கொடுக்காப்புளி, கொடுக்காய்ப் புளி மரம், புளியங்காய் போலக் காய் காய்க்கும். ஆனால் புளியங்காய் போல இதன் காய் புளிக்காது. காயின் உள்ளே இருக்கும் வெண்ணிற விதை சற்றே துவர்ப்பாய் இருக்கும். மக்கள் விதைகளை விரும்பி உண்பர்.
கொடுக்காப்புளி என்றால் என்வென்றே தெரியாமல் போகும் நம் சந்ததிகளுக்கு விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களிலும் முக்கியமாகக் கிணற்று மேட்டிலும் இதை வளர்ப்பார்கள். இதற்குப் பாசனம்
தேவை இல்லை. ஆனால் பாசன வாய்க்கால் ஓரங்களில் இருப்பவை நன்கு செழித்து வளரும்.
இந்த மரம் குட்டையான முட்கள் நிறைந்ததாக இர ுப்பதால் வேலிக்காகவும் அந்தக்காலத்தில் நடுவதுண்டு. இதன் இலை வெள்ளாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படும்.
ஐம்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் பாசனக் கிணறுகளில் மாடுகளைக் கொண்டு நீர் இறைக்கப்பட்டபோது வாரியில் நிழலுக்காக இந்தமரங்கள் நட்டு வளர்க்கப்படும்.
வேலிகளில் சிறியதாக வளரும் இது விட்டுவைத்தால் வேம்பு அல்லது புளியமரம்போல் பெரியதாக வளரும் இயல்படையது. நன்கு வளர்ந்து முற்றிய மரங்கள் பல்வகை மரச் சாமான்கள் செய்யயப் பயன்படும்.
எல்லாவற்றுக்கும் மேலாக அக்காலக் கிராமச் சிறுவர்களுடன் இது நெருங்கிய தொடர்புடையது. இதன் சுருள் சுருளான பசுமையான சிவப்பான அழகான காயும் பழங்களும் உண்ணப் பயன்படும். சில ரகங்கள் துவர்ப்புத் தன்மை மேலோங்கியும் சிலரகங்கள் தித்திக்கும் சுவையுடனும் பழங்களைக் கொண்டிருக்கும். வெடித்த பழங்கள் நல்ல சுவையாக இருக்கும். மருத்துவப் பயன்களும் உண்டு.
இதன் முற்றிய அடிமரத்தில் முட்கள் இருக்காது. அதனால் எட்டியவரை சல்லைகளால் காய் பறித்துவிட்டு எட்டாத உயரத்தில் இருப்பதை முள்ளில்லாத அடிமரத்தில் ஏறி பாதிமரத்தில் இருந்து மீண்டும் சல்லைகளால் காய் பறிப்பார்கள்.
எப்படி இருந்தாலும் நீளமான கொக்கிச் சல்லைகளுடன் சிறுவர்கள் இந்த மரம் இருக்கும் இடங்களைத் தேடி அலைவதும் கண்டும் காணாமலும் இதன் பழங்ளைப் பறித்துக்கொண்டு யாரேனும வந்துவிட்டால் ஓட்டம் பிடிப்பதும் வேடிக்கையான அனுபவங்கள். சிலநேரங்களில் இரக்கமற்ற ஆட்களிடம் மாட்டிக்கொண்டு சல்லைகளை இழப்பதும் உண்டு.
சிறுவர்கள் மேல் பாசம் கொண்டு பறித்துத் தருபவர்கள் கொஞ்சம் பேர். சிறுவர்களின் ஓயாத தொல்லைக்குப் பயந்துகொண்டு மரத்தையே வெட்டியவர்களும் உண்டு.
காக்கைகள் பறித்துச் சென்று வீடுகளின் கூரைமேல் வைத்துத் தின்னும். அப்போது அது கொடுக்காப்புளிப் பழத்தை கீழே வைப்பதைப் பார்த்துக்கொண்டே இருந்து திடீரெனப் பலமான சப்தம் கொடுத்து காக்கையை விரட்டிவிட்டு பழத்தை வீட்டின்மேல் ஏறி எடுத்துக் கொள்வார்கள். காக்கைகள் கொண்டுவரும் பழம் மிகவும் சுவையாக இருக்கும்.
எப்படியோ எந்தப் பாசனமும் தேவைப்டாமல் எந்த வறட்சிக்காலத்திலும் உயிர் வாழ்வதுமட்டுமல்ல கனிகளையம் கொடுக்கக்கூடிய கொடுக்காப்புளி மரமும் பழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டுவிட்டது. இப்போது சிலபகுதிகளில் மட்டும் காணலாம்.
வர்த்தக ரீதியில் லாபம் தராத எதையும் ஒழிப்பது என்ற மனித விதியின்படி இதுவும் ஒரு நாள் காணாமல் போகக்கூடும்..?!