ராஃபிள்ஸ் இறுதியாக பென்கூலனை விட்டு இங்கிலாந்து திரும்புவதற்கு ஃபேம்(FAME) என்ற கப்பலில் தன் பயணத்தைத் தொடங்கினார். ஆனால் கப்பல் கிளம்பி ஒரு நாளிலேயே கப்பலில் தீப்பற்றிக் கொண்டது. கப்பல் ஊழியர்களும், பயணிகளும் உயிர்காப்புப் படகுகளில் ஏறித் தப்பித்து மீண்டும் பென்கூலனுக்குத் திரும்பினார்கள்.
இப்படி தான் ஆவலுடன் எதிர்பார்த்தப் பயணம் தொடக்கத்திலேயே முடிந்து போனதில் ஓரளவு வருத்தம் அடைந்தாலும் அவரது மற்றொரு சோகம் அந்தக் கப்பலில் எரிந்து போன அவரது உயிரியல் சேகரிப்புகள். பல அரிதான தாவர வகைகள், விலங்கினங்கள், பறவைகள், மீன் வகைகள் போன்ற பல அந்தக் கப்பலில் எரிந்து போனது. உயிருடன் பிடிபட்ட டபீர் வகைப் பன்றி, அரிதான புலி வகை, காட்டுக் கோழிகள்(pheasants) போன்ற பலவும் அழிந்து போனது அவருக்கு உடல் வேதனைகளை விட அதிக வேதனை தந்தது.
இதுவே அவர் மீண்டும் எழுந்து கடுமையாக உழைக்க ஒரு தூண்டுகோலாக இருந்தது. ஆனால் சோஃபியாவுக்கு இதை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
“எங்கள் துரதிருஷ்டம் தொடர்கிறது”, என்று புலம்பினார். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு அடுத்தக் கப்பல் பென் கூலன் துறை முகத்தை அடைந்த போது ராஃபிள்ஸ் தன் மீண்டும் உயிரியல் சேகரிப்புகளுடன் கப்பல் ஏறினார்.
இங்கிலாந்தில் அவருக்கு மாபெரும் வரவேற்பு காத்திருந்தது. சிங்கப்பூர் என்ற புதிய நகரை உருவாக்கிய பிரமுகர் என்ற பெருமையுடன், கிழக்காசியாவைப் பற்றி நன்கு கற்றறிந்தவர் என்ற பெருமையும் இணைந்தது. ராயல் சொஸைட்டி என்ற மதிப்பு மிக்க கழகத்தில் இருக்கும் உறுப்பினர்களுடன் தன் நட்பைப் புதுப்பித்துக் கொண்டார். அவர்கள் உதவியுடன் லண்டனில் முதல் விலங்கியல் தோட்டத்தை உருவாக்கினார். அதில் முதல் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
லண்டனுக்கு அருகே ஒரு பண்ணையில் அவரும் சோஃபியாவும் அமைதியாக வாழத் தொடங்கினர். அப்போது தான் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் பாடுபட்டு உழைத்த கிழக்கிந்தியக் கம்பெனி அதிலும் பத்தொன்பது வருடங்கள் கிழக்காசியப் பகுதிகளில் பல இன்னல்களுக்கிடையே கழித்தவர், தனக்கு எத்தகைய கௌரவத்தை வழங்கவிருக்கிறது என்பதை அறிய ஆவலுடன் காத்திருந்தார்.
அவருக்குக் காத்திருந்தது…….. அவரது சேவையைப் பாராட்டி மிகக் குறைவான வார்த்தைகளில் ஒரு கடிதம் அத்துடன் இருபத்திரெண்டாயிரம் பவுண்ட் பணத்தை உடனே திருப்பித் தரும்படி ஒரு கடிதம். அந்தப்பணம் ராஃபிள்ஸின் செலவுகளுக்காக கம்பெனி கொடுத்த தொகையும் மற்றும் இந்திய கவர்னர் ஜெனரல் முன் பணமாகக் கொடுத்த தொகையும் ஆகும்.
சிங்கப்பூரை நிர்மாணிக்க அவர் செலவழித்த பணத்தையும் திருப்பித் தரும் படி கிழக்கிந்தியக் கம்பெனி அவரை நிர்ப்பந்தப்படுத்தியது. இப்படிப்பட்டச் சூழலில் அவர் ஜாவாவில் அவர் சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதியை அங்கு இருந்த வட்டிக்குப் பணம் தரும் வர்த்தகரை நம்பி அவர் போட்ட முதல் அனைத்தும் திவாலாகி விட்டது என்ற செய்தி வந்தது. ஆனால் அவர் இந்த இரண்டு செய்திகளையுமே தனக்கு ஒன்றும் நஷ்டம் ஏற்படாதது போல் எடுத்துக் கொண்டார்.
வாழ்க்கையிலும் தொழிலிலும் பல தடைகளையும் இன்னல்களையும் அதே சமயத்தில் மாபெரும் வெற்றிகளையும் மாறி மாறி எதிர்க்கொண்டவர். அதைப் போலவே இந்த இழப்புகளையும் ஏற்றுக் கொண்டார். அவரைப் பொருத்தவரை பணம் உண்மையான நிலையானப் பொருளாய் இருந்ததில்லை. அவர் நிர்மாணித்த சிங்கப்பூர் மட்டுமே அவர் வாழ்க்கையின் உண்மையான லட்சியமாக இருந்தது.
வருங்காலத்தைப் பற்றி பல கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் திட்டங்கள் தீட்டினார். தனது நெருங்கிய நண்பரான வில்லியம் வில்பர்ஃபோர்ஸுக்கு உதவி செய்ய நினைத்தார். அவர் பிரிட்டிஷ் காலனி நாடுகளில் இருக்கும் அடிமைத் தளையை விடுவிக்க நீண்ட நாட்களாகப் போராடி வந்தவர். அரசியல் சட்டங்கள் மூலம் இங்கிலாந்து தன் காலனிகளை அமைத்த நாடுகளில் அடிமைத் தளையை ஒழிக்க பாடுபட்டுக் கொண்டிருந்தார்.
வில்லியம் வில்பர்ஃபோர்ஸின் உயர்ந்த கொள்கைகளால் கவரப்பட்டு அவருடன் இணைந்து போராட எண்ணினார். தேர்தலில் நின்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நுழைய நினைத்தார். உயிரியல் கழகத்தில் தான் கொண்டு வந்த உயிரியல் சேகரிப்புகளை வரிசைப்படுத்தி வகைப்படுத்துதல்,, அவற்றின் பெயர்களை கண்டறிந்து அட்டவணைப்படுத்துதல் என்று பல வேலைகள் அவரது அறிவியல் ஆர்வத்துக்கு காத்திருந்தன.
1826 ஆம் ஆண்டு ராஃபிள்ஸ் தனது 46 ஆவது பிறந்த நாளுக்கு ஒரு நாள் முன்னால், ஜுலை 5 ஆம் தேதி அவரது இறுதி நாளாக இருந்தது. அவர் காதல் மனைவி சோஃபியாவும் தங்கியிருந்த வீட்டின் படிக்கட்டுகளில் இறந்து கிடந்தார்.
வலிப்பு நோய் தாக்கத்தால் இறந்து போனதாகத் தகவல் இருக்கிறது. கிழக்காசிய நாடுகளில் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் அலைந்து, திரிந்து பல அலுவல்களுக்கிடையே தன்னுடைய அறிவியல் ஆர்வத்தையும் கை விடாமல் சாகும் வரை தன் தேடலைத் தொடர்ந்த அந்த அபூர்வ மனிதரின் வாழ்க்கை முடிவடைந்தது.
அவர் கண்ட பல கனவுகள் நெடுங்கனவாய் இன்றும் தொடருகிறது. இன்று மனிதன் கால் தடம் பதிக்காத இடங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பயணங்கள் எளிமையாகி விட்டன.
இயற்கையொடு போராடுவதற்கு மனிதன் பல செயற்கைக் கருவிகளையும், பொருட்களையும் உருவாக்கி இயற்கையை அழித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் எங்கோ ஒரு மூலையில் மேற்குப் பகுதியில் பிறந்த ஒரு மனிதன் பூமிக்கு கிழக்குப் பகுதிக்கு வந்து பல அரிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு ஒரு நாட்டை உருவாக்கி அதன் வெற்றிக்கும் பல திட்டங்கள் தீட்டினான். தன் ஏழ்மை நிலையிலிருந்து உயர கிழக்காசியாவுக்கு வேலை நிமித்தம் வந்தவனுக்கு இறுதியில் மிஞ்சியது கடன் தொல்லை. மற்ற ஆங்கிலேயப் பிரபுக்கள் போல் அரச போக வாழ்க்கையை அனுபவித்து விட்டு பிறகு இங்கிலாந்து திரும்பியதும் ஓய்வூதியம் பெற்று நிம்மதியாக வாழ்க்கையை ஓட்டியிருக்கலாம்.
ஆனால் ராஃபிள்ஸ் தான் இறக்கும் வரை தன் தேடலை நிறுத்தவில்லை. தன் கனவுகளை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டிருந்தார். அவர் உண்மை என்று நினைத்த ஒரு நகரம் இன்று ஒரு பிரமாண்ட வளர்ச்சிப் பெற்றிருக்கிறது. உலக வரைப்படத்தில் சிறு புள்ளியாகத் தெரியும் இடம் இன்று உலகத்தினர் அனைவரையும் திரும்பி பார்க்கும் வைக்கும் அளவிற்கு முன்னேறியிருக்கிறது. ராஃபிள்ஸ் செய்தது இந்த வளர்ச்சிக்கு ஒரு தொடக்கம் தான்.
ஆனால் இந்த தொடக்கமே பல கடின உழைப்பையும், திட்டங்களையும், அளவுக்கதிகமான பொருட்செலவையும் எதிர்க் கொண்டது. ராஃபிள்ஸ் கதையுடன் சிங்கப்பூர் உருவான கதையும் கலந்து இருந்ததால் ராஃபிள்ஸ் கதையை இவ்வளவு விரிவாக எழுத வேண்டியிருந்தது. அவர் முன்னேற வைத்த ஒவ்வொரு அடியும் பல அரசியல் சூழ்ச்சிகளையும் திருப்பங்களையும் எதிர் நோக்கியது.
அந்தக் கால கட்டத்தில் இப்போது அரசியல் கட்சிகள் எதிர் நோக்கும் ஒரு முனைப் போட்டி போல கிடையாது. ஐரோப்பிய நாடுகளுக்கிடையே இருந்த பகைமை, நட்புறவு, ஒவ்வொரு ஐரோப்பிய நாடும் தங்கள் நாட்டுக்கொடியை எத்தனை இடங்களில் பறக்க விட முடியும் என்பதற்காகப் போராடியது, ஐரோப்பா முழுவதும் மாவீரன் நெப்போலியன் படையெடுப்புகளால் அடைந்த உயிர்ச் சேதம், பொருட் சேதம், புது நாடுகளைத் தேடி அங்கிருக்கும் வளங்களை தங்கள் நாட்டுக்கு கொண்டுச் சேர்க்க செய்த முயற்சிகள், எல்லாவற்றுக்கும் மேல் ஐரோப்பியர்கள் சென்ற நாடுகளில் இருந்த உள் நாட்டுக் குழப்பங்கள், அரசு பதவிக்கான போட்டிகள் என்று பல் வேறு சிக்கல்களைச் சமாளிக்க வேண்டியிருந்தது. ராஃபிள்ஸ் மறக்க முடியாத மனிதராகி இப்போது பல வடிவங்களில் சிங்கப்பூருடன், சிங்கப்பூர் சரித்திரத்துடன் கலந்திருக்கிறார்.
ராஃபிள்ஸ் ஒருவர் மட்டும் சிங்கப்பூரை உருவாக்கி விடவில்லை. ராஃபிள்ஸுடன் இன்னும் பலர், பல நாடுகளிலிருந்து வந்த கட்டுமானத் தொழிலாளிகள், இன்னும் பல ஆங்கிலேயர்கள் அவருடன் இணந்து பணியாற்றினார்கள். அவர்களைப் பற்றி …
தொடரும்…