அக்கால கடலோடிகள் தாங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த நாட்டிற்கு இவர்களாக முயன்று ஒரு கடல் வழிப் பாதை கண்டுபிடித்துச் சென்றடைந்தனர். கொலம்பஸ் இந்தியாவுக்கும் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் கடல் வழியே செல்வதற்கு ஒரு புதிய பாதை கண்டுபிடிக்க முயன்று அமெரிக்காவை அடைந்தார். அந்தப் புதிய பூமியை அவர் தான் சாகும் வரை ஆசிய கண்டத்தின் ஒரு பகுதியாகவே, ஆசியாவின் கிழக்குப் பகுதி என்று நினைத்திருந்தார்.
அங்கே ஏற்கனவே வாழ்ந்து கொண்டிருந்த பழங்குடியினர் சற்று செந்நிறமாக இருந்ததால் சிவப்பிந்தியர்கள் என்று அழைத்தார். கொலம்பஸ் அமெரிக்கா என்ற புது உலகத்தை மட்டும் ஐரோப்பியர்களுக்கு அறிமுகம் செய்யவில்லை. சிஃபிலிஸ் என்ற பால்வினை நோயையும் ஐரோப்பா முழுவதும் அறிமுகம் செய்தார்.
13 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா முழுவதும் சிஃபிலிஸ் என்ற பால்வினை நோய் பரவி பல்லாயிரக்கணக்கானோர் மாண்டனர் என்று வரலாற்றுக் குறிப்புகள் குறிப்பிடுகின்றன.
ஐரோப்பாவிலிருந்து இப்படிப் பல கடலோடிகள் ஆசியா கண்டத்திற்கு ஒரு எளிமையான கடல் வழிப்பாதை கண்டுபிடிப்பதற்காகப் புறப்பட்டு வேறு பல தீவுகளுக்கும், நாடுகளுக்கும் சென்றிருக்கின்றனர். அப்போது அவர்களுக்குக் கடலைப் பற்றி அறிந்து கொள்ள இருந்த ஒரே கருவி வானம்தான். நிலவு, நட்சத்திரங்கள், கோள்கள், பருவ நிலை மாற்றங்கள் இவற்றைப் பார்த்து தங்கள் பாதையைத் தேர்ந்தெடுத்தனர். மேலும் உலகம் உருண்டையானதா தட்டையானதா போன்ற கேள்விகள் அவ்வப்போது எழுப்பப்பட்டு வந்தது.
உலகம் உருண்டைதான் என்று கடலில் நீண்ட தூரம் செல்லும் கடலோடிகள் உணர்ந்தார்கள். தரையைப் போல் கடலில் பயணம் செல்லும் தூரத்தை அளக்கக் கருவிகள் கிடையாது. திசை காட்டும் காந்த ஊசி, கையால் வரையப்பட்ட வரைபடங்கள் போன்ற குறைந்தபட்சக் கருவிகளோடு கப்பல் பயணம் தொடங்கிவிடும்.
திரும்பி வரும் நாள் யாருக்கும் தெரியாது. நாள் கணக்கில், மாதக் கணக்கில், வருடக் கணக்கில் தொடரும் இந்தத் தேடல் பயணம். உயிருடன் சொந்த நாட்டிற்குத் திரும்பி வருவார்களா இல்லை, போன இடத்திலேயே தங்கி எஞ்சிய வாழ்நாளை கழித்து விடுவார்களா என்பது யாருக்கும் தெரியாது.
கப்பல் புயலில் சிக்கி எப்போது வேண்டுமானாலும் மூழ்கி விடலாம். தரையிறங்கிய புதிய நிலத்திலும் இவர்கள் வரவேற்கப்படுகிறார்களா இல்லை எதிரிகள் என்று நினைத்து அந்நிலத்து மக்களால் கொல்லப்படுவார்களா போன்ற நிச்சயமற்ற முடிவுகள். இவை அனைத்தையும் மீறி எதற்காக ஐரோப்பியர்கள் ஆசிய நாடுகளைத் தேடி அலைந்தார்கள்? முதலில் புதிய இடங்களைக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற ஆர்வம்.
தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த உலோகங்கள், வைரம், மரகதம், ரத்தினம் போன்ற விலை மதிப்பற்ற கற்கள், பட்டுத் துணிகள், மிளகு, ஏலக்காய், கிராம்பு, பட்டை, ஜாதிக்காய் போன்ற உணவுக்கு அதிக சுவை ஊட்டும் பொருட்கள், மேலும் உணவைப் பதப்படுத்த உதவும் நறுமணப் பொருட்கள் இவை ஐரோப்பாவில் கிடைக்காத அதிசயப் பொருட்கள்.
இவற்றைத் தேடி வியாபாரம் செய்ய வந்தவர்கள், வந்த நாட்டில் இருக்கும் உள் நாட்டு அரசியல், பதவிப் போராட்டங்கள், உள்ளூர் மக்களின் அறியாமை போன்றவற்றைப் புரிந்துகொண்டு தாங்கள் விரும்பிய பொருட்களை வாங்கிச் செல்லும் வர்த்தகர்களாக மட்டும் இல்லாமல் அந்த நாட்டையே விலை பேசி வாங்கும் அளவிற்கு முன்னேறினார்கள் என்பதைக் கடந்து வந்த சரித்திரம் சொல்கிறது.
ராஃபிள்ஸ் இங்கிலாந்திலிருந்து ஒரு சாதாரண எழுத்தர் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு புது மாப்பிள்ளையாகத் தன் மனைவியுடன் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் பயணம் செய்து பினாங்கிற்கு வந்து சேர்ந்தார் என்பதை முதல் அத்தியாயத்தில் படித்தோம். அப்போது மலாய் மொழியைக் கற்றுக் கொண்டதோடு, மலாயா சரித்திரத்தையும் படித்திருக்கலாம். அப்போதே அவர் மனதில் சிங்கப்பூரைப் பற்றிய ஒரு சித்திரம் உருவாகியிருக்கலாம்.
ராஃபிள்ஸ் சிங்கப்பூரை விலைக்கு வாங்ககியதற்கு முன்னால் சிங்கப்பூர் என்னவாக இருந்திருக்கும். அவர் பார்த்தபோது வெறும் மழைக் காடுகள் மண்டியிருந்த நிலம். கடற்கரையோரமாகச் சில மீனவர்கள். ஆனால் பத்தாம் நூற்றாண்டில் சில சீனக் கடலோடிகளின் குறிப்புகளில் தெமாசிக் என்ற தீவைப் பற்றிய குறிப்புகள் இருந்தன.
தெமாசிக் என்றால் கடல் நகரம் என்று பொருள். கப்பலில் நெடுந்தூரம் பயணம் செய்பவர்கள் இளைப்பாறுவதற்கு ஒரு இடமாக இருந்தது. தெமாசிக் ஒரு மீன்பிடிக் கிராமமாகவும் இருந்து வந்தது.
1299-1347 ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூர் : சங் நீல உத்தமா என்று அழைக்கப்பட்ட திரி புவனா என்ற இளவரசன் தெமாசிக் என்ற பெயரை மாற்றி சிங்கப்பூர் என்று பெயர் வைத்தான். இன்றைய இந்தோனேசியா, அன்று சுமத்ரா தீவுகள் என்று அழைக்கப்பட்ட தெற்கு சுமத்ராவில் இருக்கும் பெலம்பானைத் தலைநகரமாகக் கொண்டு ஸ்ரீ விஜயாப் பேரரசு ஆட்சி செய்து கொண்டிருந்தது.
அந்த வம்சத்தில் வந்த இளவரசன் சங் நீல உத்தாமா கப்பலில் புதிய இடங்களைக் காணும் ஆவலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது தெமாசிக் என்ற தீவுக்குப் பக்கத்தில் கப்பலை நிறுத்தும்படி ஆணையிட்டான். அப்போது கப்பல் பெரிய புயலில் சிக்கிக் கொண்டு தத்தளித்தது. கப்பலில் கடல் நீர் புகுந்தது. கப்பலில் இருக்கும் பொருட்களையெல்லாம் கடலில் வீசியெறிந்தும் கப்பல் மூழ்குவதை நிறுத்த முடியவில்லை.
அப்போது சங் நீலா உத்தாமாவாவின் மந்திரி அரசரின் தலைக் கிரீடத்தை எடுத்து கடலில் வீசியெறியச் சொன்னார். உடனே கப்பல் மூழ்காமல் நின்றது. தெமாசிக் தீவுக்குப் பக்கத்தில் இருக்கும் தீவில் தரையிறங்கியதும் கண்ணுக்குத் தெரிந்த காட்டுப் பகுதியில் சிவப்பு நிறத்தில் சிங்கம் போன்ற ஒரு விலங்கைப் பார்த்தான். அது என்ன மிருகம் என்று கேட்டான். உடனே அந்த மந்திரி அந்த விலங்கைச் சிங்கம் என்று சொன்னார். வலிமையின் சின்னமான சிங்கத்தை அந்தத் தீவில் பார்த்தது அவன் வெற்றிக்கு ஒரு நல்ல சகுனமாக நினைத்து அந்தத் தீவை சிங்க நகரம் என்ற பொருளில் ‘சிங்கப்பூரா’ என்று பெயரிட்டான்.
அன்று முதல் சிங்கப்பூரா ஸ்ரீ விஜயா பேரரசின் முக்கியத் துறைமுகங்களில் ஒன்றாக விளங்கியது. கடல் வழி வாணிகத்தின் முக்கிய மையமாக இருந்தது. சங் நீலா உத்தாமா கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் சிங்கப்பூரை ஆட்சி செய்தான். பெலம்பான், பின்டான், சிங்கப்பூர் என்ற மூன்று நாடுகளின் அரசன் என்ற பொருள் வரும் படி தன்னை திரி புவனா பரமேஸ்வரா என்று அழைத்துக் கொண்டான். அதன் பிறகும் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் ஸ்ரீ விஜயா அரசின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் இருந்தது.
அதே கால கட்டத்தில் மஜாபாஹிட் என்ற அரசவம்சம் ஜாவாப்பகுதியை ஆண்டு வந்தது. அவர்கள் படையெடுத்து ஸ்ரீ விஜயா வம்சத்தினர் ஆட்சி செய்த சுமத்ரா பகுதியைக் கைப்பற்றத் தொடங்கினர். மாஜாபாஹிட் அரசுக்கு எதிராகப் போர் செய்து தோற்றுப்போன பரமேஸ்வரா சிங்கப்பூரில் வந்து தங்கினான். பெலம்பானைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த ஸ்ரீ விஜயா வம்சத்தைச் சேர்ந்தவன் பரமேஸ்வரா. திரி புவனா சங் நீலா உத்தாமாவாவின் கொள்ளுப் பேரன்.
அந்தக் காலகட்டத்தில் சயாமியப் படையினர் சிங்கப்பூரைக் கைப்பற்றி தமாகி என்ற ஆளுநரை சிங்கப்பூரை ஆட்சி செய்ய நியமித்தனர். அவருடன் நட்புறவுடன் பழகிப் பின்னர் அவரைக் கொலை செய்த பரமேஸ்வரா சிறிது காலம் சிங்கப்பூர் அருகில் வரும் கப்பல்களைச் சூறையாடி ஒரு கடல் கொள்ளைக்காரன் போல் வாழ்ந்து வந்தான். மீண்டும் மஜாபாஹிட் படையெடுப்பினால் மலாயாவில் இருக்கும் மூவாரில் ஒளிந்து கொண்டு தனக்கென்று ஒரு அரசு அமைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.
பின்னர் சிறு கிராமமாக இருந்த மலாக்காவைத் தலைநகரமாக நிர்மாணித்து ஆட்சி செய்தான். ஒரு இஸ்லாமிய இளவரசியைத் திருமணம் செய்து கொண்டதால் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறி இஸ்கந்தர் ஷா என்று பெயர் மாற்றிக் கொண்டான்.
மலாக்கா சுல்தானுக்குச் சொந்தமாக இருந்த சிங்கப்பூர் கடைசியாக ஜோகூர் சுல்தானுக்குச் சொந்தமாயிற்று. 1511 ஆம் ஆண்டு மலாக்கா போர்த்துக்கீசியர்களின் குடியேற்றப் பகுதியாக மாறியதும் சிங்கப்பூரின் முக்கியத்துவம் குறைந்தது. மீண்டும் ஒரு சிறிய மீன்பிடிக் கிராமமாக மாறியது.
இந்த பழைய கதைகள் சில மாற்றிச் சொல்லப்பட்டு வருகின்றன. சங் நீலா உத்தாமா தான் வேட்டையாடும்போது பார்த்த விலங்கு சிங்கம் என்று நினைத்ததால் சிங்கப்பூர் என்ற பெயர் வந்தது என்று எளிமையாக ஒரு கதை சொல்லப்படுகிறது. இவை நாடோடிக் கதைகள் போல் வாய் வழியாகச் சொல்லப்பட்டவை. ஆனால் கண்டிப்பாக சிங்கம் போன்ற ஒரு விலங்கைப் பார்த்ததால்தான் சிங்கப்பூர் என்று பெயர் மாற்றம் கண்டது.
இத்தனை முறை சிங்கம் என்று குறிப்பிட்டிருந்தோமே உண்மையில் சிங்கங்கள் சிங்கப்பூர் காடுகளில் வசித்ததா? கண்டிப்பாக இல்லை. புலிகள், சிறுத்தைகள், காட்டுப் பூனைகள் போன்ற விலங்குகள் இருந்தன. 1920 ஆம் ஆண்டு வரை புலிகள் வேட்டையாடப்பட்டு வந்தன. புலி வேட்டை, பின்னர் எலி வேட்டை போன்றவை நடந்தன.
ஏதோ தூரத்தில் திரிந்த ஒரு மிருகத்தைப் பார்த்து இது என்ன மிருகம் என்று உத்தாமா கேட்க, பக்கத்தில் இருந்த மந்திரி அல்லது கப்பல் தலைவன், மாலுமி, அவனது வேலைக்காரன் இவர்களில் யாராவது அதைச் சரியாகப் பார்க்காமல் சிங்கம் என்று சொல்லியிருக்கலாம். எப்படியோ இந்தத் தவறு புலியூரா என்ற பெயர் கிடைக்காமல் சிங்கப்பூரா என்று பெயர் கிடைத்தற்குக் காரணம் ஆயிற்று.
மலாக்கா என்ற பெயர் கூட மெலாக்கா என்ற மரத்தின் பெயர். மெலாக்கா மரம் என்ன மரம் என்று யோசிக்க வேண்டாம். அந்த ஓசைக்கு ஒத்ததாக ஒரு மரத்தின் பெயர்தான். அது நெல்லிக்காய் மரம். பரமேஸ்வரா இந்த நெல்லிக்காய் மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருக்கும்போது ஒரு சிறிய மான் தன்னைத் துரத்திய வேட்டை நாயிடமிருந்து சண்டையிட்டு தப்பித்து அந்த வேட்டை நாயைப் பக்கத்தில் இருந்த ஆற்றில் தள்ளி விட்டது. இதைப் பார்த்த பரமேஸ்வரா ஆஹா இந்த ஊரில் இருக்கும் மான் குட்டிக்குக் கூட இத்தனை துணிச்சல், வீரம் இருக்கிறதே, இந்த ஊரையே தன் வசிப்பிடமாகக் கொள்ளலாமே என்று தான் தங்கியிருந்த மரத்தின் பெயரையே அந்த ஊருக்கு வைத்து அது பின்னர் மலாக்கா என்ற பெரிய துறைமுகப் பட்டணமாக சரித்திரத்தில் இடம் பெற்றது.
தொடரும்…