அர்ச்சனா சரியாகத் தூங்கி மூன்றாவது வாரம் இது. திட்டத்தின் படி கோபால் போய்ச்சேர்ந்ததும் சமிக்ஞை தரவேண்டும். ஆனால் தரவில்லை. வாரத்திற்கு ஒரு முறை எல்லாம் சரி என்று தகவலனுப்ப வேண்டும். எதுவுமே வரவில்லை. ரகசியமாக அந்தச் சமிக்ஞைகளை அனுப்ப முடியாமலும் போகலாம் என்பதால், என்ன ஆனாலும் மூன்று வாரத்திற்குள் திரும்பி விட உத்தரவு. நேற்றோடு மூன்று வாரக்கேடு முடிந்தது. இன்னும் திரும்பவில்லை. தண்ணீர் இருக்க வாய்ப்பு மிகவும் குறைவான ஒரு கருங்கிணற்றில் அப்பாவி ஒருவனை நீச்சலடிக்கத் தள்ளிவிடுவதைப்போல் அவளுக்குத் தொடர் கனவுகள்.
அவள் அறைக்கதவை யாரோ டமடமவெனத் தட்டவும் கண்கள் பூரித்து முகம் வீங்கிய நிலையில் மெதுவாகச் சென்று கதவை திறந்ததும் சக ஆராய்ச்சியாளன் கத்தினான். “வாக்யூம் சேம்பர்ல் ரீடிங்க்ஸ் எகிறுதாம்.. உடனே கிளம்பு”.
கோபால் திரும்பிவிட்டான்!
கோபாலுக்கான மருத்துவப் பரிசோதனைகள் நடக்க. வெளியில் பிரசவத்திற்குக் காத்திருக்கும் தந்தை போல் அர்ச்சனா இங்கும் அங்கும் தத்தளித்தாள். ஒருவழியாக வெளிவந்ததும் அவனிடம் ஓடி பளார் என்று அறைந்து “ஏண்டா ஒரு செய்தி கூட அனுப்புல? தட் யூ ஆர் ஓகே?”
அவன் வெகுவாக மாறியிருந்தான். சோர்வாக இருந்தாலும் அட்டகாசமான ஒளி அவன் கண்களில்..
“ஹேய்.. எனக்கு இப்போ வயசு பத்தாயிரம் தெரியுமில்ல? பெரியவங்கள அடிக்கலாமா?” என்று சொன்னதும் அனைவருடனும் சேர்ந்து அவளும் சிரித்தாள்.
மூன்று வாரக்கதைதான் என்றாலும் எவ்வளவு சொல்லியும், எழுதியும் அவனுக்குத் தீரவில்லை. பாம்பு மாத்திரை மாதிரி அவ்வளவு சிறிய மனிதனிடமிருந்து ஒரு யுகத்திற்குண்டான தகவல்கள் பொங்கி வந்துகொண்டே இருந்தது. பெரும்பாலான சிந்து எழுத்துக்களையும், ஏராளமான வார்த்தைகளுக்கு அர்த்தமும் சேகரித்திருந்தான். அவனால் தூங்கவே முடியவில்லை, மாத்திரை போட்டு தூங்க வைக்க வேண்டியிருந்தது. நடுநடுவே அர்ச்சனாவின் குழு அவர்களின் ரகசிய ஆராய்ச்சி முடிவுகள் குறித்துச் சொன்னது எதுவும் இவனுக்குக் காதில் ஏறவேயில்லை.
முதல் முறை சிந்து சமவெளிக்குப் போய்ச் சேர்ந்ததும் ஏதோ எண்பதுகளின் தமிழகக் கடலோர நகரம் என்று நினைத்திருக்கிறான். பிறகுதான் சரியாகவே போய்ச் சேர்ந்திருக்கிறோம் என்பது ஊர்ஜிதமாகியிருக்கிறது. போட்ட திட்டம் அறிவியல் புனைகதைகளில் வருவது போல் சொதப்பாமல் கிட்டத்தட்ட கச்சிதமாகவே நடந்திருக்கிறது. சிந்து மக்கள் அவனைத் தனியாக எங்கும் விடவில்லை என்பதால் அவ்வபோது வந்து எதிர்முனைக்குச் சமிக்ஞை மட்டும் கொடுக்க முடியவில்லை.
அவன் கொண்டு சென்ற செம்பும் தங்கமும் அவனுக்கு நல்ல மதிப்பையும் விரும்பியதை செய்யும் சுதந்திரத்தையும் அளித்திருந்தது. திட்டப்படியே கல்வி நிலையங்கள், நூலகங்கள் போன்றவற்றில் ஐசோடோப்புகளைப் புதைத்துவிட்டு வந்தாகிவிட்டது. இவர்களின் உதவியுடன் ASI அந்த இடங்களைக் கண்டுபிடித்து அகழ்ந்ததில் ஏராளமான செப்புப் பட்டயங்கள், எழுத்து அச்சுக்கள், மண்பாண்டங்கள் மீது வண்ணத்தில் எழுதப்பட்ட கதைகள் என்று கிடைத்தன.
அவனுக்கு நினைவிருக்கும்போதே அத்தனை எழுத்துக்களையும் வார்த்தைகளையும் வரிசைப்படுத்திக் குறித்து வைத்தது நல்லதாகப் போயிற்று. அகழ்ந்து கிடைக்கும் தகவல்கள் அத்தனையையும் கட்டுடைக்கக் கோபால் தலைமையிலேயே எபிக்ரஃபி நிபுணர்கள் குழு ஒன்று ராப்பகலாக இயங்கியது. அவனும் நாளை என்பதே இல்லை என்பதைப் போல் பெரும்பாலான நேரம் அவற்றுடனேயே கழித்தான். பல வார்த்தைகள் அவனுக்கு மனப்பாடமாக, குறிப்புகளைப் பார்க்காமலே படிக்குமளவு பயிற்சி வந்திருந்தது. தோண்ட தோண்ட புதையலை போல் சிந்து சமவெளி அரங்கேறிய பல நூற்றாண்டு கதைகள் குவிந்து கொண்டே இருந்தன.
களைப்பு மேலிட்ட ஒரு காலை வேளையில் வரலாறு என்று தலைப்பிட்ட சில செப்புப் பட்டயங்கள் கோபாலின் கவனத்தை ஈர்த்தன. பல துறைகளில் முன்னேறிய சிந்து சமவெளி சமூகம் அவர்களின் வரலாற்றுக்கும் நிச்சயம் முக்கியத்துவம் தந்திருப்பார்கள். அவர்களும் கூட ஒரு அகழ்வாராய்ச்சி நிறுவனமே வைத்து நடத்தியிருக்கக்கூடும்.
பல ஆயிரம் வருடங்களுக்கு முன் கோபாலைப்போலவே ஏதோவொரு வரலாற்று ஆய்வாளன் எழுதியது. அதில் பகுதி ஒன்று என்று குறிக்கப்பட்ட பட்டயத்தை எடுத்துக்கொண்டு தனது வழக்கமான இருக்கையில் அமர்ந்து மொழிபெயர்க்க தொடங்கி, முதல் இரண்டு வரிகளைத் தோராயமாக முடித்ததும் வாசித்துப்பார்த்தான்.
“சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முன் மிகவும் முன்னேறிய ஒரு சமூகம் இருந்தது.. அது அழிவற்றது என்று தன்னைப்பற்றியே எண்ணிக்கொண்டது”..
முற்றும்.