ஜான் கிராஃபோர்டுக்குப் பிறகு சிங்கப்பூர் நிர்வாக அமைப்பில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. சீனாவுடன் அதிக அளவில் வர்த்தகம் ஏற்படவும், கிழக்கிந்தியக் கம்பெனியின் வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் பல திட்டங்கள் தீட்டப்பட்டன. மலாக்கா, பினாங் இவற்றுடன் சிங்கப்பூரும் ஸ்ட்ரெயிட்ஸ் செட்டில்மென்ட் என்ற பெயரில் இணைந்தது. மூன்று நகரங்களுக்கும் பொதுவான ஒரு ஆளுனர், தனித்தனியே நகரத் தலைவர்கள் என நிர்வாக அமைப்பு மாற்றம் கண்டது.
1824 ஆம் ஆண்டு, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ராபர்ட் ஃபுல்லர்டான் (Robert Fullerton) பினாங் ஆளுனராகப் பணியாற்றினார். மூன்று நகரங்களும் இணைந்து ஒரு நிர்வாகத்தின் கீழ் வந்த பின் ஃபுல்லர்டான் சிங்கப்பூரின் ஆளுனர் ஆனார். ஆளுநராக இருந்தாலும் சிங்கப்பூர் நிர்வாகம் முழுதும் நகரத் தலைவர், அவருக்குக்கீழ் மூன்று துணைத் தலைவர்கள் எனப் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்தது.
இதனால் பல அதிகாரிகள், இவர்களுக்கு சம்பளம், அவர்களுக்கு உரிய வேலைப் பங்கீடு என பலவகைகளிலும் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு செலவு அதிகமாயிற்று. எனவே இந்த முறை நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு மாற்றம் கண்டது. ஸ்ட்ரெயிட்ஸ் செட்டில்மெண்ட் என்பது ஒரு நகரத் தலைமையில் ஒரு ஆளுனருடன் மாறியது.
பினாங்கைத் தலைமை அலுவலகமாகக் கொண்டு ஆளுனர் ஆட்சி. ஆனால் அவருக்கும் எந்தவித அதிகாரமும் வழங்கப்படவில்லை. கல்கத்தாவிலிருந்து முறையான அனுமதி பெற்ற பின்னரே அவர் எந்த முடிவையும் எடுக்க முடியும் என்று அதிகாரம் முழுவதும் கல்கத்தாவின் ஆளுனரிடம் இருந்தது.
இந்த மாற்றங்களினால் ஃபுல்லர்டான் நீதிமன்றங்களை மூடிவிட்டார். நீதிமன்றங்களில் நீதி வழங்கும் அதிகாரம் இல்லை என்பதால் நீதிமன்றங்களைக் கலைத்து விட்டதாகக் காரணம் கூறினார். ஆளுனர் என்பது வெறும் பெயரளவில்தான் இருந்தது, நிர்வாக அதிகாரம் தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்த இவர் சிங்கப்பூரை மேம்படுத்த பெரிய முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை.
மலேயாவின் உள்ளாட்சியில் கிழக்கிந்தியக் கம்பெனியின் குறுக்கீடுகள் எதுவும் இருக்காது என்று ஆங்கில டச்சு ஒப்பந்தப்படி எழுதிக் கொடுத்திருந்தாலும் மலேயாவின் வடக்கு எல்லைப் பகுதியில் சையாம்(இன்றைய தாய்லாந்து) நாட்டின் ஆதிக்கம் பரவியபோது ராபர்ட் ஃபுல்லர்டான் அதை தடுக்க முயற்சி எடுத்தார்.
ஃபுல்லர்டானுக்குப் பிறகு ஸ்ட்ரெயிட்ஸ் ஆளுனர்கள் இந்திய ஆளுனர்கள் என்ற பெயரிலேயே நிர்வாகப் பொறுப்புகளை எடுத்துக் கொண்டனர். இந்திய நிர்வாகச் சேவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர் அல்லது இந்திய இராணுவச் சேவையில் இருந்தவர்கள் ஆளுனராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்குப் புதிய பொறுப்பகளோ, நிர்வாக அதிகாரமோ கொடுக்கப்படவில்லை.
எனவே ஃபுல்லர்டானுக்குப் பிறகு சிங்கப்பூருக்கோ அல்லது ஸ்ட்ரெயிட்ஸ் செட்டில்மெண்ட் பகுதிகளுக்கோ ஆளுனராகப் பதவி ஏற்றவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் எந்தப் புதிய மாற்றங்களையும் கொண்டு வரவில்லை.
ராபர்ட் ஃபுல்லர்டானுக்குப் பிறகு ராபர்ட்சன் ஐபெட்சன் 1830 ஆம் ஆண்டு பதவி ஏற்றார். அவர் ஆளுனராக நிர்வாகம் செய்வதை விட சிங்கப்பூர், மலேயா பகுதிகளில் நிலங்கள் வாங்குவது அதிக லாபம் தரும் என்று நிலம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டினார்.
மூன்று வருடங்களுக்குப் பிறகு 1833 ஆம் ஆண்டு இங்கிலாந்து திரும்பினார். பிறகு இருபது ஆண்டுகள் கழித்து பினாங்கு திரும்பினார். ஜாதிக்காய் மரங்கள் பயிரிடப்பட்ட நிலங்களில் கோக்கோ பயிரிடத் தொடங்கினார். பதினைந்து ஆண்டுகள் பினாங்கில் இருந்த பின்னர் இங்கிலாந்து திரும்பினார். தனது 92ஆம் வயதில் மரணமடைந்தார்.
அடுத்த ஆளுனர் கென்னெத் முர்கிசன். 1833 ஆம் ஆண்டு பதவி ஏற்றார். பதவி ஏற்ற அன்றே அவருக்கு முன்னால் இருந்த ஆளுனர் ராபர்ட்சன் ஐபெட்சன் எந்தக் கப்பலில் இங்கிலாந்துக்குப் புறப்பட்டாரோ அதே கப்பலில் இவரும் கேப் காலனிக்கு விடுமுறைக்காகப் புறப்பட்டார். 1835 ஆம் ஆண்டு ஜுன் மாதம் திரும்பி வந்தார். பிறகு ஒரு வருடத்தில் பதவு ஓய்வு பெற்று இங்கிலாந்து திரும்பினார். இந்தக் காலகட்டத்தில் சிங்கப்பூரின் நகரத் தலைவராக இருந்த சாமுவேல் ஜியார்ஜ் போன்ஹாம் முழு நிர்வாகப் பொறுப்பையும் எடுத்துக் கொண்டார்.
போன்ஹாம் 1818 ஆம் ஆண்டு பென்கூலனில் கிழக்கிந்தியக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். பிறகு சிங்கப்பூரில் ராஃபிள்ஸ் ஃபர்குவாரை ஆளுனராக நியமித்தபோது இவரை துணை ஆளுனராக நியமித்தார். நிலங்களை விற்பதற்கு இவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. உரிமக் கட்டணம், வரி வசூலித்தல் போன்ற வேலைகள் இவருக்குத் தரப்பட்டன.
1833 ஆம் ஆண்டு முர்கீசன் ஆளுனராகப் பதவி ஏற்றுக் கொண்ட போது இவருக்கு நகரத் தலைவர் பதவி தரப்பட்டது. 1836 ஆம் ஆண்டு முர்கீசன் பதவி விலகியதும் போன்ஹாம் ஆளுனராக நியமிக்கப்பட்டார். 1836 ஆம் ஆண்டிலிருந்து 1843ஆம் ஆண்டு வரை போன்ஹாம் ஆளுனராகப் பதவி வகித்தார். போன்ஹாம் நகராட்சி அலுவலகத் தொடர்பான பிரச்சினைகளை இரவு உணவின் போது சம்பந்தப்பட்டவர்களோடு பேசித் தீர்த்து வைப்பார்.
இந்த அணுகுமுறையால் பொதுமக்கள் இவர் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தனர். எளிமையாகவும் கலகலப்பாகவும் அனைவரிடமும் பழகுவார். சிங்கப்பூரில் இருந்தபோது திருமணம் ஆகாத பிரம்மச்சாரியாக இருந்தார். பின்னர் ஹாங்காங்கில் ஆளுனராக பணியாற்றியபோது திருமணம் செய்து கொண்டார். சிங்கப்பூரில் இருந்து 1846 ஆம் ஆண்டு ஹாங்காங்கிற்கு ஆளுனராகச் சென்றார். ஹாங்காங்கிலும் மிகத் திறமை மிக்க ஆளுனராகச் செயலாற்றினார்.
தொடரும்…