விக்கிரமாதித்தன் கதை
தலையும் உடலும்
விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்ட
வேதாளத்தைப் பிடிக்கச் சென்று, பெரும் போராட்டத்திற்கு பிறகு வசமாகப்
பிடித்துக் கொண்டான். தோளில் வேதாளத்தை சுமந்தபடி குகையை விட்டு
நடக்கத் தொடங்கினான்.
அவனது பராக்கிரமத்தை பார்த்து வியந்தாலும் வேதாளம் தான் தப்பித்து
கொள்வதற்கு வழி தேடிய வண்ணமே இருந்தது. அதனால் வேதாளம் மீண்டும்
ஒரு கதையை விக்கிரமாதித்தனுக்குச் சொல்லத்துவங்கியது.
விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்!
முன்னொரு காலத்தில் பனாரஸ் நாட்டை சதுர்சன் என்ற அரசன் ஆண்டு
வந்தான். அவனுக்கு நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது.
அரன்மனையில் இருந்த துர்கா தேவியிடம் பல நாட்கள் இக்குறை நீங்க வேண்டி
பூஜை செய்து வந்தான். அந்த பூஜா பலனால் அரசனுக்கு ஒரு மகன் பிறந்தான்.
அவனுக்கு வஜ்ரவீரன் என்று பெயரிட்டான்.
வஜ்ரவீரன் வளர்ந்து பெரியவன் ஆனான். அவனுக்கு அரசவையின் சலவைத்
தொழிலாளியான ருத்ரராஜன் நண்பனாக இருந்தான்.
ஒரு முறை நண்பன் வீட்டிற்குச் சென்ற வஜ்ரவீரன் அவன் வீட்டருகே ஒரு
அழகிய பெண்ணை பார்த்தான். அந்த பெண் மீது மோகம் கொண்டு அவளை
மனமுடிக்க விரும்பினான். இதை தன் நண்பன் ருத்ரராஜனிடம் தெரிவித்தான்.
ஆனால் ருத்ரராஜனோ அந்தப் பெண்ணை ஒரு தலையாகக் காதலித்து வந்தான்.
இந்நிலையில் நாட்டின் யுவராஜனும் தனது நண்பனுமான வஜ்ரவீரன்
அப்பெண்ணை மணக்க விரும்பியதை அறிந்து வருந்தினான். ஆனால்
நண்பனுக்காக தன் ஒருதலைக் காதலை விட்டுக்கொடுக்க முடிவு செய்தான்.
அதனால் தனது விருப்பத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நண்பனுக்காக
விட்டுக் கொடுத்தான்.
ஆனால் வஜ்ரவீரனுக்கோ தனது தந்தை தன் விருப்பத்தை நிறைவேற்றுவாரா
என்று கவலை உண்டானது. அவன் துர்காதேவியிடம் சென்று “அம்மா துர்க்கா!
என் தந்தை நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்து வைத்தால், வரும்
பௌர்ணமி தினத்தில் என் தலையை உனக்குக் காணிக்கையாக்குகிறேன்” என்று
வேண்டினான்.
தனது நண்பனின் மனக்கவலையை உணர்ந்து கொண்ட ருத்ரராஜன் அவனைத்
தேற்றினான். நண்பனுக்காக தானே அரசனிடம் சென்று விஷயத்தை கூறலானான்.
“அரசே! தங்கள் மகனும் எனது நன்பனுமான வஜ்ரவீரனுக்கு
சலவைத் தொழில் புரியும் ஒரு பெண்ணின் மீது விருப்பம் ஏற்பட்டிருக்கிறது.
அவன் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான். தாங்கள்
அனுமதிப்பீரா என்ற தயக்கத்தில் இருக்கிறான். அதை தங்களிடம் தெரிவித்துப்
போகவே வந்தேன்” என்றான்.
மன்னனோ “என் மகனின் மகிழ்ச்சி தான் எனக்கு முக்கியம். அதனால் அவன்
விரும்பும் பெண்ணையே அவனுக்கு மணமுடித்து வைக்கிறேன்” என்றார்.
இதனைக் கேட்ட வஜ்ரவீரன் பெருமகிழ்ச்சி கொண்டான். பெரு விமரிசையாக
வஜ்ரவீரனுக்கும் அவன் விரும்பிய பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.
இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையைத் துவங்கினர். இந்நிலையில் பௌர்ணமி
நாள் நெருங்கியது. வஜ்ரவீரனுக்கு துர்காதேவியிடம் தன் தலையை
காணிக்கையாக கொடுப்பதாய் வாக்கு கொடுத்தது ஞாபகம் வந்தது.
இனிமையான வாழ்க்கையை விட்டு பிரியவேண்டிய கட்டாயம் வந்தது. எந்தப்
பெண்ணோடு வாழ்வதற்க்காக பிரார்தனை செய்தானோ அந்தப் பெண்ணை
உடனேயே பிரியும் நிலை அவன் பிரார்த்தனையாலேயே உண்டானது.
மணமுடித்த பெண்ணோடு வாழ்வதா அல்லது துர்காதேவிக்கு கொடுத்த வாக்குப் படி தன் தலையை காணிக்கையாக்கி சாவதா என்ற குழப்பத்தில் ஆழ்ந்தான் வஜ்ரவீரன்.
அன்று பௌர்ணமி. வஜ்ரவீரன் ஒரு முடிவெடுத்தான்…
துர்காதேவியிடம் கொடுத்த வாக்கை காப்பாற்ற துனிந்தான். ஆனால் தன் நண்பனிடத்திலும் மனைவி இடத்திலும் இது பற்றி எதுவும் சொல்லிக் கொள்ளாமல் இருவரையும் தன்னுடன் கோவிலுக்கு வருமாறு அழைத்தான்.
மூவரும் சேர்ந்து துர்க்காதேவி கோவிலுக்குச் சென்றனர். வஜ்ரவீரன் இருவரையும் கோவில் வாசலில் இருக்கச் செய்து தான் மட்டும் கோவிலுக்குள் சென்று கதவை சார்த்திக் கொண்டான்.
அவன் துர்காதேவியிடம் “அண்ணையே உன் மீது பேரண்பு கொண்டதால் உனக்கு அளித்த வாக்கு படி என் தலையை உனக்கு காணிக்கையாக்குகிறேன். இனி என் மனைவியை நீ தான் காக்க வேண்டும்” என்று சொல்லி தன் தலையை வெட்டி அம்மனின் காலடியில் இட்டு மாண்டான்.
வஜ்ரவீரனின் மனைவியும் நண்பனும் வெளியே காத்திருந்தனர். உள்ளே போய் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் நண்பன் ருத்ரராஜன் கோவிலுக்குள் சென்று பார்த்தான். அங்கே அவன் கண்ட காட்சி பேரதிர்ச்சியாய் இருந்தது.
நண்பன் தன் தலையை துண்டித்து இறந்து போய் இருந்தான். இந்த காட்சியைக் கண்டு நிலை குலைந்து போன நண்பன் எப்படி வெளியே இருக்கும் அவன் மனைவியிடம் சொல்வேன் என்றும், அவள் என்னை தவறாக நினைத்தால் என்ன செய்வது என்றும் பெரிதும் வருந்தினான்.
தன் உயிருக்குயிரான நண்பனின் இந்த நிலையை பார்த்துவிட்டு நான் மட்டும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்று தீர்மானித்த ருத்ரராஜன் தானும் தன் தலையை துர்க்காதேவிக்கு
காணிக்கையாக்கி மாண்டான்.
தன் கணவனும் அவர் நண்பனும் கோவிலுக்குள் சென்று வெகு நேரமாகியும் வெளியே
வராததால் வஜ்ரவீரனின் மனைவி கோவிலுக்குள் சென்று பார்த்தால். அங்கே இருவரும் தலை துண்டிக்கப்பட்டு கிடந்த காட்சி பார்த்து அழத்துவங்கினாள்.
அவள் துர்கையிடம் முறையிட்டாள் “என் கணவன் இல்லாத வாழ்க்கை எனக்கு எதற்கு, அதனால் என் தலையையும் நீயே எடுத்துக்கொள்” என்று சொல்லி தனது தலையை துண்டிக்க முற்பட்டாள்.
அப்போது அங்கே ஒரு பேரொளி தோன்றியது. துர்க்காதேவி அவள் முன் தோன்றினாள். “பெண்ணே! அவசரப்படாதே! நில். என் பக்தன் வஜ்ரவீரனின் பக்தி கண்டு நான் மகிழ்ந்தேன். ஒருவருக்காக ஒருவர் தியாகம் செய்யத் துணியும் உங்களை கண்டு பூரித்தேன்! பக்தர்களை வாழவைப்பதே என் வேலை உங்கள் தலைகளை காணிக்கை வாங்குவது அல்ல. எனவே நான் அவர்களுக்கு
உயிர் கொடுக்கிறேன். பெண்ணே! இவர்கள் இருவரது தலையையும் அவர்கள் உடலோடு பொருத்து. அடுத்த வினாடி அவர்கள் உயிர் பெற்று எழுவார்கள்” என்று கூறி மறைந்தாள் துர்க்காதேவி.
அப்பெண்ணும் இறந்தவர்களின் தலைகளை ஒன்றாகப் பொருத்தினாள். இருவரும் உடனே உயிர் பெற்று எழுந்தனர். அப்போது தான் அவள் செய்த தவறு புரிந்தது. பதற்றத்தில் தன் கணவனான வஜ்ரவீரனின் தலையை ருத்ரராஜனின் உடலிலும், ருத்ரராஜனின் தலையை வஜ்ரவீரனின் உடலிலும் பொருத்தி விட்டாள்.
இதுவரை கதை சொல்லி வந்த வேதாளம் கதையை நிறுத்தியது. அது விக்கிரமாதித்தனைப் பார்த்து கேட்டது “நீதியில் சிறந்த விக்ரமாதித்தா! எங்கே சொல், இந்தப் பெண் இப்போது யாரை கணவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்?” என்றது.
“கணவனின் தலை எந்த உடலில் இருக்கிறதோ அந்த உடலைத் தான் அந்த பெண் தன் கணவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும். தலையே பிரதானம். ஏனெனில் தலை தான் ஒருவரது அடையாளத்திற்கும், எண்ணத்திற்கும் பிரதானமானது.” என்றான் விக்கிரமாதித்தன்.
இதைக் கேட்ட வேதாளம் “சரியாகச் சொன்னாய் விக்ரமாதித்தா! ஆனால் நீ வாய் திறந்து பேசியபடியால் நான் செல்கிறேன்” என்று கூறி மீண்டும் விக்ரமாதித்தன் பிடியிலிருந்து பறந்து சென்றது.