Home » சிறுகதைகள் » குட்டிக்கதை
குட்டிக்கதை

குட்டிக்கதை

ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க. முனிவர்கிட்ட அந்த 4 பேரும்,”சாமி உலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே அதுக்கு என்ன வழின்னு” கேட்டாங்க.

அதுக்கு அந்த முனிவர் “தெரியலயப்பான்னு” ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு. ஆனாலும் வந்தவங்க விடாம.”என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே!” அப்டின்னு கேட்டாங்க.

அதுக்கு முனிவர் அவங்ககிட்ட “சரி இப்ப நான் உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன். போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு காட்டுறேன். அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லனும்,

கருத்து தப்பா இருந்திச்சின்னா இந்த விமானம் உங்கள கீழ தள்ளிவிட்டுடும்” அப்டின்னாரு. சரின்னு அந்த 4 பேரும் முனிவரோட சேந்து புஷ்பக விமானத்துல ஏறினாங்க.

கொஞ்ச தூரம் போனபிறகு ஒரு எடத்துல ஒரு புலி , குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பெறகு தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு எற தேடி அந்தப் பக்கமா வர ஆரம்பிச்சிச்சி. இந்தப் பக்கமா ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு பசிக்கு தண்ணீர் குடிக்கிறதுக்கு அந்தப் பக்கமா வந்திச்சி. மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி அதக் கொன்னு தானும் சாப்புட்டு தன்னோட குட்டிகளுக்கும் குடுத்திச்சி. அத சாப்புட்ட அந்தப் புலிக் குட்டிங்களுக்கு சந்தோசம். இந்தப் பக்கமா தன் அம்மாவ பரிகுடுத்த மான் குட்டிகளுக்கு வருத்தம். இந்தக் காட்சிய அவங்கிட்ட காட்டின முனிவர் இதப் பத்தி உங்க கருத்து என்னன்னு கேட்டாரு.

அதுக்கு அந்த 4 பேருல ஒருத்தர் “இது ரொம்ப தப்பு. மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சேன்னு சொன்னாரு”. ஒடனே அவர அந்த விமானம் கீழ தள்ளிவிட்டுடுச்சு. அடுத்த ஆளப்பாத்து முனிவர் கேட்டாரு,”ஏம்பா உன் கருத்து என்னன்னு?”, ஏற்கனவே ஒருத்தன் கீழ விழுந்தத பாத்த ஆளு,” இல்ல இது சரிதான், ஏன்னா புலிகளுக்கு இரையாகத் தானே மான்கள் இருக்குது அப்படின்னு சொன்னாரு. ஒடனே அவரையும் விமானம் கீழ தள்ளி விட்டுடுச்சு. இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த அடுத்த ஆளு ரொம்ப உசாரா சொன்னான், “ இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு”. ஒடனே அவனையும் அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி. கடைசியா விமானத்தில இருந்தவனைப் பாத்து கேட்டாரு முனிவர்,”ஏம்பா உன் கருத்து என்னன்னு”, அதுக்கு அவன் ,”தெரியலயே சாமின்னு”, சொன்னான். இந்த மொற அவன அந்த விமானம் கீழ தள்ளல. இரண்டு பேரையும் சொமந்துகிட்டு பயணம் செய்ய ஆரம்பிச்சிச்சி.

நீதி: என்னன்னா நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும் தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது அனாவசியம், அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top