ராஃபிள்ஸுக்கு இங்கிலாந்து சமூகம் மற்றும் அறிவியல் உலகத்தில் மாபெரும் வெற்றிகள் காத்திருந்தன. பெரும் மதிப்பிற்குரிய ராயல் சொசைட்டி என்ற அமைப்பின் அங்கத்தினர் ஆக்கப்பட்டார் (fellow of Royal society). தேசிய கலைகள் காட்சி கூடத்தில் அவரது உருவப்படம் இடம் பெற்றது.
இங்கிலாந்தில் தங்கியிருந்த காலத்தில் இரண்டு பாகங்களைக் கொண்ட ‘ஜாவாவின் சரித்திரம்’ என்ற புத்தகத்தை எழுதி முடித்தார். ஜாவாவில் அவர் தங்கியிருந்த காலங்களின் வரலாற்றுச் சின்னமாக அந்தப் புத்தகம் பெருத்த வரவேற்பு பெற்றது. இதன் பலனாக ராஃபிள்ஸ்ஸுக்கு மே மாதம் 29ஆம் தேதி 1817 ஆம் ஆண்டு ‘ நைட்’ (knight) பட்டம் கிடைத்து.
கிழக்கிந்திய கம்பெனி ராஃபிள்ஸின் சாதனைகளைப் பற்றிப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் மூன்று வருடங்களுக்கு முன்னால் அவர் மீது சுமத்தப்பட்டக குற்றங்களிலிருந்து அவரைக் குற்றமற்றவர் என்று விடுவித்தது. முறையாக கடிதம் அனுப்பி அவருக்கு பதவி உயர்வு கொடுத்தது. பென்கூலனின் அரசாங்கப் பிரதிநிதியாக இருந்தவர் லெஃப்டினண்ட் கவர்னராகப் பதவி உயர்வுப் பெற்று தன் பயணத்தைத் தொடர்ந்தார்.
மீண்டும் புதுக் கணவனாகப் பயணம். இந்த முறை சோபியாவுடன்!!!! கிட்டத்தட்ட 14,000 மைல் கப்பல் பயணம். பயணத்தின் போதே சோபியா ஒரு பெண் குழந்தைப் பெற்றெடுத்தாள். நான்கு மாதப் பயணத்தின் முடிவில் பென்கூலன் சென்றபோது அவர் கண்ட காட்சி அவரை நிலை குலைய வைத்தது. வரிசையாக வந்த நில நடுக்கங்ககளால் பென்கூலன் தரை மட்டமாகப் போயிருந்தது. இடிபாடுகளின் நடுவே பரிதா[பமாக காட்சியளித்தது.
ஒரு தீவிரப் போராட்ட மனதுடன் அதே சமயம் மீண்டும் பென்கூலனை பழைய நிலைக்கு மாற்றியாக வேண்டும் என்ற உற்சாகத்துடன் வேலைகளைத் தொடர்ந்தார். தனக்கு எத்தகைய அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது, அந்த அதிகாரத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்ற வரையறைகளைப் பற்றிச் சற்றும் கவலைப்படாமல் அங்கிருந்த ஆப்பிரிக்க அடிமைகளை விடுவித்தார்.
அதில் இருந்த நோயாளிகளுக்கும், வயதானவர்களுக்கும் பல உதவிகள் செய்தார். இந்தியா பென்கூலன் தீவைத் தன் கைதிகளுக்கு ஒரு சிறைச்சாலையாய் பயன்படுத்தி வந்தது. நாடு கடத்துவது என்ற பொருள் படுமாறு தீவாந்திரத் தண்டனை என்று தீர்ப்பு வழங்கி அவர்களை அந்தமான், பென்கூலன் போன்ற தீவுகளுக்கு அனுப்பி விடுவர். அதன் பிறகு பெரும்பாலான கைதிகள் தங்கள் தண்டனை காலம் முடிந்து சொந்த நாட்டிற்குத் திரும்புவது இல்லை. ஆயுள் கைதியாய் அந்தச் சிறையிலேயே அவர்கள் வாழ்நாள் முடிந்து விடும்.
அந்தக் கைதிகளைப் பெரிய குற்றங்களைச் செய்த குற்றவாளிகள், சிறு குற்றம் செய்தவர்கள் என்று தரம் பிரித்து, அதில் நிறைய பேருக்கு விடுதலை என்று அதிகாரபூர்வமாக அறிவிக்காமல், அங்கே வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம். திருமணம் செய்து கொள்ளலாம். நிலங்கள், வீடுகள் வாங்கலாம் என்று உரிமை வழங்கினார்.
பள்ளிகள், பொதுச்சேவை நிறுவனங்கள் போன்றவற்றை நிறுவி மக்களுக்குப் பலவகையிலும் உதவிகள் செய்தார். ஜாவாவில் செய்த நிலச் சீர்திருத்தச் சட்டங்களை இங்கேயும் நடைமுறைப்படுத்தினார். தீவின் உட்பகுதிகளைச் சுற்றி வரும் போது அந்தக் காடுகளில் முதன் முறையாக ஒரு பெரிய மலர், ஊதா, மஞ்சள், சிவப்பு, வெள்ளை நிறங்களைக் கொண்ட ஒரு அபூர்வ மலரைக் கண்டார். அந்த மலர்தான் உலகிலேயே மிகப் பெரிய மலரான ராஃபிளிஸியா அர்னால்டி (Raffles Arnoldi).
அந்த மலருக்கு இந்தப் பெயரும் பின்னாளில் தான் அதைக் கண்டறிந்த ராஃபிள்ஸ்ஸின் பெயருடன் சேர்த்து ராஃபிலிஸியா என்று வைக்கப்பட்டது. வழக்கம் போல் அவரது தாவரவியல் ஆர்வத்தினால் தன்னுடைய சேகரிப்பில் அதையும் சேர்த்துக் கொண்டார். தான் கண்டு பிடித்த்துதான் உலகத்திலேயே மிகப் பெரிய மலர் என்பது அவருக்கு அப்போது தெரியாது. இந்த மலரைப் பற்றி ஏற்கெனவே சில குறிப்புகள் இருந்தன.
பழங்குடியினர் அதை மருத்துவக் குணங்களுக்காகப் பயன்படுத்தி வந்தனர். முன்பு ஒரு டச்சு தாவரவியலாளர் இந்த மலரைப் பற்றி 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கண்டு பிடித்தார். ஆனால் ராஃபிள்ஸ் ராஃபிலிஸியா என்ற செடி மற்றும் அடி தன் மலரைப் பற்றி மேலும் பல தகவல்கள் சேகரித்து அதற்கு ராஃபிளிஸியா என்று தன் பெயரையும் தன்னுடன் வந்த நெருங்கிய நண்பரான அர்னால்டின் பெயரையும் சேர்த்து அந்த மலருக்கு ராஃபிளிஸியா அர்னால்டி என்ற பெயரை வைத்தார்.
இந்த தாவர வகை ஒட்டுண்ணி வகைத் தாவரங்கள். இவை மலேசியா, சிங்கப்பூர், ஜாவா, போர்னியோ, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் காணப்படும்.
இப்போது ராஃபிள்ஸ் தனது நாட்டு வர்த்தகத்தை லாபகரமாகத் தொடர இன்னும் வசதியான, டச்சுக்காரர்களின் அதிகாரத்துக்கும், செல்வாக்குக்கும் உட்படாத ஒரு துறைமுகம் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார். மலேயா தீபகற்பத்தின் தென்கோடியில் அமைந்திருந்த சிங்கப்பூர் ஒரு சிறிய தீவு. 26 மைல் 14 மைல் நீளமும் கொண்ட இயற்கைத் துறைமுகமாக இருந்தது.
ஜோஹோர் சுல்தானிடமிருந்து அனுமதி பெறுவது என்பது பெரிய பிரச்சினையாக இருக்காது என நினைத்து கல்கத்தாவிற்குச் சென்று அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த லார்ட் ஹேஸ்டிங்ஸை சந்தித்து அவரது ஆசியும் அனுமதியும் பெற்று சிங்கப்பூரை ஒரு துறைமுக நகரமாக்கியது எப்படி என்பதை இந்தக் கதையின் ஆரம்பத்தில் படித்தோம்.
340 சிப்பாய்களும், 100 மாலுமிகளும் மட்டும் இருந்த சிங்கப்பூரில் தன் நாட்டுக் கொடியான யூனியன் ஜாக்கைப் பறக்க விட்டார். இவர்களைத் தவிர கிட்டத்தட்ட 500 பேர் இருந்தனர். அவர்களும் சிங்கப்பூரில் வசிக்காமல் சிங்கப்பூரைச் சுற்றி படகில் வாழ்ந்து வந்தனர். சிங்கப்பூரை எந்த வித கட்டுப்பாடுகளும் கட்டணமும் இல்லாத துறைமுகமாக அறிவித்தார்.
இது தடையற்ற வர்த்தகத்திற்குப் பெரிதும் உதவியாக இருக்கும் என்று நினைத்தார். அவர் நினைத்தபடியே கிட்டத்தட்ட 800 பேர் இருந்த ஊரில் நான்கு மாதங்களில் 5,000 பேர் இருந்தனர். துறைமுகத்தில் உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் கப்பல்கள் வந்த வண்ணமிருந்தன.
மீண்டும் பென்கூலனுக்குச் சென்று லெஃப்டினண்ட் கவர்னராகத் தன் வாழ்க்கையைத் தொடர்ந்தார். ஆனால் கிழக்கிந்தியக் கம்பெனி தன்னுடைய “அரசியல் குழந்தை”யான சிங்கப்பூரை எப்படி வரவேற்கும் என்பதைப் பற்றி கவலைப்பட்டார். இப்படி செலவு செய்து ஒரு துறைமுகத்தைப் பராமரிக்க வேண்டாம் என்று கம்பெனியின் இயக்குனர்கள் குழு முடிவு செய்தால் தான் சிங்கப்பூரை மேலும் விரிவு படுத்துவது பற்றி மறந்து விட வேண்டியதுதான் என்று முடிவெடுத்தார்.
ஆனால் சிங்கப்பூர் இந்த அரசியல் தடைகளைக் கடந்து ஒரு வெற்றிகரமான வியாபார மையமாகச் செயல்படத் தொடங்கியது. ஒரு வருடம் கழித்து கிழக்கிந்தியக் கம்பெனி சிங்கப்பூரை ஒரு நிபந்தனைகளற்ற துறைமுகமாகச் செயல்பட ஒருவித அதிருப்தியோடு அனுமதி கொடுத்தது.
சிங்கப்பூர் இனி கிழக்கிந்தியக் கம்பெனியின் ஒரு முக்கியமான வியாபார மையம். அதை அங்கீகரித்து விட்டது என்பதை அறிந்த ராஃபிள்ஸ் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. சோபியா தன் நினைவுகளைத் தொகுத்து எழுதும்போது ராஃபிள்ஸ் தன் வாழ்க்கையில் இவ்வளவு மன நிறைவுடன் இருந்து தான் பார்த்த்தேயில்லை.
அவர் உருவாக்கிய சிங்கப்பூர் கிழக்கிந்தியக் கம்பெனியின் அங்கீகாரத்துடன் செயல்படத் தொடங்கியதும் அவர் நிம்மதியுடன் இருந்ததை உணர முடிந்தது என்று குறிப்பிட்டிருந்தாள். 39 வயதே நிரம்பிய இளைஞர் ராஃபிள்ஸ் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் கிழக்காசிய நாடுகளில் தன் வாழ்நாளைக் கழித்தார். ஆனால் அந்த வாழ்க்கையில் அவர் மனம் ஒன்றிய அளவுக்கு அவர் உடல் ஒத்துழைக்கவில்லை. உடல் நலம் எப்போதும் சீர்குலைந்து காணப்பட்டது.
கண்டிப்பாக அந்தச் சூழலில் தன்னால் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது என்பதை நன்கு உணர்ந்தார். தூரக் கிழக்கு நாடுகளில் தங்கள் வியாபாரம் பெருக பிரமாண்ட திட்டங்கள் தீட்டினார். அந்தக் கனவை நனவாக்க தன்னால் முடியாது என்பதால் அதில் ஒரு கால் பகுதியாவது சிங்கப்பூரை உருவாக்கியது மூலம் நிறைவேற்ற முடியும் என்பதால் அவர் மன நிம்மதியோடும், நிறைவோடும் மீண்டும் இங்கிலாந்து செல்லும் முடிவுக்கு வந்தார்.
இந்த மகிழ்ச்சியான இடைவேளை சிறிது காலத்துக்கு நீடித்தது. ஆறு மாத காலத்துக்குள் ஒன்றன் பின் ஒன்றாக ராஃபிள்ஸ்ஸின் மூன்று குழந்தைகள் இறந்தன. கடைசிக் குழந்தையான எல்லா மட்டும் உயிருடன் இருந்தாள். அவளது செவிலித்தாயுடன் முதலில் இடம் கிடைத்த கப்பலில் அவளை மட்டும் இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தனர். சோபியா குழந்தைகளை இழந்த துக்கத்தில் நோய்வாய்ப்பட்டாள். ராஃபிள்ஸுக்குக் கடுமையான தலைவலி வந்து அவதிப்பட்டார்.
அதை அவர் மூளைக் காய்ச்சல் என்று கூறிக் கொண்டார். இந்தத் துன்பங்களுக்கு முடிவுதான் இங்கிலாந்து செல்வதே என்று தன் வேலையைத் துறந்தார். மனம் ஒடிந்து கடைசியாக சிங்கப்பூரைப் பார்த்து விட்டு இங்கிலாந்து கிளம்பலாம் என்று தீர்மானித்து மீண்டும் 1822 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி அவரும் சோபியாவும் சிங்கப்பூர் வந்தனர். இங்கே சிங்கப்பூரில் கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் தங்கியிருந்தனர். அந்த ஒன்பது மாதங்களும் அவர் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்களாக அமைந்தன. அது………
தொடரும்…