சவிதா வீட்டில் எந்த சமாதானமும் செல்லவில்லை. நீலவேணி வந்து பேசினாள். ஒன்றும் தேராமல் போகவே பழனியப்பன் வந்தார்.
சவிதாவின் அண்ணனை பார்த்து, சந்துரு, நீ சொல்றது சரிதான் பா. அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணி வை சவிதாவுக்கு. ஆனா ஒன்னு நினைச்சிப் பாரு. உன் தங்கச்சி இந்த ஆராய்ச்சியில வேலை செய்தா பிரபலமாயிடுவா. அந்த பெருமை நாளைக்கு அவனை கட்டிக்கப்போறவனுக்கும் தானே. உனக்கும் மாப்பிள்ளை பாக்கறுது சுலபமாயிடும் இல்லையா.
சார் நீங்க சொல்றது சரி. ஆனா கல்யாண வயசுல வீட்டை விட்டு தனியா மூனு மாசம் நாலு மாசம்னு போனா ஊர் என்ன சொல்லும்.
தம்பி இவங்க அஞ்சு பேரோட நானும் போறேன். கரிகாலன் சாரும் வர்றாரு. இவங்க பாதுகாப்புக்கு நான் உத்திரவாதம். என்ன சொல்றீங்க.
சவிதாவின் அப்பா, சரி சார். நீங்க இவ்வளவு சொல்றதால நான் ஒத்துக்கறேன். ஆனா பின்னாடி எந்த பிரச்சனையும் வரக்கூடாது, என்றார் இருமனதுடன்.
சவிதா ஹாலின் ஒரத்தில் என்னைப்பற்றியா பேசுகிறார்கள் என்ற மாதிரி முக பாவனையுடன் இருந்தாள். நீலவேணி அவள் காதில் டன் என்றால் உற்சாகமாக.
கவலைப்படாதீங்க சார். உங்கப் பொண்ணு பத்திரமா வீடு வந்து சேருவா என்று தான் காப்பாற்ற முடியாத ஒரு விஷயத்திற்கு உத்திரவாதம் தந்துவிட்டுச் சென்றார்.
சவிதா சந்தோஷமாக தன் கருப்பு ட்ராலியை தேடி எடுத்து சுத்தம் செய்யத் துவங்கினாள்.
நீலவேணியின் தந்தை உற்சாகமாக, அவசியம் போயிட்டு வாம்மா. இது உனக்கு வாழ்நாளில் ஒருமுறை வரும் வாய்ப்பு என்றார். அவரும் சில புத்தகங்கள் எடுத்து வைத்துக் கொண்டு நீ தஞ்சாவூர் சரஸ்வதி மகாலில் இருந்து உன் ஆராய்ச்சியை ஆரம்பிக்கலாம். அதில்லாம ப்ராஜெக்ட் மதுரையில் பல புத்தகங்களை கணினியில் மின் புத்தகமா மாத்தியிருக்காங்க. நான் என்ன பண்றேன் உனக்கு ஒரு லாப்டாப் கம்ப்யூட்டர் வாங்கித்தரேன். எல்லா தகவல்களையும் அதில் சேகரித்துக் கொண்டே வா என்றார்.
தாங்கயூ டாடி என்று அணைத்துக் கொண்டாள் தந்தையை.
அம்மாவோ, இதெல்லாம் தேவையா. தனியா போய் சாப்பாடுக்கு கஷ்டப்பட்டுக்கிட்டு என்றார்.
அம்மா இது ஒரு ரிசர்ச் ட்ரிப் இல்லை. என்னை பொருத்தவரைக்கும் அட்வென்ச்சர் டிரிப்.
என்ன அட்வென்ச்சரோ. அதென்ன இதவரைக்கும் யாரும் கண்டுப்பிடிக்காத ஒன்னை நீ கண்டுபிடிக்கப் போறே.
அம்மா. நான் கண்டுபிடிக்கலை. நான் சும்மா உதவிக்குத்தான் போறேன். பழனியப்பன் சாருக்குத்தான் டாக்டர் பட்டம் கிடைக்கும். ஆனா நாங்க பிஹெச்டி பண்ணும் போது நாங்க இதுல வேலை செஞ்சோம்னு சொன்னாலே மதிப்பு வரும்.
அப்படி என்ன எழவு ஆராய்ச்சி என்றாள் அவள் அம்மா.
அம்மா, இதுக்கு பேரு கறுப்பு வரலாறுன்னு பேரு.
கறுப்பு வரலாறா, பேரே நல்லாயில்லை. என்னாகப்போகுதோ போ என்றாள் சங்கடமாக.
தொடரும்…