள முக்கியமான சாலையாகும். அங்கே தான் தங்குவதற்காக மாளிகை ஒன்றைக் கட்டிக் கொண்டார்.
சீன மக்கள் தென்னை, காம்பியர் செடி, அன்னாசிப் பழங்கள், மிளகு, ஜாதிக்காய் போன்றவற்றைப் பயிரிட்டு வளர்க்க அனுமதி தந்தார். நகரத்தைப் பல வழிகளில் விரிவடையச் செய்ய நினைத்தபோது அதற்குத் தடையாக இருந்தது ராஃபிள்ஸின் நகரத் திட்டம்! அதைவிடப் பெரிய தடை நகரமெங்கிலும் நிறைந்திருந்த எலிக் கூட்டம். பெரிய அளவிலான பெருச்சாளிகள் தங்களைத் தாக்க வந்த பூனைகளை விரட்டி விட்டு வெற்றி வீரர்களாக வலம் வந்தன.
இதை எப்படி ஒழித்துக் கட்டலாம் என்று யோசித்த போது ஒரு எலியைப் பிடிப்பவருக்கு ஒரு வெள்ளி பரிசு என்று அறிவித்தார். கிட்டத்தட்ட ஒரு மாதம் நடந்த எலி வேட்டையில் அத்தனை எலிகளும் அழிக்கப்பட்டு விட்டன. அவர் மிகச் சிறந்த நிர்வாகி என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த எலி வேட்டை இன்றும் பேசப்படுகிறது.
ராஃபிள்ஸ் நகரம் வளர்ந்த விதம் தன் திட்டம் போல் இல்லை என்பதில் மிக வருத்தமடைந்தார். மேலும் தான் வகுத்த சட்டங்களைப் பின்பற்றாமல் வருமானத்திற்காக சூதாட்ட விடுதிகள், போதை மருந்து புழக்கம் அதிகரித்தல், ஓபியம் போன்ற போதை மருந்துகளை வெளிப்படையாக ஏலத்தில் எடுத்து விற்பதற்கு அனுமதி தந்தது, அடிமைகளாக மனிதர்கள் விற்கப்படுவது போன்றவை பிரிட்டிஷ் அரசாங்கத்தையே அவமானப்படுத்தும் செயல் என எண்ணினார்.
இவை ஃராபிள்ஸ் அனைத்தையும் ராஃபிள்ஸ் மாற்றினார். ஆனால் இவற்றை ஏன் தான் செய்தோம் என்று வில்லியம் ஃபர்குவார் தன்னை விட வயதிலும் அனுபவத்திலும் குறைந்த ராஃபிள்ஸிடம் சொல்லவில்லை. வருமானம் எதுவும் இல்லாமல் எப்படி நகரத்தை நிர்வகிப்பது? இந்த உண்மை புரியாமல் ராஃபிள்ஸுக்கும் ஃபர்குவாருக்கும் இடையே பிளவு ஏற்பட்டது. ஃபர்குவார் உள்ளூரில் இருக்கும் மலாய் மக்களைப் போல சரோங் என்று அழைக்கப்பட்ட லுங்கி அணிவார். இதைப் பார்த்து விட்டு கலாச்சாரம் இல்லாத ஆங்கிலேயர் என்று இவரை ராஃபிள்ஸ் கூறினார்.
1823 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வில்லியம் ஃபர்குவாரை சிங்கப்பூரின் நிர்வாகப் பொறுப்பிலிருந்து பதவி விலக்கினார். பின்னர் மே மாத இறுதியில் இராணுவப் பொறுப்பிலிருந்தும் விலக்கப்பட்டார்.
ஆனால் இவை எதுவும் உள்ளூர் மக்கள் ஃபர்குவார் மேல் வைத்திருந்த அன்பையும் மதிப்பையும் மாற்றி விடவில்லை. அவருக்குப் பிரியாவிடை கொடுத்தபோது நடந்தது?????
தொடரும்…