அவருக்கு தலையில் அடிபட்டதால ஸ்கேனும் செய்தாங்க.. அப்போ தான் புரிஞ்சது.. அவருக்கு மூளையில் ஏற்கனவே ஒரு காயமானதால் பழைய நினைவுகள் அழிக்கப்பட்டிருக்கு என்பது.. அதனால்.. தன் பற்றிய எந்த விவரத்தையும் அவரால சொல்ல முடியலை.. எனக்கு என்ன பண்றதுன்னே புரியலை கலா… அப்படியே விட்டுப் போகவும் மனமில்லை.. அவருக்கு தான் படிச்ச படிப்பு… பெயர், அன்றாட நாம் நமக்கு செய்து கொள்ளும் வேலைகள், தாய்மொழி எதுவுமே மறக்கலை.. என் நண்பன் கிட்ட சொன்னப்ப.. அவன் வந்து பார்த்தான்.. பார்த்தவன்.. என் கையைப் பிடிச்சிட்டு அழாத குறையா நெகிழ்ந்துபோனான்…”
“ஐயோ.. என்னங்க… உங்களுக்கு ஏக்ஸ்டண்ட் ஆச்சா… அப்புறம்.. என்ன ஆச்சுங்க.. அவருக்கு பலத்த அடி இல்லையே? அந்த பெரியவர் யார்னு தெரிஞ்சிதா??” இடைமறித்தாள் கலா.
“ஆமாம் கலா… ஆனா..அன்னிக்கப்புறம்.. நான் வண்டிய வேகமா ஓட்டுவதையே விட்டுட்டேன். அவரைப் பத்தி என் நண்பனிடம் கேட்டதில் அவன் சொன்னது அவன் தனது யூஜியை அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படிச்சிருந்தான். அங்கு ஆங்கிலமொழி பாடத்தின் முனைவராய் இருந்தவர் தான் இந்த பெரியவராம்.. அவரால் பலபேரின் வாழ்வு வெளிச்சத்துக்கு வந்திருக்காம்.. எந்த கட்டணமுமே வாங்காமல் இலவசமாய் பல ஏழை தமிழ் வழிக் கல்வி பயின்ற மாணவர்களுக்கு ஆங்கில உச்சரிப்பு மற்றும் உரையாடலைக் கற்றுக் கொடுத்து பெரிய நிறுவனங்களில் வேலை கிடைக்க உதவியவராம்.. இந்த அற்புதமான மனிதருக்கா இந்த நிலையென்று உடைஞ்சுட்டான்… அவனோட உதவியால… அவரைப் பத்தி தெரிஞ்ச விசயம் அடுத்தடுத்து அதிர்ச்சியையே தந்தது.” என்று சொல்லி நிறுத்தினான் காமேஷ்.
“என்னங்க சொல்றீங்க.. இப்பேர் பட்ட பெரிய மனிதரா அவர்?? என்ன நடந்ததுங்க அவருக்கு..?” வருத்தமும் கலக்கமும் சேர்ந்துகொண்டது கலாவுக்கு.
“பல வருடம் முன்பு அவர் ஒரு சுற்றுலாவுக்காக நம்ம கோவை வந்திருக்கார்… அப்போ.. ஊட்டி செல்லும் வழியில் பெரிய ஏக்சிடண்ட் ஆனது. அதில் இவரோடு பயணம் செய்த மனைவி அந்த இடத்திலேயே இறந்திருக்கிறார். மகனும் இவரும் பெரிய காயங்களோடு உயிர்தப்பித்திருக்கின்றனர். இவருக்கு சிகிச்சை அளித்த பின் நார்மலாய் கொஞ்ச காலம் இருந்திருக்கிறார்.. பின்பு.. மகன் வீட்டில் இருக்காமல் திடீரென்று ஒரு நாள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்..
அவர் எங்கிருக்கிறார் என்று தேடிப் பார்த்து கிடைக்காமல் விட்டுவிட்டார் அவரது மகன். அப்புறம்.. என் நண்பர் மூலமா நான் அவரது மகனைத் தொடர்பு கொண்டேன், அவர் என்ன சொன்னார் தெரியுமா?” என்று சொல்லி சஸ்பென்ஸ் வைத்தான் காமேஷ்.
“ரொம்ப சந்தோசப்பட்டிருப்பாங்களே.. அப்படித்தானே..” என்றாள் கலா மகிழ்ச்சியுடன்.
“அப்படித்தான் நானும் நினைச்சேன் கலா.. ஆனால்..இதோடு ஆறாவது முறையா தொலைந்து கிடைச்சிருக்கார் என்றும் அவர் அவசரமாய் குடும்பத்தோடு வேலை நிமித்தம் ஆஸ்ரேலியா போவதாகவும் இந்த நிலையில் அப்பாவை அவரால் பார்த்துக் கொள்ள முடியாதுன்னு சொல்லிட்டாரு.. சில லட்சங்கள் பணம் அந்த பெரியவர் பேருல போடுவதாகவும் அதை வைத்து நல்ல முதியோர் இல்லத்திலேயே வைச்சிக்கோங்கன்னு சொல்லிட்டார்” என்று வருத்தமாய் சொன்னான் காமேஷ்.
“ச்சே.. இப்படியுமா இருப்பாங்க… பெத்தவங்கள கூட பார்க்காம… விட்டுட்டு அப்படியென்ன வாழப்போறாங்கன்னு தெரியலை..” ஆத்திரமானாள் கலா.
“ஆமா கலா.. இப்படியும் இருப்பாங்கன்னே எனக்கு அப்போ தான் புரிஞ்சது.. இதுல எனக்கு ஒரே ஆறுதல்.. அந்த பெரியவருக்கு தன் குடும்பம் பத்தி நினைவே இல்லை.. அதனால் இந்த சம்பவங்கள் அவரது நிம்மதிய பாதிக்கல.. இன்னிக்கி வரைக்கும் இந்த உண்மையை நான் அவர் கிட்ட சொல்லவே இல்ல அன்னிக்கிலிருந்து அவரை இந்த அன்பு இல்லத்தில் சேர்ந்து பத்திரமா பார்த்துட்டு வருகிறேன். சின்ன வயசிலயே அப்பாவையும் அம்மாவையும் இழந்த எனக்கு கடவுள் கொடுத்த
“காட் ஃபாதர்”-ஆ இவரை நினைக்கிறேன்” என்றான் காமேஷ்.
இத்தனையையும் பொறுமையாய்க் கேட்ட கலா.. ஒரு முடிவுக்கு வந்தாளாய் பேசலானாள்.
“உண்மையிலேயே நான் ரொம்ப கொடுத்து வச்சவங்க… இத்தனை அன்பான மனிதநேயம் மிக்க ஒருத்தர் எனக்கு கிடைச்சது போன ஜென்மத்து புண்ணியம் தான்.. நான் ஒரு யோசனை வச்சிருக்கேன்.. சொல்லட்டுமாடா என் கருத்த மச்சான்….!!” என்று சீரியஸா பேசுகையிலும் நகைச்சுவை காட்டினாள் கலா.
“ஏய்..ஏய்.. என்ன சொன்ன… டா…வா… கருத்த மச்சானா,…. நான் என்ன கருப்பா.. அப்போ.. நீ என்னோட கருவாச்சி.. டீ கருவாச்சி…” செல்ல சீண்டல் களைகட்டியது.
“சரி சரி.. எல்லாம் இருக்கட்டும்… ஏதோ சொல்லனும்னியே சொல்லு கலா” என்றான் காமேஷ்.
“உங்களோட ஃகாட் பாதரை நம்ம வீட்டிலேயே வைத்து பூஜித்தால் என்ன?” என்றாள் கலா.
“வாவ்… எப்படி கலா..நான் மனசுல நினைச்சது கேட்டது உனக்கு…??!! இதை உன்னிடம் எப்படி சொல்றதுன்னு தான் யோசிச்சிட்டு இருந்தேன்” என்றான் காமேஷ்.
“எனக்கு தெரியுங்க உங்க மனசை.. அதான் இந்த முடிவெடுத்தேன். ஆனால்.. ஒரு விசயம்.. ரத்னவேல் ஐயாவுக்கு நம்மோடு வருவதில் பூரண சந்தோசமும் நம்ம கூட வர சம்மதமும் சொன்னா தான் இது நிஜமாக்கனும்.. மயிலை வற்புறுத்தி ஆட வைக்கக் கூடாதுங்க..” என்றாள் தீர்மானமாய் கலா.
“ரொம்ப சரிமா.. நாளைக்கு சாயிந்திரமே போயி அவரின் சம்மதத்தை கேட்டுட்டு வந்துடறேன்..” என்றான் காமேஷ் உற்சாகமாக.
கார் உக்கடத்தை நெருங்கிய வேளையில்,
உக்கடம் குளத்தின் ஜில்லென்ற தென்றல் காற்றும்… அந்திவானத்தை தொட்டுப் பார்த்த மகிழ்ச்சியில் ஜொலிப்புக் காட்டி பெருமைப்பட்டுக் கொண்டிருந்த குளத்து நீரும் இவர்களோடு சேர்ந்து மகிழ்ச்சியில் ஆரவாரமிட்டது.
“யார் யார் சிவம்… நீ நான் சிவம்..
வாழ்வே தவம்… அன்பே சிவம்…”
-என்ற பாடல் காரினுள் காற்றில் ஜதிசொல்லி அவர்களின் இதயத்தில் நுரையீரல் வழி சென்றது.
நாளைய அந்திவானத்தில் மேற்கில் உதிக்கும் ரத்னமாய் சூரியன் மின்னக் காத்திருந்தது ஃகாட் பாதர் வருகைக்காக..!
முற்றும்.