ராதிகாவின் முதல் நாள் சூப்பர் டிவியில். அவளுக்கென்று தனி அறை ஆனால் சிறிய அறை. ஒரு போன். லாப் டாப் கம்ப்யூட்டர். கம்பெனியின் செல் போன். தனி எண்.
ராஜேஷின்அறைக்கு எதிர் அறை. அதனாலே அவளுக்கு உடனே ஒரு எதிரி. நந்தினி.
வெகு நாட்களாக அந்த அறையின் மேல் ஒரு கண். லஞ்ச் செய்ய அங்கே சென்றுவிடுவாள். அவனை கண்களால் விழுங்கிக் கொண்டே சாப்பாட்டையும் விழுங்குவாள். அவனோ எப்போதாவது பார்ப்பான். அப்போது அவனிடத்திலிருந்த ஒரு புன்னையாவது வருமா என்று ஏங்குவாள். அவன் அவளை பார்க்கிறான் என்று தெரிந்ததும் சட்டென்று தலையை குனிந்துக் கொள்வாள்.
சில விநாடிகளுக்கு பிறகு மீண்டும் கண்களால் காதல் காட்சி தொடரும். இது ஒரு தலை காதலா என்று அடிக்கடி கலங்கியது உண்டு. அப்போதெல்லாம் அவனுக்கு போன் செய்து உங்களுக்கு இந்த மெஸெஜ் வந்திருக்கு உங்களை இவரு பார்க்க வந்தாரு அவருக்கு என்ன சொல்லனும் என்று ஏதாவது சொல்லிவிட்டு அவன் பேசுவதை கேட்பாள்.
இன்டர்னல் ரெக்கார்டிங்கை ஆன் செய்துவிட்டு அவன் பேசுவதை பல முறை கேட்பாள். அந்த டேப்பை எல்லாம் வீட்டிற்க்கு எடுத்துப் போய் அவன் பேசிய பேச்சிலிருந்து தனித்தனியாக வார்த்தைகளை எடுத்து டபுள் டெக்கில் எனக்கு ..உனக்கு…ரொம்ப…பிடிச்சிருக்கு என்று ஒரு வாக்கியமாய் கோர்த்து பதிவு செய்து பல முறை கேட்பாள். உன்னை என்ற வார்த்தையை எப்போதாவது பேசினால் அவள் ஜென்மம் சாபல்யம் ஆகிவிடும்.
இதில் ராஜகோபால் வேறு மிஸ் ராதிகா ராஜேஷோடு ஒரு புது ப்ராஜெக்டில் வேலை செய்யப் போறாங்க என்று நந்தினியடம் அறிமுகப்படுத்தியிலிருந்து அவளுக்கு தூக்கம் இல்லை.
அப்பிளிகேஷனில் அவளுடைய புகைப்படத்தை பார்த்து நீ என்னை விட அழுகா என்று கேட்டுக் கொண்டாள். ராஜேஷ்மீது ஏவரும் வெறித்தனாமாக காதல் கொள்வது சகஜம் தான். அதிலும் இவள் உச்சக்கட்டத்தில் இருந்தாள். கனவினில் திருமணம் கண்டு குழந்தை பெற்று தினமும் சமைத்து பரிமாறி அவன் உடல் நலமில்லாமல் இருந்தால் இவள் அழுது இதுவும் காதலில் ஒரு வகை. ஆனால் இதை அறியாது இருந்தானா அந்த காதல் மன்னன்?
நந்தினியைப்பற்றியும் இங்கு கொஞ்சம் சொல்ல வேண்டும். அந்தக் காலத்திலேயே இன்ஜினியரிங் படித்துவிட்டு இருபது ஆண்டு காலம் அமெரிக்காவில் வேலை செய்துவிட்டு தாயகம் திரும்பி சொந்தமாக ஒரு தொழில் செய்து அதிலும் நிறைய பணம் கண்டவர் நந்தினியின் தந்தை.
அம்மா வீட்டை காக்கும் காவல் மட்டும் அல்ல ஷேர் மார்கெட்டில் தினமும் ஐந்து லட்சம் வரை விளையாடும் ஒரு நவீன வீட்டு வியாபாரி. ஆனாலும் பண்பை மறக்காமல் கோவில் குளம் என்று சென்று வருபவர்.
ஒரே பெண். அன்பு செல்லமாக மாறிவிட்டதால் நந்தினியிடத்தில் பல பிடிவாத குணங்கள். ஆனால் கண்ணியத்தில் எந்த மீறலும் இல்லை. டிஸ்கோ செல்லும் கண்ணகி. துடிப்பாக தம்மும் அடிப்பாள் கண்டவன் கைப்பட்டால் கன்னத்திலும் அடிப்பாள். 10 வருடம் அமெரிக்காவில் பயின்றாலும் இந்தியா வந்ததும் இந்திய ஆங்கிலத்தில் பேசக்கற்றவள். பல நேரத்தில் எளிமை. சில நேரத்தில் ஆடம்பரம். வீடு முழுக்க ஹார்டி பாய்ஸ் நான்சி ட்ரூ டின் டின் சூப்பர் மேன் ஸ்பைடர் மேன் என்று காமிக்ஸ் புத்தகங்களாக அடுக்கி வைத்து தினம் படிக்கும் வளர்ந்த குழந்தை.
சார்லி சாப்ளின் படங்கள் என்றால் அவளுக்கு உயிர். அதன் நடுவே வரும் ஆங்கில வாக்கியங்கள் அவளுக்கு அத்துப்படி.
கவர்ச்சியாக உடை அணிவது தான் செய்யும் வேலைக்காகவே என்று வீட்டில் சொல்லிக் கொண்டாலும் எதிராளி தன் கழுத்துக்கு கீழ் பாய்ந்து செல்வதை ரகசியமாய் ரசிப்பாள். ஆனாலும் எவரையும் சீண்டவிட்டதில்லை. இந்த விஞ்ஞான உலகில் இவள் ஒரு விந்தை.
ராஜேஷைப்பற்றி அம்மா அப்பாவிடம் சொல்லிவிட்டாள். அவள் அப்பாவும் ராஜேஷ்அப்பா பற்றி விசாரிக்கப்போக இருவரும் ஹூய்ஸ்டனில் பணிபுரிந்ததாகவும் அவர் பரிட்ச்சயம் இல்லையென்றாலும் மிகவும் நல்ல குடும்பம் என்று கேள்விப்பட்டதாகவும் தங்களுக்கு முழு சம்மதம் என்றும் தெரிவித்தார்.
ஆனாலும் ராஜேஷின் சம்மதம் இன்னும் கிடைக்கவில்லையே. நந்தினியின் அப்பா நான் வேணா ராஜேஷின் அப்பாகிட்ட பேசட்டுமா? என்று கேட்டதிற்கு அவள் மறுத்துவிட்டாள்.
ஒரு முறை ஆபீஸில் நடந்த ஏதோ விளையாட்டில் தனக்கு வான் நீலம் பிடிக்கும் என்று அவன் சொன்னதற்காக தான் அணியும் உடையிலிருந்து தன் அறையின் நிறம் வண்டியின் நிறம் என்று அனைத்தையும் நீலமாக மாற்றிவிட்டாள் இந்த நீலாம்பரி.
இந்த வெறித்தனமான காதலுக்கு காரணம் இல்லாமல் இல்லை. ராஜேஷைஇது வரை எந்த பெண்னோடும் யாரும் பார்த்ததில்லை. புகைப்பிடிக்கும் பழக்கமோ மது அருந்தும் பழக்கமோ அவனுக்கு இல்லை. ஆபீஸ் பார்ட்டியில் குடிப்பதோடு சரி. அதுவும் இந்த வளர்ந்த வரும் கணினி கலாச்சாரத்தில் ஒரு அங்கம். இதுவரை பொய் பேசியதாக அவனைப்பற்றி யாரும் சொன்னதில்லை.
புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களுக்கான பயிற்சியில் முதல் நாளாய் அவனைப் பார்த்தாள். டிவி சானல் பற்றியும் சமுதாயித்தில் அதன் கடமைப் பற்றியும் கம்பெனி செய்து தரும் வசதிகளைப்பற்றியும் சம்பளம் வேலை நேரங்கள் பற்றியும் அவன் பேசிய பேச்சில் கலந்து போனாள். கண்டதும் காதல்.
அவன் உள்ளே நுழைந்த இரண்டாவது நிமிடம் உள்ளே இருந்த 20 பேரும் ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் அவனிடம் மயங்கி விழுந்தனர். இவளோ சாதாரணமான மங்கையல்லவா? காதலே கொண்டுவிட்டாள்.
உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் என்று அனைவரையும் கேட்கும் போது இவள் நந்தினி என்று சொல்ல அவன் அதை மீண்டும் உச்சரிக்க என்னமோ ஆஸ்கார் அவார்ட் கிடைத்தது போல குளிர்ந்தாள். இமயத்தை தொட்டாள். அதன் பிறகு 3 வருடமாய் அவன் இன்னோரு முறை நந்தினி என்று சொல்லமாட்டானா என்று காத்திருக்கிறாள்.
இப்படி இருக்க இன்னொரு பெண் அதுவும் அழகானவள் அதுவும் அவன் எதிரில். எப்படி அனுமதிப்பது? இனிமேல் அவள் அந்த அறைக்குள் செல்லத்தான் முடியுமா அல்லது அங்கே உட்கார்ந்துக் கொண்டு சாதத்ததையும் ராஜேஷையும் சாப்பிடத்தான் முடியுமா?
ராஜேஷ்அடிப்பட்டதைக் கேட்டதும் துடிதுடித்துப்போனாள். இரண்டு நாட்களாய் அவனைப் பார்க்கவில்லை. சாப்பாடும் இறங்கவில்லை. எப்படியாவது இன்று சென்று பார்த்துவிடவேண்டும் என்று திட்டம் இட்டாள்.
ஐந்து மணிக்கு வீட்டிற்கு வந்து வான் நீல நிறத்தில் ஒரு சுடிதார் அணிந்து அதற்கு ஏற்ற நிறத்தில் கடிகாரம் முதல் காலணி வரை தேர்ந்தெடுத்து தயாரானாள். தாயாருக்கு எங்கே செல்கிறாள் என்று தெரியும். அவளும் தடுக்கவில்லை. போகும் முன் அம்மா ராஜேஷூக்கு ஆக்ஸிடண்ட்…நான்… என்று முடிப்பதற்குள் போயிட்டு வாடா என்றாள் செல்லமாக. மணிக்கு 120 மைல் துடிப்பாக பேசிய பெண்னை காதல் இப்படி பணிவாக்கிவிட்டதே என்ற ஆச்சர்யத்தில் தன் பெண் ஹோண்டா ஆக்டிவாவை தவிர்த்து ஹோண்டா சிட்டியை எடுப்பதைப் பார்த்தாள். காலையில் புதுமைப் பெண். மாலையில் அழகு பதுமைப் பெண். தன் குழந்தையை மெச்சினாள்.
கோபாலபுரத்திலிருந்து வண்டியை விரட்டி அண்ணா மேம்பாலத்தை கடந்து பாண்டி பஜாரைப் பிடித்து துரைசாமி சப்வே நெரிசலைக் கடந்து ஐந்து விளக்கு வழியாக சென்று அங்கிருக்கும் சிறிய அம்மன் கோவிலில் இருக்கும் அம்மனை வணங்கி லிபர்டி தியேட்டர் முன் வண்டி இன்ஜினை அணைத்தாள்.
ஓடிச்சென்று ஃபுட் வேர்ல்ட் முன்னே இருக்கும் ஒரு பூக்கடையில் ஒரு ரோஜாப்பூவை வாங்கினாள்.
மெதுவாக நடந்து அவன் வீட்டின் காலிங் பெல்லில் தன் முத்திரை பதித்தாள். பெண்மையின் மென்மை தீண்டலை முதல் முறையாக உணர்ந்த அந்த மணியோ கிளர்ச்சியில் ஆனந்தக் கூத்தாடியது.
ரங்கன் வந்து கதவைத்திறந்தான். யார் நீங்க என்றான்.
நான் ராஜேஷோட வேலை செய்யறேன். அவருக்கு விபத்துன்னு கேள்விப்பட்டு பார்க்க வந்திருக்கேன் என்றாள் தயக்கத்துடன். தனியாக இருப்பான் என்று நினைத்திருந்தாள்.
உள்ளே வாங்க என்ற அவன் அறைக்கு வழி காட்டினான்.
போர் கால கவிதைகள் என்ற ஒரு தொகுப்பை படித்துக் கொண்டிருந்தான். அவன் வீட்டிற்கு முதன் முறையாக வருகிறாள். ஆனாலும் பிக்னிக் சென்றுவிட்டு நண்பர்களுடன் ஒரு முறை திரும்புகையில் அவன் வீட்டின் முன்னே வண்டியை நிறுத்தி தண்ணீர் நிரப்பியதால் அவன் வீட்டை அறிவாள்.
வாங்க நந்தினி என்ன திடீரென்று?
ரோஜாவை மறைத்தாள். வாங்க என்று அவன் சொன்னது தூரத்தை அதிகரித்துவிட்டது.
மௌனமாக இருந்தாள்.
உட்காருங்க.
மீண்டும் உறுத்தியது அவளுக்கு.
ரங்கா தண்ணி கொடுங்க நந்தினிக்கு.
இரண்டாவது முறையாக நந்தினி. குளிர்ந்தாள். குழைந்தாள்.
தொடரும்…