ராஃபிள்ஸ் ஒரு தேர்ந்த ராஜதந்திரி போல் செயல்பட்டு சிங்கப்பூர் தீவில் தன் நாட்டுக் கொடியைப் பறக்க விட்டார். ஆனால் ராஃபிள்ஸ் தன்னை ஒரு சாமர்த்தியமிக்க அரசியல்வாதியாகவோ அல்லது பதவி மோகம் கொண்ட ஆளுநராகவோ மட்டும் தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை. அவர் மிகச்சிறந்த உயிரியலாளராக இருப்பதை மிகவும் விரும்பினார்.
மனிதநேயமிக்க அவரது மற்றொரு முகமும் சரித்திரத்தில் பதிவாகியிருக்கிறது. அவரது சமகால மாமனிதர்களான வில்லியம் பிட் இளையவர், நெப்போலியன், நெல்சன், வெலிங்டன் போன்றவர்களின் பெயர்களோடு நாம் ராஃபிள்ஸ் பெயரையும் இணைக்கலாம்
வில்லியம் பிட் தனது 24 ஆம் வயதில் இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக (அப்போது பிரதம மந்திரி என்ற வார்த்தை புழக்கத்தில் இல்லை) பதவி ஏற்றார். 1783 ஆம் கால கட்டம் உலக சரித்திரத்தில் மிக முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்திய காலம். பிரெஞ்சுப் புரட்சி, நெப்போலியனின் படையெடுப்புகள போன்ற சம்பவங்களால் நிறைந்தது. அந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்தின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்வது என்பது தலைக்கு மேல் கத்தி தொங்கும் அபாயங்கள் நிறைந்தது.
வில்லியம் பிட் அந்தச் சிறு வயதில் இங்கிலாந்தின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்ட துணிச்சல் மிக்க இளைஞன். மாவீரன் நெப்போலியன் என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டவன் நெப்போலியன் போனபார்ட். நெப்போலியனை எதிர்த்துப் போரிட்ட இங்கிலாந்து நாட்டு மாபெரும் கடல் படை தளபதி நெல்சன் டிராஃஃபால்கர் போரில் வீர மரணமடைந்தார்.
வெலிங்டன் டியூக் என்று அழைக்கப்பட்ட ஆர்தர் வெல்லெஸ்லி இங்கிலாந்து நாட்டின் இராணுவப் படைக்குத் தலைமை வகித்தார். இங்கிலாந்தின் பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்றார். நெப்போலி யனின் போர்களைச் சமாளித்த மிகச் சிறந்த இராணுவத் தலைவர் இறுதியில் 1815 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் தேதி நெப்போலியனைத் தோற்கடித்த வாட்டர்லூ போரில் இவரது போர் திட்டங்களும், வீரமும் இவருக்குப் பெரியபுகழைத் தேடித் தந்தது.
இப்படிப்பட்ட ஆளுமை மிக்க அரசியல்வாதிகள், போர் வீரர்கள், படைத்தளபதிகள், இவர்களோடு ராபிள்பிஸையும் ஒப்பிடுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
ராஃபிள்ஸ் 1781 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டியாமென் என்ற ஒரு சரக்குக் கப்பலில் பிறந்தார். அவரது தந்தை அந்தக் கப்பலின் தலைவர். இன்று பேருந்தில், ரயிலில், விமானத்தில், கப்பலில் குழந்தைகள் பிறப்பது ஒரு பரபரப்பான செய்தியாகக் கருதப்படலாம். ஆனால் கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கு முன் கப்பல் பயணத்தில் குழந்தைகள் பிறப்பது இயல்பான ஒன்றாக இருந்திருக்கலாம்.
கப்பல் பிரயாணம் சில சமயம் தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் எட்டு மாதங்கள் வரை தொடரும் அப்படிப்பட்ட நெடிய பயணங்களில் குழந்தைகள் பிறப்பதும் இயல்பான ஒன்றாக இருந்திருக்கலாம். பிற்காலத்தில் ராஃபிள்ஸுக்கும் அவரது இரண்டாம் மனைவி சோஃபியாவுக்கும் இப்படிப்பட்ட ஒரு நெடிய பயணத்தில் கிட்டத்தட்ட 14,000 மைல்கள் தொலைவுப் பயணம். இங்கிலாந்திலிருந்து பென்கூலனுக்கு நான்கு மாதப் பயணத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இப்படிக் கப்பல் பயணத்தில் பிறந்த ராஃபிள்ஸ் பிறகு இங்கிலாந்தின் எந்தப் பகுதியில் எங்கே வளர்ந்தார் என்பது சரியாகத் தெரியவில்லை. வசதியான அவரது குடும்பம் சொத்தையெல்லாம் இழந்தது. அவரது தநதையும் ராஃபிள்ஸ் பதினான்கு வயதுச் சிறுவனாக இருக்கும்போது மரணமடைந்தார். தனது பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு கிழக்கு இந்தியக் கம்பெனியில் எழுத்தராக வேலைக்குச் சேர்ந்தார்.
வறுமைச் சூழலால் பள்ளிக்குப் போய் கல்வி கற்க முடியாத போதும் அவரது அறிவுப் பசி அவரை மேலும் கற்கத் தூண்டியது. தனக்குத்தானே பல கட்டுப்பாடுகள் விதித்துக் கொண்டு அவர் கற்றலையும் தன் தேடலையும் தொடர்ந்தார். ஒரு நாளில் வேலை நேரம் போக மீதமிருக்கும் நேரத்தில் கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் படிப்பதிலும் எழுதுவதிலும் செலவழித்தார்.
என்றாவது ஒருநாள் அவரால் குறிப்பிட்ட அளவு நேரத்தைப் படிப்பதற்குப் பயன்படுத்த முடியாமல் வேறு வேலைகள் குறுக்கிட்டால் அதை இரவு கண் விழித்தாவது சரி செய்து விடுவது என்று இராணுவ ஒழுக்கத்தை கடைபிடித்தார். இந்தக் கற்றலின் தாகமும் வேகமும் அவர் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது. அதனால்தான் அவர் வாழ்ந்த காலங்களில் மிகப் பெரிய அறிவாளியாக போற்றப்பட்டார். அவரை இன்றும் நாம் எழுதும் சரித்திரங்களிலும் அறிவியல் புத்தகங்களிலும் நினைவு கூர்கிறோம்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் கிழக்கிந்தியக் கம்பெனி ராஃபிள்ஸ் தன்னை அறிவாளியாக நிலைநிறுத்திக் கொள்ள மேலும் பல சந்தர்ப்பங்களைக் கொடுத்தது. கிடைத்த சந்தர்ப்பங்களை சாமர்த்தியமாகவும் புத்தி சாதுர்யத்தினால் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட இருபத்துநான்கு வயது இளைஞன் ராஃபிள்ஸ் பலரது கவனத்தையும் கவர்ந்தார்.
அவரது மேலதிகாரி வில்லியம் ராம்சே தனக்குக் கீழ் இருந்த பல எழுத்தர்களில் இந்தப் புத்திசாலி இளைஞனை மட்டும் கிழக்கிந்தியக் கம்பெனியின் பிரதிநிதித்துவ செயலாளராக பினாங்குத் துறைமுகத்துக்கு அனுப்ப முடிவெடுத்ததில் ஆச்சரியம் எதுவுமில்லைதான். செயலாளராக பதவி உயர்வு பெற்று பினாங்குக்குப் பயணம் செய்து அங்கே வேலை பார்க்கும் பொறுப்பு தன்னுடைய புத்திசாலித்தனத்தால் மட்டும் கிடைத்ததாக தன் வாழ்நாளின் இறுதிவரை ராஃபிள்ஸ் நம்பிக் கொண்டிருந்தார். ஆனால் சுற்றிலும் இருந்தவர்கள் சொன்ன கதை வேறு.
வில்லியம் ராம்சேயின் ஆசை நாயகியாக இருந்தவர். ஐரிஷ் நாட்டைச் சேர்ந்த அழகி ஒலிவியா ஃபான்கோர்ட். ஆசைநாயகிகள் அனைவருமே ஆசை தீர்ந்ததும் பெரிய மனிதர்களின் வாழ்க்கை யிலிருந்து முடிந்துவிட்ட ஒரு அத்தியாயம் தானே. ஆனால் ஒலிவியாவை விட்டு எப்படி விலகுவது என்ற ஒரு குழப்பத்தில் வில்லியம் ராம்சே இருந்தபோது ஒலிவி யாவைத் திருமணம் செய்ய ராஃபிள்ஸ் சம்மதித்ததாலே ராம்சே மனம் மகிழ்ந்து இப்படிப் பட்ட வாய்ப்பை வழங்கினார் என்று புரளி பேசினார்கள்.
ஒலிவியா ராஃபிள்ஸை விட பத்து வயது மூத்தவர். வில்லியம் ராம்சேயின் ஆசை நாயகியாக வாழ்ந்தவர். அவரை ராஃபிள்ஸ் திருமணம் செய்துகொண்டதால் இப்படிப்பட்ட வதந்திகள் பேசப்பட்டன. ஆனால் அடுத்து வந்த பத்தாண்டுகளிலேயே தன்னை இங்கிலாந்து நாட்டுச் சமூகச் சூழலிலும் அறிவியலாளர்கள் நடுவிலும் மிகப் பெரிய அறிவாளி என்று ஒத்துக் கொள்ளும்படி பல சாதனைகள் செய்தார் ராஃபிள்ஸ் ஒலிவியா. வில்லியம் ராம்சே, ராஃபிள்ஸ் மூவருக்குமிடையே இருந்த முக்கோணத் தொடர்புகள் மறக்கடிக்கப்பட்டன.
இப்படிப்பட்ட பரபரப்புகள் நிறைந்த தேசத்தில் காஞ்செஸ் என்ற கப்பலில் புதுமணத் தம்பதியரின் பினாங்குப் பயணம் தொடர்ந்தது. பினாங்குத் துறைமுகம் மலேயா தீபகற்பத்தின் வடக்கு முனையில் மலாக்கா ஜலசந்தியில் மிக முக்கியமான ஒரு இடத்தில் அமைந்திருந்தது. ஆனால் கிட்டத்தட்ட இருபது ஆண்டு களாக இங்கிலாந்து அரசு அதிகம் கவனிக்காமல் பராமரிக்காமல் இருந்தது.
சீனா விலிருந்து வரும் கப்பல்கள் மட்டும் அந்தத் துறைமுகத்தைப் பயன்படுத்திக் கொண்டி ருந்தது. இந்நிலையில் அமெரிக்காவில் தன் அதிகாரத்தை தொலைத்த இங்கிலாந்து. பின்னர் நெப்போலியனால் டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி வலு பெற்று டச்சுக்காரர்களும் பிரெஞ்சுக்காரர்களும் தங்கள் புதிய குடியேற்றங்களை உலகமெங்கிலும் பரவச் செய்து கொண்டிருந்தனர். இங்கிலாந்து அரசுக்குத் தங்கள் அதிகாரத்தையும் பலத்தையும் நிர்ணயிக்க மேலும் பல திட்டங்களைத் தீட்டியது.
அதில் ஒன்று, பினாங்குத் துறைமுகத்தை இன்னும் வலுப்படுத்தி தங்கள் வியாபாரத்தைக் கிழக்காசிய நாடுகளில் பெருக்கிக் கொள்வது இதற்கு முதல்படியாக இங்கிலாந்திலிருந்து தேர்ந்தெடுத்த குழு ஒன்று பினாங்கு சென்றது. பினாங்கின் புதிய ஆளுநர் பிலிப் டுண்டாஸ் மற்றும் அவரது அலுவலர்கள் அனைவரும் 1805 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் புறப்பட்டனர். நன்னம்பிக்கை முனை மற்றும் இந்தியப் பெருங்கடலைச் சுற்றி பினாங்கை அடைய ஆறு மாதங்கள் ஆனது. இந்தப் பயணத்தில் தான் ராஃபிள்ஸ் தான் போகும் புதிய இடத்தில் பயன்படுத்தும் மலாய் மொழி யாருக்குமே தெரியாது என்பதை அறிந்தார்.
மலாய் மொழி கற்றுக் கொள்வதுதான் மேலும் உயர ஒரு வழி என்பதைப் புரிந்து கொண்டார். புது மனைவியோடு தேனிலவைக் கொண்டாடாமல் மலாய் மொழி கற்றுக் கொள்ள ஆரம்பித்தார் என்பதை முதல் அத்தியாயத்தில் பார்த்தோம். பினாங்கை இங்கிலாந்தின் காலனியில் ஒரு மாநிலமாக வலுப்படுத்தி இந்தியாவின் கவர்னர் ஜெனரல் லார்ட் மிண்டோவின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதியாக அறிவித்தனர்.
பினாங்கு சென்றதும் மலாய் மொழி அறிந்ததால் உதவிச் செயலாளராக இருந்தவர் தலைமைப் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றதற்கு முக்கிய காரணம், இவர் கற்றுக் கொண்ட மலாய் மொழியே.
தொடரும்…