Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » கடைசி பேட்டி – 13 ( மர்மத் தொடர் )

கடைசி பேட்டி – 13 ( மர்மத் தொடர் )

மீடியாவில் இருப்பதால் அவனை மரியாதையாகவே நடத்தினர் போலீஸார்.

அவனுக்கு தேனீர் கொடுத்துவிட்டு இரண்டு இட்லியும் கொடுத்தனர். பிறகு ஒரு தனியறைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கே உயர் அதிகாரிகள் மூன்று பேர் இருந்தனர். காவலும் இன்று கார்ப்ரேட் லுக்கில் தான் இருக்கிறது என்று நினைத்தான் ராஜேஷ்.

பெரிய கான்பரென்ஸ் ரூம். ப்ரொஜெக்டர். மைக் ஸ்டீரியோ வெள்ளை போர்ட் ஃபிலிப் சார்ட் வீடியோ என்று கலக்கியது காவல்.

சொல்லுங்க ராஜேஷ் எதுக்கு அமைச்சர் நீலவாணனை கொன்னீங்க?

என்ன சார் சொல்றீங்க? அமைச்சர் கரிகாலவளவனை கொன்னதாக தானே சொல்லி அரெஸ்ட் பண்ணீங்க?

ஆமா சார். இந்த ரெண்டு கொலையையும் நீங்கத்தான் பண்ணியிருக்கீங்கன்னு சொல்றோம்?

வாட்? அவங்களை கொல்றதுக்கு எனக்கு எந்த நோக்கம் இருக்கு?

நீங்க ஒரு ரிபெல். புரட்சியாளர்.

என்ன?

ஆமா.

சார் நான் ஒரு டிவி சானல் நிருபர் சார். நல்லா சம்பாதிக்கிறேன். நல்லா வாழ்ந்துகிட்டு இருக்கேன். யாராலையும் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.

விக்ரமன் வீடியோவை ஆன் செய்தார். அதில் அவனுடைய பிரபல நிகழ்ச்சி பதிவாகி இருந்தது

முகம் சிவக்க பேசிக் கொண்டிருந்தான் ராஜேஷ் அந்த நிகழ்ச்சியில்

முன்பு ஒரு அரசியல்வாதி ஏழ்மையை ஒழிக்கிறேன்னு ஊர்ல இருக்கிற ஏழைங்களை ஒழிச்சிகிட்டு இருந்தாரு. ஆனா ஏழைங்க ஒழியறதால ஏழ்மை ஒழியாது. ஆனால் குற்றங்களை ஒழிக்கனும்னா குற்றவாளிகளை ஒழிச்சுத்தான் ஆகனும். குற்றவாளிகளை ஒழிக்க என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறேன். இந்த சமுதாயத்தில வளர்ந்துகிட்டு இருக்கிற அரசியல் குற்றவாளி எனும் கரப்பான் பூச்சிகளை ஒழிக்கும் ஹிட் மருந்தாக நான் இருப்பேன்

இதுக்கு என்ன சொல்றீங்க?

சார் இது டிவி ப்ரோக்ராம். உங்களுக்கு தெரியாதது இல்லை. கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பேசினாத்தான் ஜனங்களுக்கு மெஸெஜ் போய் சேரும். அதுக்காக எல்லா அரசியல்வாதிகளையும் நான் போய் கொன்னுகிட்டு இருக்க முடியுமா?

சரி. இந்த கிளிப்பை பாருங்க.

ஹாஸ்பிட்டலில் இன்ஸ்பெக்டர் கேள்வி கேட்டபோது பின்னால் இருந்து ராஜகோபால் வாய் அசைத்ததையும் அதை பார்த்து ராஜேஷ் பதில் சொன்னதையும் அதில் பதிவாகியிருந்தது.

வலையில் மாட்டிக்கிட்டே மாப்பிள்ளை என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.

சார் நாங்க மினிஸ்டர்ஸ் மேல ஒரு ப்ராஜெக்ட் பண்றோம். அதுக்காகத்தான் அந்த லிஸ்ட் தயார் பண்ணோம். அதில் நாலு பேரை முக்கியமா தேர்ந்தெடுத்து வெச்சிருந்தோம். அதில ஒத்தர் கொலைசெய்யப்பட்டிருக்காரு. என் கிட்ட அந்த லிஸ்ட் உங்ககிட்ட மாட்டிகிச்சு. கொலைப்பழியில நான் மாட்டக்கூடாதுங்கறதுக்காக அப்படி சொல்லச்சொன்னாரு. அது பொய்தான். ஆனா இந்த கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

சரி. நம்பறோம். இந்த கிளிப்பை பாருங்க.

தூக்க கலக்கம். அதில் ஒன்று மாற்றி ஒரு கேள்வி வேறு. வக்கீலை கூப்பிட முடியும். ராஜகோபாலிடம் சொன்னால் சில நொடிகளில் சுதந்திர காற்றை வீச முடியும். இதைச் செய்ய விரும்பாமல் போலீஸின் ஆட்டத்திற்கு ஆடிக்கொண்டிருந்தான்.

அடுத்த க்ளிப் எதுவாக இருக்கும் என்று கணிக்க முயன்றான். மூளை வேலை செய்ய வில்லை.

மூன்றாவது க்ளிப்பும் ஆஸ்பத்திரி க்ளிப் தான். இந்த முறை அவன் அமைச்சர் எழுதிய போஸ்ட் இட்டை அவசரமாக எடுத்து உள்ளே வைத்தது பதிவாகியிருந்தது.

அது என்ன சிலிப் ராஜேஷ்?

மௌனமாக இருந்தான். யோசித்தான். அந்த சிலிப் என் டிராவில் பத்திரமாக இருக்கும். இந்த காமிராவை எவ்வளவு ஜும் செய்தாலும் அதில் இருப்பதை படிக்க இவர்களால் முடியாது. புளுக வேண்டியதுதான்.

பாக்கெட்ல ஏதோ உறுத்திற மாதிரி இருந்தது. அதான் எடுத்துப்பார்த்தேன். ஏதோ பேப்பர். பெட்ரோல் பில்லாக கூட இருக்கலாம். தொழில் பொய். சொந்த வாழ்கையில் பொய் சொல்ல அவசியம் ஏற்படவில்லை. ஆனால் செய்யும் தொழிலிக்கு இது அவசியம்.

ராஜேஷ் அதெப்படி கூசாம பொய் சொல்றீங்க? உங்ககிட்ட இருந்த சிலிப் இதுவான்னு பாருங்க?

தமிழக போலீஸின் திறமைக்கு ஒரு சல்யூட்.

மௌனமாக அவர்களைப் பார்த்தான்.

இதுக்கென்ன அர்த்தம்?

நீங்க தான் சொல்லனும். 11.00 மணிக்கு அன்னிக்கு ஆபிஸ்சிலிருந்து வீட்டுக்கு போனேன். அன்னிக்கு தோணின ஐடியா. அன்னிக்கித்தான் 4 பேரை தேர்ந்தெடுத்தேன். அன்னிக்கு வீட்டுக்குப் போனா இந்த சிலிப் இருக்கு. இதெப்படி சாத்தியம்னு நீங்களே சொல்லுங்க!

அப்படின்னா இந்த சிலிப் வீட்ல எப்படி வந்துதுன்னு உங்களுக்கு தெரியாதுன்னு சொல்றீங்க இல்லையா?

ஆமாம் சார்.

இந்த சிலிப் வந்ததும் எங்க போனீங்க? அமைச்சரைப் பார்க்வா?

இல்லை சார்.

வேறே?

ராஜகோபாலையும் அவன் இழுக்க விரும்பவில்லை. ஆனால் வேறு வழியில்லை.

எங்க சீஃப் ராஜகோபாலை சாந்தோம் பீச்சில் பார்க்கப் போனேன்.

ஏன் சார் இவ்வளவு பெரிய ஆபீஸ்சு இருக்கு. உங்க வீடு இருக்கு. அவர் வீடு இருக்கு? இதெல்லாம் விட்டுட்டு ஏன் சாந்தோம் பீச்சுக்குப் போனீங்க?

சார் இது ஒரு சீக்ரெட் ப்ராஜெக்ட்.

ராஜேஷ் உங்களை அரெஸ்ட் பண்ணியிருக்கோம். உங்களுக்கு எதிரா பல தடயங்கள் இருக்கு. உங்க உயிரே ஊசலாடிகிட்டு இருக்கு இந்த நேரத்திலும் அந்த ரகசியத்தை நீங்க சொல்ல விரும்பலையின்னா அது கொலைகள் சம்பந்தப்பட்டதுன்னு எங்களுக்கு சந்தேகமா இருக்கு?

சார். அதுக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது டிவி சானல் சம்பந்தப்பட்ட ரகசியம். அதை சொல்ல விரும்பவில்லை நான். நான் கொலை செய்யலை. உங்க திறமை மேல எனக்கு நல்ல நம்பிக்கை இருக்கு. நீங்க நிச்சயம் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிச்சிடுவீங்க. அதனால என் உயிர் ஒன்னும் ஊசலாடலை.

முதன் முறையாக புன்னகைத்தான்.

நீங்க ஒரு சைக்கோவா?

வாட் அ ரிடிகுலஸ் கொஸ்டின் இஸ் திஸ்? என்று கேட்டான் காட்டமாக.

விக்ரமன் இன்னொரு வீடியோ க்ளிப்பை ஓட்டினார். அதில் அவன் வீட்டி சுவற்றிலிருந்த நோட்டிஸ் போர்ட் முழுவதும் இருந்த போஸ்ட் இட்டுகள் மேசையின் மேல் இருந்த போஸ்ட் இட்டுகள் என்று அனைத்தையும் படம் பிடித்திருந்தனர்.

இந்த நம்பர்களுக்கு என்ன அர்த்தம்?

தெரியாது?

தெரியாதுன்னா?

சின்ன வயசிலிருந்தே இந்த நம்பர் எழுதற பழக்கம் இருக்கு.
அப்படின்னா இந்த நாலு பேரை தேர்ந்தெடுத்த அன்னிக்கும் இந்த மாதிரி நம்பர் எழுதி போஸ்ட் இட்டில் ஒட்டினீங்களா?
பொய் சொல்ல அவன் விரும்பவில்லை. ஏன் இந்த பழக்கம் தன்னிடம் வந்தது என்று முதன் முறையாக வருத்தப்பட்டான். எந்த சூழ்நிலையிலும் ஒரே மாதிரி யாராவது வாழ்ந்தால் அவரை சுலபமாக கண்டு பிடித்துவிட முடியும். ஒருவன் 6 மணிக்கு தூங்கியெழுந்து 8 மணிக்கு சாப்பிட்டு 9 மணிக்கு அலுவலகம் சென்று.. என்று வாழ்ந்தால் அவனை எந்த கூட்டத்திலும் கண்டு பிடிக்க முடியும். இது ஒரு இயந்திர வாழ்க்கை.

ஆமா சார். அன்னிக்கும் 4 என்று எழுதினேன்.

இந்த அமைச்சர் எழுதின மாதிரி சிலிப்பையும் நீங்களே எழுதினீங்களா?

சார் நீங்க அனாவசியமா என்னை மாட்ட வைக்க பார்கறீங்க. உண்மை குற்றவாளி வெளியே இருக்கான். அவனைப் போய் தேடுங்க.

நிறுத்துங்க. நாங்க என்ன பண்ண வேனும்னு நீங்கள் சொல்லத் தேவையில்லை.

இதே வரிகளை இந்த காகிதத்தில் எழுதுங்க என்று இன்னொரு போஸ்ட் இட்டும் அதே மாதிரி ஒரு பேனாவும் கொடுத்தார்.
பொறுமையாக அதை எழுதினான்.

இதை கையெழத்து கண்டுபிடிக்கிற டீமுக்கு அனுப்புங்க என்று சொல்லி விட்டு ராஜேஷின் பக்கம் திரும்பினார் விக்ரமன்.
கடைசியா எப்ப உங்ககிட்ட ஐ கார்ட் இருந்தது?

சார் எங்க கம்பெனி ஐ கார்ட் வெறும் ஐ கார்ட் மட்டும் இல்லை இதை நாங்க அட்டெண்ட்ஸ்சுக்காகவும் பயன் படுத்தறோம். கடைசியா நேத்து சாய்காலம் ரீடர்ல என் என்ட்ரி பதிவாகி இருக்கும். அதுக்கு அப்புறம் தான் இது தொலைஞ்சி போயிருக்கனும்.

நல்லா இருக்கு கதை. இது உங்க கார்டான்னு பாருங்க?

ஆமாம் சார். இது என்னுடைய கார்ட்தான்.

இது எப்படி அமைச்சர் வீட்டிக்கு போச்சுன்னு சொல்ல முடியுமா?

தெரியாது சார்.

நீங்க அன்னிக்கு ராத்திரி அங்க என்னப் பண்ணிகிட்டு இருந்தீங்க?

அமைச்சர் வீட்டை நோட்டம் பார்த்திகிட்டு இருந்தேன். மறுபடியும் பொய். ஆனால் அவன் புது ஊழியன் ராதிகாவை காட்டிக் கொடுக்க விரும்பவில்லை.

நீங்க என்ன உளவாளியா?

இல்லை சார். இது இன்வெஸ்டிகெடிவ் ஜர்னலிஸம். எங்கத் தொழில்ல இதெல்லாம் சகஜம்.

எது சகஜம்? கொலை பண்ணறதா?

சார் நீங்க நக்கலா பேசறீங்க.

எங்க வண்டி உங்களை நோக்கி வரும்போது ஒரு பெண் கிட்ட பேசிகிட்டு இருந்தீங்களே அது உங்க கூட்டாளியா?

இல்லை சார். யாரோ ஒரு பெண். மெயின் ரோட்டுக்கு வழி கேட்டாங்க. மறுபடியும் பொய்.

ராஜேஷ் உங்களால எப்படி சரளமா பொய் சொல்ல முடியுது?
மௌனமாக இருந்தான்.

உங்களை லை டிடெக்ஷனுக்கு அழைச்சிகிட்டு போகப் போறோம். உங்களுக்கு சம்மதமா?

சம்மதம் இல்லைன்னா விடவா போறீங்க. வெறுமையாக சிரித்தான். நீங்க என்னை சட்டவிரோதமா வெச்சிருக்கீங்க. குற்றப் பத்திரிக்கை இல்லை வாரண்ட் எதுவும் இல்லை. என்னுடைய போனை எடுத்துகிட்டீங்க. வக்கீலை கூப்பிட விடவில்லை. இப்படி எல்லாமே சட்ட விரோதமாக நீங்களே செஞ்சிகிட்டு இருக்கீங்க.

பரவாயில்லை ராஜேஷ் உங்களுக்கு சட்டம் நல்லாவே தெரிஞ்சிருக்கு. அதனாலத்தான் அதுல இருக்கிற ஓட்டையும் தெரிஞ்சிருக்கு.

சட்டம் படிக்க வேணாம் சார். தமிழ் படங்களை பார்த்தாலே போதும். உண்மையாக நகைத்தான்.

போகலாமா?

நான் ரெடி என்றான்.

இன்னொரு அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அவன் மேல் பல வொயர்களைச் சுற்றினார்கள். மானிடரில் ஏதோ அலைகள் ஒடியது.
கேள்வி கேட்டார். இன்னும் இரண்டு மணி நேரம் இந்த கூத்து நடந்தது. அவன் சோர்ந்து போயிருந்தான். இது முடிந்ததும் அவன் குளியலறைக்குச் சென்று அங்கே 10 நாள் இருக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் தான் எடுத்துக் கொண்ட வேலையில் இதெல்லாம் சகஜம் என்று நினைத்தான்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top