உலகம் தோன்றிய காலத்திலேயே அவதரித்த ரிஷிகளில் அத்திரியும் ஒருவர். சிருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவரின் மானசபுத்திரர் இவர். இவருடைய மனைவி அனுசூயா.
பதிவிரதையான அனுசூயாவால் அத்திரி முனிவருக்கும், அத்திரி முனிவரால் அனுசூயாவுக்கும் பெருமை. தவசக்தியில் இருவருமே சளைத்தவர்கள் அல்ல. வேத புராண இதிகாசங்கள் எல்லாவற்றிலும் இத்தம்பதிகள் உயர்வாகப் பேசப்பட்டுள்ளனர்.
ராமாயணத்தில் அத்திரி முனிவரின் ஆஸ்ரமத்திற்கே ராமனும் சீதையும் முதன்முதலில் சென்றனர். சித்திரகூட பர்வதத்திலிருந்து காட்டிற்குள் சென்ற ராமனும் சீதையும், அத்திரி முனிவர் ஆஸ்ரமத்தில் ஒருநாள் தங்கினர்.
அப்போது ராமசீதா தம்பதிகளிடம் அத்திரி முனிவர் தன் மனைவி அனுசூயாவை காட்டி, ராமா! அனுசூயா கோபம் என்பதையே அறியாதவள். அசூயை என்னும் சொல்லுக்கு மனதில் சிறிதும் விருப்பம் இல்லாதவள் எனப்பொருள். இவள் மண்ணுயிர்கள் எல்லாம் போற்றி வணங்கும் பெருமை கொண்டவள். குணவதி, தர்மவதி, பதிவிரதா தர்மத்தில் தலைசிறந்தவள். தர்மமும் புண்ணியமும் நிறைந்த அனுசூயாவிடம் ஆசிபெறுவீர்களாக!, என்று சொன்னார்.
ஒரு சந்தர்ப்பத்தில் நாட்டில் மழையே பெய்யவில்லை. தொடர்ந்து பத்து ஆண்டுகளாக வறட்சி நிலவியது. எங்கும் தண்ணீர் பஞ்சம். வாயில்லா ஜீவன்களுக்கு பசும்புல் கூட கிடைக்கவில்லை. இந்தக் காட்சியைக் கண்ட அனுசூயாவிற்கு உள்ளம் உருகியது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தான் செய்த தவசக்தியால் கங்கையை வரவழைத்தாள். எல்லா குளங்களையும் நிறைத்தாள். தண்ணீர் பெற்று, பயிர்கள் செழித்து வளர்ந்தன. எங்கும் பசுமை உண்டானதைக் கண்டு மகிழ்ந்தாள்.
ஒருமுறை அனுசூயாவின் தோழியைச் சந்தர்ப்ப வசத்தால் சபித்தார் ஒரு முனிவர். பொழுது விடிந்தால் நீ விதவையாவாய் என்பதே அந்த சாபம். என்ன செய்ய முடியும்? அபலையாய் ஓடி வந்து அனுசூயாவிடம் வந்து நின்றாள் அவள்.
விஷயத்தை சொன்னாள். சாபவிமோசனம் என்பது யார் சாபமிட்டார்களோ அவர்களே தரவேண்டியது என்பதை அறியாதவர்கள் யார்? இருந்தாலும், நட்புக்கு கை கொடுக்க முன்வந்த அனுசூயா தன் தோழியிடம், விடிந்தால் தானே நீ விதவையாவாய்! விடியலே இல்லாமல் செய்து விடுகிறேன் என்று ஆறுதல் சொன்னாள்.
ஒரு நாள் இருநாள் அல்ல. பத்து நாட்கள் விடியாமல் இரவாகவே கழிந்தது. உலகமே திகைத்தது. தேவர்கள் கூடினர். அனுசூயாவிடம் வேண்டிக் கொண்டனர். மீண்டும் பகல்வேளை வரவேண்டுமானால் என் தோழி சுமங்கலியாக வாழ வேண்டும், என்று நிபந்தனையிட்டாள் அனுசூயா.
தேவர்களும் அவ்வாறே வாக்களித்தனர். நினைத்ததைச் சாதித்து தன் தோழியைக் காப்பாற்றினாள். இத்தகைய மகாஉத்தமி அனுசூயாவின் கணவர் அத்தரிமுனிவர் என்ன சாமான்யமானவரா?
அவரும் புகழிலும், தவத்திலும் யாருக்கும் இணையில்லாதவர். உலகிற்கே ஒளிதரும் சூரியனுக்கே வாழ்வு தந்த வள்ளல் அத்திரிமுனிவர்.
ஒருமுறை அசுரர்களில் ஒருவனான ஸ்வர்பானு தன்னைக் காட்டிக் கொடுத்த சூரியதேவன் மீது கோபம் கொண்டான். இவனே கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகுகேதுவாக மாறினான். தன் பகையைத் தீர்த்துக் கொள்ள எண்ணியவன் சூரியனைக் கிரகணமாகப் பிடித்தான். ராகுவின் பாதிப்புக்கு உள்ளாகி ஒளியை இழந்து நின்ற சூரியனுக்கு மீண்டும் ஒளி கொடுத்து காப்பாற்றியவர் அத்திரி முனிவரே.
சூரியன் காலையில் கிழக்கில் உதிக்கிறான். மாலையில் மறைந்து விடுகிறான். உலகமே சூரியனின் வருகைக்காகக் காத்துக் கிடக்கிறது. இரவுநேரத்தில் வெளிச்சம் இல்லாமல் சிரமப்படுவதை எண்ணி வருந்தினார் அத்திரி.
அதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணினார். ஆழமான சமுத்திரத்தின் அடிப்புறத்தில் போய் அமர்ந்தார். தவத்தில் ஆழ்ந்தார். மனுஷ வருஷங்கள் அல்ல. பல தேவவருஷங்கள் தவத்தைத் தொடர்ந்தார். தவக்கனல் அதிகரித்தது. அவருடைய கண்களில் அபார ஜோதி தோன்றியது.
கடல் நீரையும் கிழித்துக் கொண்டு அந்த ஜோதி பூமியையும் விட்டு வேகமாக கிளம்பிச் சென்றது. பூமியை விட்டு நெடுந்தூரம் சென்ற ஜோதியைக் கண்ட படைப்புக் கடவுள் பிரம்மா, அதை அப்படியே நிலை நிறுத்தும்படி திசைகளுக்கு கட்டளையிட்டார்.
பிரம்மாவே நேரில் வந்து, அந்த ஜோதியைத் தன் தேரில் ஏற்றிக்கொண்டு 21 முறை பூமியை வலம் வந்தார். பிரம்மா செய்த ஏற்பாட்டினை இன்றளவும் அந்த ஜோதி செய்து கொண்டிருக்கிறது.
அந்த ஜோதியினைத் தான் இரவில் நிலாவாக வான மண்டலத்தில் காண்கிறோம். இரவிலும் பூமிக்கு ஒளி தரும் சந்திரனைத் தந்த பெருமை அத்திரி முனிவருடையதே.
யாகம் ஒன்றிற்கு அத்திரி சதுரஹம் என்று பெயர். முதன்முதலில் இந்த யாகத்தைச் செய்தவர் இவர் என்பதால் அவர் பெயராலேயே அழைக்கப்பட்டு வருகிறது. மனதில் எண்ணிய எண்ணங்களுக்கு செயல்வடிவம் தரும் மகத்தான யாகம் இது.
இந்த யாகத்தை செய்பவர்கள் வேண்டிய பலனைப் பெற்று வாழ்வர் என்று வேதம் சொல்கிறது. ஆயுர்வேத சாஸ்திரம், ஜோதிடம் போன்ற கலைகளில் அத்திரிமுனிவர் மிகவும் கை தேர்ந்தவர். வைத்திய சாஸ்திரத்திலும், ஜோதிட சாஸ்திரத்திலும் இவரின் பங்களிப்பு சிறப்பானதாகும்.
பிரம்மதேவரின் நகங்களில் இருந்து தோன்றிய விகநஸ மகரிஷி அத்திரியின் மாணவர்.இந்த உலகம் தோன்றிய போதே அவதரித்த இவர், தன் தவவலிமையால் பல்லாயிரம் புத்திரர்களை பெற்றெடுத்தார்.
அவர்கள் தங்களை ஆத்ரேய கோத்திரம் என்று வழங்குகின்றனர். மழை பெய்ய மறுக்கும் இந்த சமயத்தில், மக்களுக்காக அன்று மழையை வரவழைத்த அத்திரி அனுசூயா தம்பதிகளை நினைவில் இருத்தி பிரார்த்திப்போம்.