Home » அதிசயம் ஆனால் உண்மை » தொடர் கதை » ஒரு நகரத்தின் கதை – 14
ஒரு நகரத்தின் கதை – 14

ஒரு நகரத்தின் கதை – 14

சிங்கப்பூர் 1819ஆம் ஆண்டிலிருந்து ஒரு முக்கியமான வணிக மையமாகச் செயல்படத் தொடங்கியது. இன்று சிங்கப்பூர் நகரமாக உருவாகி கிட்டத்தட்ட நூற்றுத் தொண்ணூறு ஆண்டுகள் கடந்து விட்டன. இது ஒரு கனவு நகரமாக ராஃபிள்ஸுக்கு இருந்தது என்பதைக் கடந்த அத்தியாயங்களில் பார்த்தோம். இதே கனவை ராபிள்ஸுடன் பகிர்ந்து கொண்ட மற்றொருவர் வில்லியம் ஃபர்குவார் ஆவார்.

1774 ஆம் ஸ்காட்லாண்டில் பிறந்தவர். 1791 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி பதினேழு வயது இளைஞனாக மெட்ராஸ் வந்து சேர்ந்தார். மெட்ராஸ் எஞ்சினியர்ஸ் அலுவலகத்தில் பயிற்சி பெறும் துடிப்பான இளைஞனாக வேலைக்குச் சேர்ந்தார். அடிமட்ட பயிற்சியாளராகச் சேர்ந்து படிப்படியாக முன்னேறினார். இரண்டே வருடங்களில் 1793 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி மெட்ராஸ் எஞ்சினியர்ஸ் நிறுவனத்தில் லெஃப்டினன்ட் ஆக பதவி உயர்வு பெற்றார்.

மலாக்காவை டச்சு அரசாங்கத்திடமிருந்து போர் செய்து கைப்பற்ற இங்கிலாந்து திட்டமிட்டது. மெட்ராஸ் எஞ்சினியர்ஸ் நிறுவனத்தில் அப்போது தலைமை நிர்வாகியாக ஃபர்குவார் இருந்தார். டச்சு நாட்டிடமிருந்து மலாக்காவைக் கைப்பற்றும் அந்த துணிகரமானச் செயலுக்கு உறுதுணையாக இருந்தார். 1795 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி மலாக்கா இங்கிலாந்து அரசுக்குக் கீழ் வந்தது. வில்லியம் ஃபர்குவார் 1803 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி மலாக்காவில் அரசாங்கப் பிரதிநிதியாக பதவி உயர்வைப் பெற்றார்.

மீண்டும் மலாக்கா 1818 ஆம் ஆண்டு டச்சு அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் வரை வில்லியம் ஃபர்குவார் மலாக்காவின் ராஜா என்று அறியப்பட்டார். இராணுவம் மற்றும் நகர நிர்வாகம் இந்த இரண்டிலும் தலைமை நிர்வாகியாக பொறுப்பு எடுத்துக் கொண்டார். 1818 ஆம் ஆண்டு வரை மலாக்காவில் அரசாங்கப் பிரதிநிதியாக மட்டுமில்லாமல் படைத் தளபதியாகவும் பணியாற்றினார். மலாய் மொழியை சரளமாகப் பேசத் தெரிந்தவர். மலாக்காவைச் சேர்ந்தப் பெண்ணான நொனியா கிளமெண்ட் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

அவருக்கு அவர் மூலம் ஆறு குழந்தைகள் பிறந்தன. அவர் வெளியில் உலாவச் செல்லும் போதும் பிற இடங்களுக்கு அலுவல் காரணமாகச் செல்லும் போதும் மலாய் மக்களிடம் சகஜமாகப் பேசிப் பழகுவார். அவர் இயல்பாக அவர்கள் மொழியில் உரையாடினார். மேலும் அவர்கள் நாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டிருந்தார். இதனால் மலாய் மக்கள் அவரை மலாக்காவின் ராஜா என்று அழைத்தனர். பின்னாளில் சிங்கப்பூர் உருவாகும் போது இந்தப் பேரும் புகழும் அவருக்குப் பெரிய உதவியாக இருந்தது. இவர் மலாக்காவை நிர்வாகம் செய்த போது இங்கிலாந்து ஜாவாவின் மீது படையெடுத்தது.

கல்கத்தாவின் கவர்னர் ஜெனரல் லார்ட் மிண்டோவின் உத்தரவின் படி ராஃபிள்ஸ் தலைமையில் நடந்த படையெடுப்பின் போது வில்லியம் ஃபர்குவாரின் பங்களிப்பும் இருந்தது. மலாக்காவைக் கைப்பற்றியதும் இங்கிலாந்து அரசாங்கம் டச்சு அரசாங்கம் அமைத்திருந்த கோட்டைகள், கட்டடங்கள் அனைத்தையும் இடித்து தரை மட்டமாக்க உத்தரவிட்டது. ஆனால் வில்லியம் ஃபர்குவார் கோட்டையை மட்டும் வெடிமருந்து வைத்துத் தகர்த்தார். மற்றக் கட்டடங்களைச் சேதப்படுத்தாமல் பயன்படுத்திக் கொண்டார். இன்றும் மலாக்காவில் பல டச்சு அரசாங்கக் கட்டடங்கள் இருப்பதற்குக் காரணம் வில்லியம் ஃபர்குவார்.

மலாயாவில் நீண்ட நாட்கள் இருந்த அனுபவத்தாலும், உள்ளூர் அரசியல் தெரிந்தவராக இருந்ததாலும் ராஃபிள்ஸ் மலாக்காவிற்கு நிகரான மற்றொரு துறைமுகத்தைத் தேடத் தொடங்கிய போது வில்லியம் ஃபர்குவாரும் அவருடன் இணைந்து கொண்டார். சிங்கப்பூரைத் தேர்ந்தெடுத்ததும் உள்ளூர்த் தலைவனான தெமங்காங் அப்துல் ரஹ்மானிடம் பேசி 1819 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி தற்காலிக குத்தகைக்கு எடுப்பதற்கு உதவி செய்தார். பின்னர் அந்த தற்காலிகப் பத்திரத்தை முறையாக ஜொகூர் சுல்தான் மொஹமத்ஷா மூலம் பதிவு செய்தார். இதன் மூலம் சிங்கப்பூரில் துறைமுகம் அமைத்து வாணிகம் செய்யும் உரிமை பெறப்பட்டது.

1819 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி 6 ஆம் தேதி இந்தப் பத்திரப் பதிவு நடந்ததும், ஃபிப்ரவரி 7ஆம் தேதி ராஃபிள்ஸ் வில்லியம் ஃபர்குவாரை சிங்கப்பூரின் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்து அரசாங்கப் பிரதி நிதியாக ஆக்கினார். ராஃபிள்ஸ் சிங்கப்பூரில் இல்லாத காலங்களில் சிங்கப்பூரின் நிர்வாகப் பொறுப்பு மட்டுமல்லாது படைத் தளபதியாகவும் பதவி ஏற்றார்.

இந்தப் பதவியும் பொறுப்பும் ராஃபிள்ஸ் சிங்கப்பூரில் இல்லாத காலங்களில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் தொடர்ந்தன. 1819 ஆம் ஆண்டிலிருந்து 1823ஆம் ஆண்டு வரை நீடித்தது. வெறும் திறப்பு விழா நடத்தி விட்டு ராஃபிள்ஸ் பென்கூலனில் தன் வேலையைத் தொடரச் சென்று விட்டார்.

சிங்கப்பூர் ஒரு துறைமுக நகரமாக உருமாறும் கால கட்டத்தில் சிங்கப்பூரில் இருந்து அதை திட்டமிட்டு வெற்றிகரமாக நடத்தியவர் வில்லியம் ஃபர்குவார். எப்படியாவது சிங்கப்பூரை ஒரு பரபரப்பு மிகுந்த நகரமாக மாற்றி விட வேண்டும் என்ற துடிப்பில் ஃபர்குவார் ராஃபிள்ஸ் அமைத்துக் கொடுத்த நகரத் திட்டங்களைப் பின்பற்றாமல் தன் போக்கில் பல முடிவுகள் எடுத்து செயல் பட்டுக் கொண்டிருந்தார்.

மேலும் ராஃபிள்ஸூக்கு உடன்பாடில்லாத பல செயல்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு கொடுத்தார். ராஃபிள்ஸ் நான்கு ஆண்டுகள் கழித்து திரும்பி வந்து சிங்கப்பூர் வந்து பார்த்த போது அவருக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் மறுபக்கம் சற்று ஏமாற்றமாகவும் இருந்தது என்பதைக் கடந்த அத்தியாயங்களில் பார்த்தோம். இதற்கு முக்கியக் காரணம் வில்லியம் ஃபர்குவார்.

ராஃபிள்ஸின் கனவுக் குழந்தையைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தச் செவிலித் தாயாக வில்லியம் ஃபர்குவார் இருந்தார். ஆனால் சிங்கப்பூர் குழந்தையின் வளர்ச்சி தான் நினைத்தது போல் இல்லை என்பதை உணர்ந்த ராஃபிள்ஸ் மீண்டும் பல நடவடிக்கைகள் எடுத்தார். இந்தப் போராட்டத்தில் ஃபர்குவார் தூக்கி எறியப் பட்டார்.

ராஃபிள்ஸ் வடிவமைத்த நகர வரைபடத்தில் அரசாங்கக் கட்டடங்களுக்கு சிங்கப்பூர் ஆற்றின் வட கிழக்குப் பகுதியில் ஒதுக்கப்பட்ட இடங்களை ஃபர்குவார் வணிகர்கள் தங்கள் கட்டடங்கள் கட்டிக் கொள்ள அனுமதி தந்தார். வணிகர்களுக்கு ஒதுக்கப்பட்ட பீச் ரோட் பக்கம் இருந்த இடம் கடல் அரிப்புக்கு ஆளாகியிருந்தது.

எனவே இன்னும் சற்று வசதியாக இருந்த இடத்தை வணிகர்களுக்குக் குத்தகைக்குக் கொடுத்தார். உலகமெங்கும் இருக்கும் வர்த்தகர்கள் சிங்கப்பூரை மையமாகக் கொண்டு செயல் பட வேண்டும் என்று நினைத்தார். எனவே வியாபாரம் செய்ய வந்த வணிகர்களிடையே சிங்கப்பூரை எந்த நிபந்தனைகளும் அற்ற துறைமுகம் என்று அறிவித்தார்.

வணிகர்கள், இடைத் தரகர்கள், கூலியாட்கள், உணவு விற்பனை செய்ய மலாக்காவிலிருந்து வரும் சிறு வணிகர்கள் என்று பலதரப்பட்ட மக்கள் வந்து செல்லும் இடமாக சிங்கப்பூர் மாறியது இவர் செய்த பெரும் முயற்சியால் தான். கிட்டத்தட்ட 300 பேர் மட்டுமே இருந்த அமைதியான சிங்கப்பூர் ஆற்றங்கரையிலும் சிங்கப்பூர் கடற்கரையிலும் நான்கே ஆண்டுகளில் 6,000 மக்களுக்கு மேல் இருந்தனர். இதற்கு வில்லியம் ஃபர்குவாரின் இலகுவான சட்டதிட்டங்கள் முக்கிய காரணமாக இருந்தன. ஆனால் இவை சட்டத்துக்கும் மனிதாபிமானத்திற்கும் எதிராக இருந்தன என்று ராஃபிள்ஸ் நினைத்தார். அது என்ன? ஒரு குழந்தைக்கு இரு தாய் இருந்தால் என்ன நடக்கும்?

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top