Home » உடல் நலக் குறிப்புகள் » நாம் மறந்து போனவை!!!
நாம் மறந்து போனவை!!!

நாம் மறந்து போனவை!!!

நாம் மறந்து போனவை உணவுவகைகள்:-

நம் முன்னோர்கள் பலர் வயதில் ஆரோக்கிய மாக வாழ்ந்ததற்கு அவர்களுடைய உணவுப் பழக்கமே முக்கியக் காரணம். அவர்கள் உணவையே மருந்தாக உட்கொண்டதால்தான் எந்த நோய்நொடியும் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர். நாம் மறந்துபோன அந்த மருத்துவ உணவுகளில் சில இங்கே…

உடல் மெலிவாக உள்ளவர்களுக்கு மணத்தக்காளித் துவையல் :

தேவையானவை: மணத்தக்காளிக் கீரை – ஒரு கட்டு, மிளகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, பூண்டு – 4 பல், இஞ்சி – ஒரு துண்டு, தேங்காய் – ஒரு கீற்று, கடலைப் பருப்பு – ஒரு கைப்பிடி, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவைக்கு.

எப்படி செய்வது: கீரையை நன்றாகச் சுத்தம்செய்து, மஞ்சள்தூள் சேர்த்து வெறும் வாணலியில் போட்டு வதக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கீரை தவிர்த்து மற்ற அனைத்துப் பொருட்களையும் போட்டு நன்றாக வதக்கவும். வதங்கியதும், கீரையையும் அதில் போட்டு வதக்கி, துவையலாக அரைக்கவும். சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிடலாம்.

இதன் மருத்துவப் பயன்: குடல், வாய், நாக்கு, தொண்டையில் ஏற்படும் புண்களுக்கு மிகச்சிறந்த நிவாரணி. உடல் மெலிவாக உள்ளவர்களுக்கு ஊட்டம் தரும். குடியால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சாப்பிட, கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டு எடுக்கும்.

சளி, இருமல் போக காராமணி நெல்லி ரசம்

தேவையானவை: காராமணி – 200 கிராம், நெல்லிக்காய் – கால் கிலோ, மிளகு, சீரகம் – தலா அரைத் தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் – 6, பூண்டு – 10 பல், மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி, எண்ணெய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு – தேவைக்குத் தக்கபடி.

எப்படி செய்வது: ஒரு லிட்டர் தண்ணீரில் காராமணியை நன்றாக வேகவைத்து, தண்ணீரை மட்டும் தனியாக வடித்து எடுக்கவும். விதை நீக்கிய நெல்லிக்காயுடன் காராமணி வேகவைத்தத் தண்ணீரைக் கொஞ்சமாக ஊற்றி, மிக்ஸியில் விழுதாக அடித்து எடுத்துச் சாறு பிழியவும். பின்னர், நெல்லிக்காய் சாறையும் காராமணி வேகவைத்தத் தண்ணீரையும் ஒன்றாகக் கலந்துகொள்ளவும். மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை வெறும் வாணலியில் லேசாக வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பொடித்துவைத்துள்ள மசாலாவைப் போட்டு நன்றாக வதக்கவும். வதங்கியதும், நெல்லிச் சாறுக் கலவையை ஊற்றி, உப்பு சேர்த்து லேசான தீயில் வைக்கவும். ரசத்தை ஒருபோதும் கொதிக்கவிடக் கூடாது. நுரை பொங்கியதும் இறக்கிவிட வேண்டும்.

இதன் மருத்துவப் பயன்: புளி, தக்காளியினால் செய்யப்படும் ரசம், ரத்தத்தைச் சுண்டச் செய்யும். ஆனால், இந்தக் காராமணி நெல்லி ரசம் ரத்த உற்பத்தியை அதிகரிக்கும். ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும். சளி, இருமல், வறண்ட சருமம், சைனஸ் போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும். களைப்பு, சோர்வைப் போக்கி சுறுசுறுப்பு தரும்.

நினைவுத் திறனை மேம்படுத்த வல்லாரை வத்தக்குழம்பு

தேவையானவை: வல்லாரை – 4 கைப்பிடி, மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி, சீரகம், வெந்தயம் – தலா அரை தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் – 8, பூண்டு – 10 பல், சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி, எலுமிச்சைச்சாறு – 2 தேக்கரண்டி, கத்தரிக்காய் – 100 கிராம், மல்லித் தூள் – ஒரு தேக்கரண்டி, எண்ணெய் – 2 தேக்கரண்டி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு – தேவைக்கு.

எப்படி செய்வது: வல்லாரையைச் சுத்தம் செய்து, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வெறும் வாணலியில் வதக்கி தனியாகவைத்துக்கொள்ளவும். கத்தரிக்காயைச் சின்னச் சின்னதாக அரிந்து, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வெறும் வாணலியில் வதக்கித் தனியாக எடுத்துவைக்கவும். வெந்தயம், சீரகம், காய்ந்த மிளகாய், சிறியதாக அரிந்த பூண்டு மற்றும் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை வெறும் வாணலியில் நன்றாக வதக்கி, மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அரைத்துவைத்துள்ள விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர், கத்தரிக்காயையும் அதில் போட்டு வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். முதல் கொதி வந்ததும் எலுமிச்சைச் சாறை ஊற்றவும். நன்றாகக் கொதித்து, வத்தல் குழம்பு பக்குவம் வந்ததும் வல்லாரையை அதில் போட்டு, கீழே இறக்கவும்.

மருத்துவப் பயன்: நினைவுத் திறனை மேம்படுத்தும். வலிப்பு நோயைக் குணப்படுத்தும். சுவாசம் மற்றும் இதயப் பிரச்னைகளுக்கு நல்லது.

மூட்டு வலி போக்க பஞ்சமுட்டிக் கஞ்சி

தேவையானவை: பச்சரிசி – 2 கைப்பிடி, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு, உளுந்து – தலா 2 தேக்கரண்டி, மிளகு – கால் தேக்கரண்டி, சீரகம் – அரை தேக்கரண்டி, உப்பு – தேவைக்கு.

செய்முறை: உப்பு தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் வெறும் வாணலியில் சிவக்க வறுத்து தனித்தனியாக எடுத்துவைக்கவும். பாத்திரத்தில் தேவையான அளவுக்குத் தண்ணீர் ஊற்றி பச்சரிசியை மட்டும் வேகவைக்கவும். முதல் கொதி வந்ததும் கடலைப் பருப்பையும், இரண்டாவது கொதி வந்ததும் துவரம் பருப்பையும் போட்டு வேகவைக்கவும். அதேபோல், மூன்றாவது கொதி வந்ததும் உளுந்தையும், நான்காவது கொதி வந்ததும் பாசிப் பருப்பையும் போட்டு வேகவைக்கவும். அனைத்தும் நன்றாக வெந்ததும் மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கஞ்சியில் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கீழே இறக்கவும்.

மருத்துவப் பயன்: வாத நோய்களுக்குப் பலன் தரும். நடக்க முடியாமல் மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு ஏற்ற உணவு. அதேபோல் இரண்டு வயதாகியும் நடக்க முடியாத குழந்தைகளுக்கு ஊட்டம் அளித்து, நடக்க உதவி செய்யும். ஃபுட் பாய்சன் ஏற்பட்டால், இரண்டு வேளை இந்தக் கஞ்சி சாப்பிட சரியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top