ரங்கன் சொன்னதைக் கேட்டதும் அதிர்ந்து போனாள் நந்தினி.
அவன் நடுரோட்டில் காலில் விழுந்துதும் அவனை அருகில் உள்ள தேனீர் கடைக்கு அழைத்துச் சென்றாள். தேனீர் வாங்கித்தந்தாள்.
அமைதியாக என்னாச்ச அண்ணே என்றாள்.
அம்மா தம்பியோட நான் பல வருஷம் இருக்கேன். எனக்கு பொண்டாட்டி கெடையாது. பல வருஷம் முன்னாலேயே செத்துப் போச்சு. ஒரே புள்ளை. அவனை என் மச்சினிதான் வளத்துகிட்டு இருக்கா. என் வீட குரோம்பேட்டை ராதா நகர்கிட்ட இருக்கு. மச்சினியும் அவ புருஷனும் என் சொந்த வீட்ல தான் தங்கியிருக்காங்க. எனக்கும் யாரும் இல்லாததால தம்பியோடையே தங்கிட்டேன்.
தம்பிக்கு என்ன புடிக்கும் என்ன புடிக்காதுன்ன எனக்குத் தெரியும். தம்பியை நல்லா பாத்துக்கறேன். தம்பியும் நான் கேட்டபோதெல்லாம் எனக்கு ஒதவி செஞ்சிருக்கு. ஆனா நான் தான் தம்பிக்கு துரோகம் பண்ணிட்டேன் என்றான்.
ஒரு வேலைக்காரன் முதலாளிக்கு என்ன துரோகம் செய்ய முடியும்? பணத்தை திருடியிருப்பான் இல்லை வீட்டிலிருந்த பொருளை எடுத்து விற்றிருப்பான் என்று நினைத்தாள் நந்தினி. ஆனால் அவன் சொன்னது இன்னும் அதிர்ச்சியான விஷயம்.
அம்மா தம்பி எனக்கு இதுவரைக்கும் 30 ஆயிரம் ரூபாய் கடனா கொடுத்திருக்கு. என்னோடைய மச்சினி பிரசவம் இப்ப வரப்போவுது. இன்னும் 5 ஆயிரம் கேட்கலாம்னு இருந்தேன். எவ்வளவுதான் தம்பியை பணம் கேட்கறதுன்னு எனக்கே வெட்கமா இருந்திச்சு.
அந்த நேரத்தில ஒரு போன் வந்தது. நாங்க சொல்ற வேலையை செஞ்சா 5 ஆயிரம் தர்றோம்னு சொன்னாங்க. தம்பி பேசையில இருக்குற மஞ்சள் சிலிப்பில ஒரு செய்தி எழுதி வைக்க சொன்னாங்க. அப்படி செஞ்சா 5 ஆயிரம் தர்றேன்னு சொன்னாங்க.
நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்.
வீட்டு கதவை திறந்துப்பாரு ஒரு பொம்பளை நிப்பாங்க அவங்க கிட்ட 5 ஆயிரம் இருக்கும் வாங்கிக்கோன்னு சொன்னாங்க. வெளியே பார்த்தேன்.
ஒரு பொம்பளை பணத்தோட நின்னுகிட்டு இருந்தாங்க. நான் போனதும் பணத்தை வாங்கிகிட்டேன் அவங்க போயிட்டாங்க. மறுபடியும் போன் பண்ணாங்க. விஷயத்தை எழுதச் சொன்னாங்க. எழுதலைன்னா அமைச்சர் விஷயம் பெரிய பிரச்சனையில மாட்டிப்பேன்னு பயம்புறுத்தனாங்க.
நானும் சரின்னு அவங்க சொன்ன மாதிரியே எழுதி வெச்சிட்டேன்.
அது என்ன பிரச்சனையோ தம்பியை போலீஸ் பிடிச்சிகிட்டு போயிடிச்சு என்று அழுதான்.
காலையில போலீஸ் வந்து வீட்டையெல்லாம் வீடியோ பிடிச்சிகிட்டு போயிட்டாங்க என்று மேலும் அழுதான்.
குழப்பத்துடன் நந்தினி அப்படி என்ன எழுதச் சொன்னாங்க என்று கேட்டாள்.
அந்த நான்கு அமைச்சரில் நானும் ஒருவன். சந்திக்கத்தயார். எப்போது எங்கே என்று சொல் – அமைச்சர் கரி. நீலவாணன்.
இது என்னிக்கு நடந்தது?
தேதியைச் சொன்னான்.
நீலவாணன் கொல்லப்பட்டதற்கு முதல் நாள் இரவு.
அவரு இந்த சிலிப்பை பார்த்தாரா?
நான் வெளியே போயிட்டேன். அவரு வந்து பார்த்திருப்பாரு. ஏன்னா நான் திரும்பி வரும்போது தம்பி இல்லை. அந்த சிலிப்பும் இல்லை என்றான் ரங்கன்.
நீலவாணன் கொலை வழுக்குக்கும் ராஜேஷுக்கும் என்ன சம்பந்தம். பயந்து போனாள் நந்தினி.
சரி. நாம அவரை பார்ககப்போவோம். நானா சொல்ற வரைக்கும் இதை யாருக்கும் சொல்லாதீங்க. இப்ப கண்ணை துடைச்சிகிட்டு வாங்க என்று அவனை பின்னால் உக்காரவைத்து வண்டியை கிளப்பினாள்.
தொடரும்…