சுவாமிஜி வாழ்வில் நடந்தவை …..
ஒரு முறை சுவாமிஜி இருக்கும் மடத்திற்கு வந்த ஒரு சீடர் அங்கே இருந்த களஞ்சியப் புத்தகங்களின் தொகுதியை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
அவர் விவேகானந்தரிடம் வியப்புடன் கூறினார் ‘ இந்தப் புத்தகங்கள் எல்லாவற்றையும் ஒரு பிறவியில் படித்து முடிப்பது இயலாத காரியம்’ என்றார். சுவாமி விவேகானந்தரோ அந்தப் புத்தகங்களில் பத்துப் பகுதிகளை முடித்துவிட்டுப் பதினோராம் பகுதியைப் படித்துக் கொண்டிருக்கிறார் என்பது சீடருக்குத் தெரியாது.
சுவாமி விவேகானந்தரோ அந்த சீடரிடம் ‘ என்ன சொல்கிறா நீ? முதல் பத்துப் பகுதிகளில் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேள். நான் பதில் சொல்கிறேன்?’ என்றார்.
சீடரோ திகைப்புடன் ‘ என்ன, இந்த நூல்களை எல்லாம் படித்து விட்டீர்களா?’ என்றார்.
சுவாமிஜியோ ‘படிக்காமல் கேள்வி கேட்கச் சொல்வேனா? என்றார்.
சீடர் சுவாமிஜி சொல்வதால் அவரிடம் புத்தகத்தில் முதல் பத்துப் பகுதிகளிலிருந்து வெவ்வேறு விதமாக பல கேள்விகளை வெவ்வேறு பக்கங்களிலிருந்தும் கேட்டார்.
சுவாமிஜியோ அசராமல் அனைத்திற்கும் பதிலும் விளக்கமும் சில இடங்களில் அந்த புத்தகத்தின் மொழியிலேயே அவற்றை எடுத்துக் கூறி அசர வைத்தார்.
சீடர் புத்தகத்தை வைத்து விட்டு ‘இது மனித ஆற்றலால் முடியாத காரியம்!’ என்றார்.
ஆனால் சுவாமிஜியோ ‘ஏன் முடியாது. இதோ பார், பிரம்மச்சரியத்தை (கட்டுக்கோப்பான ஒழுக்கத்தையும் தியானத்தையும் வழுவாமல் கடைபிடித்தல்) ஒழுங்காக கடைப்பிடிப்பது ஒன்றால் மட்டுமே எல்லா கலைகளும் கணநேரத்தில் கைவசப்படும்; ஒருமுறை கேட்பவற்றைத் தவறின்றி நினைவில் கொள்ளவும், மீண்டும் அதை அப்படியே ஒப்பிக்கவும் முடியும். இத்தகைய பிரம்மச்சரியம் இல்லாமையால் தான் நமது நாட்டில் எல்லாம் அழிவின் எல்லைக்கே வந்துவிட்டன’ என்றார்.
இந்த பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பதால் உண்டாகும் சக்தியை பற்றி சுவாமி விவேகானந்தர் மேற்கொண்டு விளக்குகிறார். குறைவாகவோ அதிகமாகவோ ஒவ்வொரு மனிதனிடமும் ஓஜஸ் (மனித ஆற்றல் அனைத்தும் ஓர் இடத்தில் குவியும் சக்தி) சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
உடலில் செயல்படுகின்ற எல்லா ஆற்றல்களும் அவற்றின் மிகவுயர்ந்த நிலையில் ஓஜஸாக மாறுகின்றன. ஒரு சக்திதான் இன்னொரு சக்தியாக மாறுகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். வெளியில் மின்சாரமாக, காந்த சக்தியாகச் செயல்படுகின்ற அதே சக்தி தான் அகச் சக்தியாக மாறுகிறது. தசைச் சக்தியாக செயல்படுபவைதாம் ஓஜஸாக மாறுகிறது. அதே சக்தி தான் பாலுறவு சக்தியாக, பாலுணர்ச்சியாக வெளிப்படுகிறது.
இவ்வகையில் வெளிப்படும் சக்தியை கட்டுப்படுத்தினால் எளிதில் ஓஜஸாக மாறுகிறது. நம்மிடம் இருப்பது ஒரே சக்தி தான். அதை தான் நாம் பல்வேறு நிலைகளில் உபயோகிக்கிறோம். எனவே எவ்வெவற்றிர்கு சக்தியை செலவிடவேண்டும் என்பதில் தெளிவு பெற வேண்டும்.
ஒழுக்கமுடைய ஆண்களும் பெண்களும் மட்டுமே ஓஜஸை மேலே எடுத்துச் சென்று மூளையில் சேமிக்க முடியும். அதனால் தான் பிரம்மச்சரியம் மிகச் சிறந்த ஒழுக்கமாகக் கருதப்படுகிறது. பிரம்மச்சரியத்திலிருந்து வழுவினால் ஒருவனிடமிருந்து ஆன்மீகம் நீங்கி விடுவதையும் மனவலிமையையும் ஒழுக்க வீரியத்தையும் அவன் இழந்துவிடுவதையும் உணர முடியும்.
இந்தக் காரணத்தினால் தான் பெரிய ஆன்மீக வீரர்களைத் தந்துள்ள எல்லா மதங்களும் சிறிதும் வழுவாத பிரம்மச்சரியத்தை எப்போதும் வற்புறுத்துவதைக் காண்கிறோம். இதே காரணத்தினால் தான், திருமணம் செய்து கொள்ளாத துறவியர் தோன்றினர்.
எண்ணம், சொல், செயல் அனைத்திலும் அப்பழுக்கற்ற பிரம்மச்சரியம் (கட்டுக்கோப்பான ஒழுக்கத்தையும் தியானத்தையும் வழுவாமல் கடைபிடித்தல்) அவசியம்.