வில்லியம் ஃபர்குவார் சிங்கப்பூர் ஆற்றின் வடகிழக்குப் பகுதி, சதுப்பு நிலமாக இருந்த பகுதியை சுத்தம் செய்து பெரிய கடைத்தெருவாக மாற்றினார். 1820 ஆம் ஆண்டு, சிங்கப்பூர் உருவாக்கப்பட்ட மறு ஆண்டே குடியேறிகளின் பாதுகாப்பிற்காக முறையான போலீஸ் படையை உருவாக்கினார். மலாக்காவில் இருந்தபோது மலாய் மக்களின் நன் மதிப்பைப் பெற்று ‘மலாக்காவின் ராஜா’ என்று அனைவரும் அழைத்தனர்.
அதனால் மலாக்காவிலிருந்த பல மக்கள் சிங்கப்பூருக்குக் குடி பெயர்ந்தனர். வில்லியம் ஃபர்குவார் மேல் இருந்த அன்பினாலும் மதிப்பினாலும் மலாக்காவிலிருந்து சிறு வணிகர்கள் தினந்தோறும் படகில் சிங்கப்பூருக்கு வந்து பழங்கள், காய்கறிகள், அன்றாடத் தேவைகளுக்கான பல பொருள்களை விற்கத் தொடங்கினர்.
இப்படி இவர்கள் செய்யாமல் விட்டிருந்தால் சிங்கப்பூரில் இருந்த மக்கள் அனைவரும் உணவு கிடைக்காமல் கஷ்டப்பட்டிருப்பார்கள். ஆனால் அப்போது மலாக்காவை டச்சு அரசாங்கம் ஆண்டு கொண்டிருந்த்து. டச்சுக்காரர்கள் மலாக்காவிலிருந்து இப்படி பல வணிகர்கள் படகுகளில் சென்று வியாபாரம் செய்வதை விரும்பவில்லை.
அவர்கள் விதித்த பல தடைகளையும், சட்டங்களையும் பொருட்படுத்தாது இப்படி ஒரு வாணிகம் தொடர்ந்து கொண்டிருந்தது. டச்சு அரசாங்கம் மக்கள் ஃபர்குவார் மேல் வைத்த மதிப்பையும் அன்பையும் பொருட்படுத்தாது அவரை சிங்கப்பூருக்குச் சென்று எப்படியாவது பிடித்துக் கொண்டு மலாக்கா கொண்டு வர வேண்டும் என்று திட்டம் தீட்டியது.
ஆனால் இதற்கெல்லாம் அச்சப்படாமல் தன் வேலைகளைத் தொடர்ந்தார். அவரிடம் 120 சிப்பாய்கள் மட்டுமே இருந்தனர். அவர் பாதுகாப்பாக இருக்க வலுவான கோட்டை இல்லை. ஆனால் அவர் தன்னிடம் இருக்கும் குறைந்த அளவு பாதுகாப்பைக் கொண்டு தைரியமாக சிங்கப்பூரை பெரிய வணிக மையமாக மாற்ற பெரும் முயற்சிகள் செய்தார்.
சிங்கப்பூர் ஒரு பெரிய வணிக மையமாகத் தொடர்ந்து செயல்பட வேண்டுமென்றால் அதற்கு சிங்கப்பூருக்கு வந்து தங்கும் வணிகர்களுக்கும், கனவான்களுக்கும், அவர்களுக்கு வேலை செய்ய வந்து தங்கும் பல தரப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கும் அன்றாடம் தேவைப்படும் உணவுப்பொருள்கள், உடைகள், தங்குமிடங்கள், பாதுகாப்பு, முறையான போக்குவரத்து வசதிகள் என்று பல தேவைகள் இருந்தன.
ராஃபிள்ஸ் தரை இறங்கிய சிங்கப்பூரில் முன்னூறு பேரே வசித்து வந்தனர். அவர்களும் சிங்கப்பூர் ஆற்றங்கரையை ஒட்டிய பகுதியில் மீனவர்களாக வாழ்க்கையை நடத்தி வந்தார்கள். ஆனால் ஒரு நகரமாக அந்த சிறு மீன்பிடி கிராமத்தை மாற்றி அமைக்க வேண்டுமென்றால் முறையான திட்டமிடல் வேண்டும். அந்தத் திட்டங்களைச் செயல்படுத்த நிறையப் பொருள் உதவி வேண்டும்.
ஆங்கில அரசாங்கம் சிங்கப்பூர் உருவாவதற்குத் தேவையான பொருள் உதவி செய்யத் தயாராக இல்லை. மிகக் குறைந்த நிதி உதவி கொடுத்தது. அவர்கள் கொடுத்த பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு சிங்கப்பூரை உருவாக்க முடியாது என்பதை உணர்ந்த வில்லியம் ஃபர்குவார் எப்படி வருமானத்தைப் பெருக்க முடியும் என்று யோசித்தார்.
பென்கூலனில் இருந்த போது அரசாங்க அதிகாரிகளுக்கும், அரசாங்க ஊழியர்களுக்கும் ஒரு மாத சம்பளத்துக்காக செலவழித்த பணத்தை விடக் குறைவாக கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குச் செலவழித்தார். தனக்கென்று இரண்டு எழுத்தர்களைத் தன் சொந்த செலவில் வேலையில் சேர்த்துக் கொண்டார். சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு இவர் எடுத்துக் கொண்ட மாபெரும் முயற்சியால் 1821 ஆம் ஆண்டு சிங்கப்பூரின் மக்கள் தொகை 5,000 ஆக உயர்ந்தது. ராஃபிள்ஸ் 1921 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வருகை தந்தபோது நிறைய மக்களுடன், சிங்கப்பூர் துறைமுகம் பரபரப்புடனும், உயிர்த்துடிப்புடனும் இருந்ததைக் கண்டு மகிழ்ந்தார் என்பதை சில வாரங்களுக்கு முன்னால் படித்தோம்.
மக்கள் தொகை வளர்ந்தாலும் வில்லியம் ஃபர்குவாருக்கு வரி விதிக்க அதிகாரம் வழங்கப்படவில்லை. சிங்கப்பூரில் இருக்கும் நிலங்களையும் விற்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. வளர்ந்து வரும் நகரத்தின் தேவைக்கு ஏற்ப வசதிகள் செய்யப்பட வேண்டும். ஆனால் அதற்குத் தேவையான நிதி கிடைக்க வாய்ப்பு இல்லை.
சிங்கப்பூர் துறைமுகத்திற்கு வருகின்ற வணிகர்களுக்கு துறைமுகத்தை விட்டு சிங்கப்பூர் உள்ளே செல்வதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாக விதித்தார். இந்தப் பணத்தை துறைமுகத்தில் வேலை செய்யும் பணியாளர்களின் ஊதியத்திற்குச் செலவழித்தார். செலவுகளைச் சமாளிக்கும் விதமாக அடுத்ததாக அடாவடியாக ஒரு காரியம் செய்தார்.
போதைப் பொருளான ஓப்பியம், மற்றும் சாராயம் இவற்றை ஏல முறையில் விற்க அனுமதி தந்தார். சூதாடும் கிடங்குகளுக்கு முறையான உரிமம் வழங்கினார். ஆரம்ப கால வணிகர்கள் தங்கள் பொருள்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு கிடங்குகள் வேண்டும். எனவே அவற்றைக் கட்டுவதற்கும்,அதற்கான நிலங்களை வாங்குவதற்கும், குத்தகைக்கு எடுப்பதற்கு தற்காலிக நிதியுதவி வழங்கினார். இவை அனைத்தும் ராஃபிள்ஸின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படாமல் இவர் எடுத்த முடிவுகள்!!!
இப்படி சேர்ந்த நிதியை வைத்துக் கொண்டு பொதுப்பணித் துறையை உருவாக்கினார். பொதுப்பணித் துறையினரின் முதல் முக்கியப் பணி, சிங்கப்பூர் ஆற்றின் வடகிழக்குப் பகுதியைச் சுத்தம் செய்தது!!! சதுப்பு நிலமாக இருந்த இந்தப் பகுதி மிக விரைவில் வளர்ச்சி அடைந்து மிகப் பெரிய அங்காடித் தெருவாக மாறியது. 1820 ஆம் ஆண்டு, சிங்கப்பூர் உருவாக்கப்பட்ட மறு ஆண்டே குடியேறிகளின் பாதுகாப்பிற்காக முறையான போலீஸ் படையை உருவாக்கினார். ஒரு தலைமை அதிகாரி, ஒரு சிறை அதிகாரி ஒரு காவலர், எட்டு வேலையாள்கள் கொண்ட இந்தக் குழு சிங்கப்பூரின் பாதுகாப்புக்கு வேலை செய்தது.
இதைப் படிக்கும்போது நம்மையும் மீறி லேசாக புன்னகை எழுகிறது. ஆனால் ஒரு புதிய நாடோ அல்லது நகரமோ உருவாகும் போது அதன் முக்கியத் தேவைகளை சமாளிக்கவும், பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் முறையான காவல்துறை, அதற்கானச் சட்டங்கள் தேவை. இப்படி எந்த சட்ட திட்டங்களும் இல்லையென்றால் வருகின்ற புதிய வணிகர்களும், ஏற்கெனவே சிங்கப்பூர் மீது நம்பிக்கை வைத்து தன் வணிகத்தை தொடங்கி விட்ட மற்ற வணிகர்களுக்கும் ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருவதற்காக!!!
முதலில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் தொடங்கப்பட்ட காவல்துறை இன்று 10,000 பேருக்கு 240 காவலர்கள் இருக்கிறார்கள் என்று உயர்ந்திருக்கிறது. ஆனால் இந்த எண்ணிக்கை குற்றங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மாறிக் கொண்டிருக்கும். நியூயார்க், ஹாங்காங் போன்ற பெரு நகரங்களை விட இந்த விகிதாச்சாரம் குறைவுதான்! இன்று சிங்கப்பூர் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாகக் கருதப்பட்டு வருகின்றது.
தாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் முறையாக ராஃபிள்ஸிடம் சொல்லி விட்டு அனுமதி பெற்று செய்யவேண்டும் என்று ஃபர்குவார் நினைத்தாலும் அப்போது இருந்த தொலைத் தொடர்பு வசதிக் குறைவினால் மேற்கு ஜாவாவில் இருந்த ராஃபிள்ஸிடம் தொடர்பு கொள்வது மிகக் கடினமாக இருந்தது.
அவர் ராஃபிள்ஸுக்கு எழுதிய கடிதங்கள் மேற்கு ஜாவா போய்ச் சேர மூன்று மாதங்களுக்கு மேல் ஆனது. இந்நிலையில் ராஃபிள்ஸ் ஃபர்குவாரை மீண்டும் சந்தித்தபோது நாகரிகமில்லாமல் இருக்கும் ஆங்கிலேயர் என்று குறிப்பிட்டார். அதற்குக் காரணம்??
தொடரும்…