Home » படித்ததில் பிடித்தது » திருவள்ளுவர் பற்றி!!!
திருவள்ளுவர் பற்றி!!!

திருவள்ளுவர் பற்றி!!!

திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத இரகசியங்கள்

திருவள்ளுவரைப் பற்றி வாழ்க்கைக்… குறிப்பு எழுத சான்றுகள் எதுவுமே இல்லை. அவர் மதுரையில் பிறந்தார் என்று சிலரும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்று சிலரும் சொல்கின்றனர். அவர் ஆதி – பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் பொய் சொல்கின்றனர். இவை எதுவுமே உண்மை இல்லை. அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். திருவள்ளுவர் பிறந்து இந்த வருடத்துடன் 2044 ஆண்டுகள் ஆகின்றன.தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாகக் கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தைப் பிரித்து பயன்படுத்துகிறார்கள்.

வள்ளுவர் ஒரு கிறித்துவர், அவர் ஒரு சமண மதத்தவர், அவர் பவுத்தர் என்றெல்லாம் கூட சிலர் நேரத்தை வீணாக்கி ஆய்வு செய்கிறார்கள். அவர் காலத்தில் கிறித்துவ மதமே வடிவம் பெற்ற ஒன்றாக இல்லை என்பதே வரலாற்று உண்மை.

அவரின் குறட்பாக்களில் இருக்கின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு எல்லோருமே சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

பொன்னும் பொருளும் நிறைந்த மூட்டை ஒன்று கேட்பாரற்று இருந்தால், எல்லோருமே அதை உரிமை கொண்டாட நினைப்பார்கள் இல்லையா? அது போலத்தான் இது. வள்ளுவரின் தோற்றமும் கூட கற்பனையாக வரையப்பட்டதுதான். அவருக்கு வாசுகி என்ற மனைவி இருந்ததாகச் சொல்வதற்கும் சான்றுகளே இல்லை.

மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு. 300க்கும் கி.பி. 250க்கும் இடைப்பட்டது.

அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது. மதுரையை “ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்’ என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்ளான்.

கிடைக்கின்ற செய்திகளையெல்லாம் இணைத்துப் பார்க்கின்றபோது, வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்பதும், அவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது.

ஆனால் அவரைப் பற்றிய அத்தனை செய்திகளும் அழிக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப் பற்றியெல்லாம் சான்றுகள் இருக்கிறபோது, இவரைப்பற்றி எதுவும் இல்லாமல் இருப்பது வியப்புதான்.

அவர் கற்பனையான கடவுளர்கள் எவரையும் ஏற்கவில்லை. சாதி பிரிவினையையும், விலங்குகளை பலியிட்டு நடத்தும் வேள்விகளையும் எதிர்த்தவர். பொய் பேசாமல், களவு செய்யாமல், நாகரிகமுடன் வாழ எண்ணினார்.

அனைவரையும் கற்கும்படி வலியுறுத்தினார். இயற்கையை நேசித்தார். குடும்ப வாழ்க்கையை முறையாகவும் பண்புடனும் பயன்படுத்தும்படி கூறினார். ஆட்சி செய்கிறவர்கள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இக்கருத்துக்களே அவர் எழுதிய 1330 குறட்பாக்களில் உள்ளன.

இவர் சிந்தனைகள் உலக மக்கள் அனைவருக்குமே உதவும் வகையில் இருக்கின்றன. எனவே தான் திருக்குறள் உலகப் பொது மறை எனப்படுகிறது.

இவர் தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய புலவர்களுக்கும் இருந்துள்ளது என்பதை காலம் காலமாய் வழங்கி வரும் சில கதைகளும், கி.பி.1050இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை’ என்ற நூலில் உள்ள சில பாடல்களும் தெரிவிக்கின்றன. அக்கதைகளில் ஒன்று இதுதான்.ஆனால் வள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும் இடையே ஏதோ ஒரு வகையான மோதல் நடந்துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.

சாதி, மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே ‘திருவள்ளுவ மாலை’யில் சில பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடல்:

“ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் – ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று

சாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள்.

ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார் என்பதுதான் இப்பாடலின் பொருள்.

இக்கருத்துக்களையும், திருக்குறளையும் படித்து புரிந்து கொள்ளும்போது, திருவள்ளுவர் சமூக சீர்த்திருத்த அறிஞராக மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுவார்.

உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கித் தரவில்லை.

தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top