பினாங்கு வந்து சேர்ந்ததும் உதவிச் செயலாளராக இருந்த ராஃபிள்ஸ் தலைமைச் செயலாளராகப் பதவி உயர்வுப் பெற்றார். கூடவே மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றத் தொடங்கினார். பினாங்கு நகரை ஆங்கிலேயர்கள் கற்பனை செய்தது போல் அவ்வளவு எளிதாக த் தங்கள் வசதிக்கேற்றாற் போல் மாற்றியமைக்க முடியவில்லை.
பினாங்கின் சூழல், பருவ நிலை எதுவுமே ஆங்கிலேய துரைகளுக்கும், கனவான்களுக்கும் ஒத்துக் கொள்ளவில்லை. ஏராளமான இயற்கை வளங்கள், பச்சைப் பசேல் காடுகள், நிறைய மழை, இவற்றோடு மலேரியா பரப்பும் கொசுக்களினால் மலேரியா காய்ச்சல், அதிக வெப்பத்தினால் வயிற்றுப்போக்கு, இடை விடா காய்ச்சல் போன்றவற்றால் அவதிப்பட்டுப் பலர் இறந்தனர்.
பிலிப் டுண்டாஸ் மற்றும் அவரது குழுவினரில் பலர், பிலிப் டுண்டாஸின் மனைவி உட்பட பலரும் மாண்டனர். 1805 ஆம் ஆண்டு இறுதியில் பினாங்கு சென்றவர்களில் உயிரோடு இருந்தவர்கள் வெகு சிலரே. 1807 ஆம் ஆண்டு ராஃபிள்ஸ் நோய்வாய்ப்பட்டு மலாக்காவிற்கு சிறிது காலம் அனுப்பப்பட்டார். மலாக்கா அப்போது சரித்திரப் புகழ்பெற்ற துறைமுக நகரமாக இருந்தது. ஆனால் டச்சுக்காரர்கள் வசம் இருந்தது. மலாக்காவும் ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமானால் மலேயா தீபகற்பம் முழுவதும் பிரிட்டிஷ்காரர்களுக்குச் சொந்தமாகும்.
அது கிழக்காசியாவில் நம் வர்த்தகத்தைப் பெருக்குவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று கல்கத்தாவில் இருந்த மிண்டோ பிரபுவிடம் தன் பரிந்துரையை அனுப்பினார். இந்தியாவின் கவர்னர் ஜெனரல் மிண்டோ பிரபு அனைத்து ஆசிய நாடுகளில் இருந்த பிரிட்டிஷ் காலனி நாடுகளுக்கும் கவர்னர் ஜெனரலாகக் கருதப்பட்டார்.
ஆங்கிலேயர்கள் காலனி அமைத்த நாடுகளிலேயே மிகப் பெருமைக்குரிய உடைமையாகக் கருதியது பாரத துணைக்கண்டத்தைத்தான்! இந்தியாவைத் தன் தலைமைச் செயலகமாகக் கருதி இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பணியாற்றியவரே அனைத்து ஆசிய நாடுகளுக்கும் கவர்னர் ஜெனரலாகப் பணியாற்றினார். ஆனால் அந்தப் பரிந்துரைக் கடிதம் அப்போதைக்கு சாத்தியமில்லை என்று தள்ளி வைக்கப்பட்டது.
ஆனால் மிண்டோ பிரபு அத்தகைய ஒரு திட்டம் ஒரு சாதாரண எழுத்தர் வேலைக்குச் சேர்ந்த ஓர் இளைஞன் எழுதியது என்று தெரிந்து ராஃபிள்ஸ் மேல் அசாத்திய மதிப்பும், நம்பிக்கையும் வைத்தார். அவரைப் பிற்காலத்தில் ஒரு பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கத் தூண்டியதும் இந்த நம்பிக்கையே!
அடுத்த மூன்று ஆண்டுகளில் மிண்டோ பிரபுவின் நேரடித் தொடர்பில் கவர்னர் ஜெனரல் அலுவலக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்தோனனேசியாவைச் சேர்ந்த ஜாவா அப்போது டச்சுக்காரர்கள் ஆட்சியில் இருந்தது. ஹாலந்து (டச்சுக்காரர்கள் -ஹாலந்து நாட்டைச் சேர்ந்தவர்கள்) பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.
கிட்டத்தட்ட ஆறு மாத காலம் ஜாவாவை எப்படி ராணுவ உதவியுடன் கைப்பற்றலாம் என்று ஒற்றர் கட்டமைப்பு மூலம் கண்டறிந்து மிண்டோ பிரபுவுக்கு அறிக்கை அனுப்பினார். இதைப் போன்ற ராணுவ நடவடிக்கைகள், போர்த்திட்டம் இவை மட்டும் ராஃபிள்ஸ் தன் வாழ்க்கையாக நினக்கவில்லை. இவை ராஃபிள்ஸ் வாழ்க்கைக்கு சுவை சேர்க்கவில்லை.
மலாக்காவில் இருந்த மூன்றாண்டுகளைத் தன் உயிரியல் ஆர்வத்துக்குப் பயன்படுத்திக் கொண்டார். விதவிதமான தாவரங்கள், விலங்குகள், பூச்சிகள்,பறவைகள் என்று பல வகைகள், அதுவும் ஐரோப்பாவில் காணக் கிடைக்காதவை… இவற்றைச் சேகரிக்கத் தொடங்கினார். இவற்றைக் கப்பலில் லண்டனில் இருக்கும் கிழக்கிந்தியக் கம்பெனிக்குச் சொந்தமான ஓரியண்டல் அருங்காட்சியகத்திற்கு அனுப்பினார்.
1811 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் தேதி தாக்குதலுக்குத் தயாரான கப்பல் பட்டாவியாவுக்குப் புறப்பட்டது. பட்டாவியா என்பது இன்றைய இந்தோனேசியாவின் தலைநகரம் ஜாகர்த்தா. ஏழு வாரப் பயணத்தின் இறுதியில் பட்டாவியாவின் கிழக்குப் பகுதியில் 10 மைல் தொலைவில் கப்பல் நிறுத்தப்பட்டது.
கிட்டத்தட்ட 45 நாட்கள் நடந்த போரில் டச்சுப் பிரெஞ்சுப் படைகளைத் தகர்த்து ஜாவாவை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினார்கள். ராஃபிள் ஜாவாவின் லெஃப்டினன்ட் கவர்னராக மிண்டோ பிரபு அறிவித்தார். முப்பது வயதான ராஃபிள்ஸ் ஐம்பது லட்சம் மக்கள் தொகை கொண்ட ஜாவாவின் ஆளுனர் ஆனார்.
ஜாவாவின் ஆளுனர் ஆனதும் தன்னுடைய சீர்திருத்தங்களைத் தொடங்கினார். டச்சு அரசாங்கத்தின் கடுமையான சட்டதிட்டங்களை மாற்றியமைத்தார். குற்றம் செய்தவர்களை சித்ரவதை செய்து தண்டிப்பது,கை கால்களை வெட்டுவது போன்ற தண்டனைகளை மாற்றினார். நீதிமன்றம் அமைத்து அதில் முறையாக விசாரிக்கப்பட்டு தண்டனைகள் தரப்பட்டன.
பட்டாவியா துறைமுகம் வழியே பயணம் செய்யும் வர்த்தகக் கப்பல்களை வலுக்கட்டாயமாக வரவழைத்து அதில் உள்ள பொருட்களை த் தாங்கள் நிர்ணயிக்கும் விலைக்கு வாங்கும் வழக்கம் டச்சுக்காரர்களிடம் இருந்தது. இதனால் பல வர்த்தகர்கள் நஷ்டமடைந்தனர்.
இதை மாற்றியமைத்தார். அடிமைகளை விலை கொடுத்து வாங்கும் வழக்கத்தை நிறுத்தினார். அடிமைகளாக வேலை செய்து வந்தவர்களுக்குச் சுதந்திரம் கொடுத்து சுதந்திர மனிதர்களாக நடமாட விட்டார். டச்சுக்காரர்கள் விளை நிலங்களைத் தங்கள் விருப்பப்படி பயன்படுத்திக் கொண்டனர். அதில் அதிக வருமானம் தரும் ஓபியம் பயிரிட்டு அதனை அதிக லாபத்திற்கு விற்று வந்தனர்.
நிலத்துக்குச் சொந்தக்காரர்கள் தங்கள் விருப்பப்படி நெல், காபி, பழங்கள், மிளகு, ஏலக்காய், பட்டை, சாதிக்காய் போன்ற நறுமணப் பொருட்கள் போன்றவை பயிரிட்டுக் கொள்ள அனுமதியளித்தார். நிலக் குத்தகை முறைகளை மாற்றியமைத்தார். தங்கள் உழைப்பில் விளைந்த பயிர்களை அவர்களே சந்தைக்குச் சென்று விற்றுக் கொள்ளலாம் என்று அனுமதியளித்தார்.
ஆனால் ராஃபிள்ஸ் மேற்கொண்ட சீர்திருத்தங்கள், மனிதாபிமானமிக்க செயல்கள் போன்றவை ஆங்கிலேய அரசாங்கத்திற்கு பெருத்த நஷ்டம் ஏற்படுத்தியதாக எக்கச்சக்க குற்றச்சாட்டுகள் . இவற்றை ராஃபிள்ஸ் எப்படி சமாளித்தார். இதனால் அவருக்கு ஏற்பட்ட இழப்புகள் இவற்றைப் பற்றி அடுத்த பாகத்தில் தொடர்வோம்.
தொடரும்…