உரோமரிஷி!!!

உரோமரிஷி!!!

அஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் முழுவதும் உரோமம் முளைத்திருந்தபடியால் உரோமமுனி என்று காரணப் பெயர் பெற்றார். ஒரு பிரம்மா இறந்தால் இவருடைய மயிர் ஒன்று உதிரும் இவ்வாறு மூன்றரைக்கோடி பிரம்மா இறந்தால் மட்டுமே இவருடைய வாழ்நாள் முடியும் ஒரு உரோமமுனி இறந்தால் அஷ்டகோண (8 கோண) முனிவருக்கு ஒரு கோணல் நிமிரும் என்று கூறுவர். இவர் கும்பகோணத்தை அடுத்த கூந்தலூரில் தங்கி தவம் செய்து வரும்போது தாடி வழியே பொன் வரவழைத்து அனைவருக்கும் கொடுத்து வந்தார்.

ஒரு சமயம் தாடி வழியே பொன் வருவது நின்றுவிடவே அந்த தாடியை உடனே நீக்கிவிட்டு இறைவனை வழிபட நீராடாமல் திருக்கோயிலை அடைந்தார். நீராடாமல் இறைவனை தரிசிக்க வந்த ரோமமுனியை விநாயகரும் முருகனும் தடுத்தனர். இதை கண்ட சித்தர் வருந்தி கோபுர வாயிலிலேயே நின்றார்.  புறத்தூய்மையை விட அகத்தூய்மையே சிறந்தது என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் இச்சித்தருக்கு கோயிலுக்கு வெளியிலேயே இறைவன் தம் தரிசனத்தை அளித்ததாக கூறுவர். உரோமரிஷி அற்புதமான பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடல்களில் உவமை நயங்களும் சிலேடைகளும் அதிகம்.

உரோமரிஷி இயற்றிய நூல்கள்
உரோமரிஷி வைத்தியம்  1000
உரோமரிஷி சூத்திரம்  1000
உரோமரிஷி ஞானம்  50
உரோமரிஷி பெருநூல்  500
உரோமரிஷி குறுநூல்  50
உரோமரிஷி காவியம்  500
உரோமரிஷி முப்பு சூத்திரம்  30
உரோமரிஷி இரண்டடி  500
உரோமரிஷி ஜோதிட விளக்கம்

நாகாரூடம், பகார சூத்தரம், சிங்கி வைப்பு, உரோமரிஷி வைத்தி சூத்திரம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

தியானச் செய்யுள்
கனிந்த இதயம், மெலிந்த உருவம்
சொரிந்த கருணை, சொல்லில் அடங்குமோ?
அலையும் மனதை அடக்கி,
அருள் அள்ளியே தருவாய்
தாடியில் தங்கம் தந்த தெய்வமே
தங்கள் திருவடி சரணம்

ரோமசித்தரின் பூஜைமுறைகள்: தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அதன் மேல் ரோமரிஷி ஸ்ரீ கயிலாய கம்பளிச் சட்டைமுனி சித்தரின் படத்தை வைத்து அதற்கு முன் மஞ்சள், குங்குமம் இட்டு முதலில் இந்த சித்தருக்காகக் குறிப்பிடப்பட்டிருக்கும் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருகக் கூறி ஜாதி கொண்டு பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பதினாறு போற்றிகள்:
1. கயிலாயத்தில் வசிப்பவரே போற்றி!
2. ஜடாமுடிப் பிரியரே போற்றி!
3. சந்திரனை தரிசிப்பவரே போற்றி!
4. சிவசக்தியாகத் தோன்றுபவரே போற்றி!
5. நந்தி தேவரால் காப்பாற்றப்படுபவரே போற்றி!
6. சிவதாண்டவத்தை தரிசிப்பவரே போற்றி!
7. சங்கீதப் பிரியரே போற்றி!
8. தடைகளை நீக்குபவரே போற்றி!
9. காகபுஜண்டரால் பூஜிக்கப்படுபவரே போற்றி!
10. மகாலக்ஷ்மியின் அருள் பெற்றவரே போற்றி!
11. முருகப்பெருமானை வணங்குபவரே போற்றி!
12. உலகத்தைக் காப்பாற்றுபவரே போற்றி!
13. சூரியன் போன்று காட்சி அளிப்பவரே போற்றி!
14. காலத்தைக் கடந்தவரே போற்றி!
15. தெய்வீகச் சித்தரே போற்றி!
16. கைலாயத்தில் வாசம் செய்யும் ஸ்ரீ உரோமரிஷி முனியே போற்றி! போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான ஓம் ஸ்ரீ உரோமரிஷி முனி சித்தர் ஸ்வாமியே போற்றி என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். பூஜைக்கு நிவேதனமாக இஞ்சி இல்லாமல் மிளகு, சீரகம் கலந்து குழைவாக செய்த வெண் பொங்கல், பழங்கள் தண்ணீர் வைக்க வேண்டும். பின்பு உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். நிறைவாக தீப ஆராதனை செய்யவும்.

உரோமரிஷி சித்தரின் பூஜை பலன்கள்:

இவர் சந்திர கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஜாதகத்தில் உள்ள சந்திர கிரக தோஷங்களை நீக்குபவர், மனம் தெளிவாக இருந்து, மனோலயம் ஏற்பட வேண்டும். என்றால் மனோன்மணி சதக்தி பெருக வேண்டுமென்றால் சந்திரனின் அருள் நமக்குக் கிடைக்க வேண்டும். இவரை முறைப்படி வழிபட்டால்…

1. மன வியாதி, மன அழுத்தம், மனப்புழுக்கம், மன சஞ்சலங்கள் அகன்று மன நிம்மதி கிடைக்கும்,
2. எதிலும் முடிவெடுக்க முடியாமல் தவறான முடிவுகள் எடுப்பது, நீங்கி தெளிவாக முடிவெடுக்க முடியும்.
3. சஞ்சல புத்தி நீங்கும்
4. படிப்பிலும், தொழிலிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் நிலை நீங்கி மகிழ்ச்சி பொங்கும்.
5. தாயார் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தாய், மகன், மகள் பிரச்சினைகள் அகன்று குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

இவருக்கு வெள்ளை வஸ்திரம் அணிவித்து பூஜித்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

இவரை திங்கள் கிழமை வழிபட்டால் விசேட பலன்கள் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top