அமுதாவை பிடிப்பதற்காக பாய்ந்த குணசீலனின் கால்களில், அவனால் உருவி வீசப்பட்டுக் கிடந்த அமுதாவின் சேலை சிக்கிக் கொள்ள… சட்டென்று தடுமாறினான். அக்கணமே நிலைதடுமாறி விழலானான். தன் மீது அவன் விழுந்து விடாமல் இருக்க விலகிக் கொண்டாள் அமுதா. ஓடிவந்த வேகத்தாலும், தடுமாறவிட்ட சேலையாலும் வேகமாக அப்படியே கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில்… “அம்மா” என்று பலமாகக் கத்தினான். கஷ்டப்பட்டு அவன் திரும்பிய போது, அவன் மார்பில் கத்தி பாய்ந்திருந்தது. அதிலிருந்து ரத்தம் வேகமாகப் பீறிட்டது. அந்தக் காட்சியைக் கண்டு அமுதாவும் கத்திவிட்டாள். சாதாரண பெண்ணான அவளால் நடுங்க மட்டுமே முடிந்தது. அந்த நடுக்கத்திலும், அபரிக்கப்பட்டு கீழே கிடந்த தனது சேலையை எடுத்து வேகவேகமாகத் தனது மார்புக்கு முன்னே கொண்டு வந்து மறைத்தாள்.கத்திக் குத்துப்பட்ட குணசீலனால் அழுத்தம் திருத்தமாக பேச முடியவில்லை. முணகியவாறே பேசினான்.
“ஏன்டி… என்னை பழி வாங்கிட்டல்ல… உன்னைச் சும்மா விடமாட்டேன். என்னைக் கொலை பண்ண முயற்சி பண்ணினேன்னு போலீஸ்ல எல்லாம் கம்ப்ளெய்ன்ட் பண்ண மாட்டேன். இப்பவே உன்னை கொன்றுவிடுகிறேன்…” என்றவன், எழுந்திருக்க முயன்றான். இதயப் பகுதியில் கத்திக்குத்து விழுந்திருந்ததால் அதிக அளவில் ரத்தம் வெளியேறிப் பலவீனமாகியிருந்த அவனால் சட்டென்று எழுந்திருக்க முடியவில்லை. அந்த நிலையிலும் அவனுக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்ய தயாராக இருந்தாள் அமுதா.
“ஸாரி…” என்றபடியே, எழுந்திருக்க முயன்ற அவனுக்கு உதவ முன்வந்தாள். ஆனால், குணசீலனின் நடவடிக்கையோ வேறுமாதிரியாக இருந்தது. தன் மார்பில் குத்தியிருந்த கத்தியை உருவி, அதனால் ஏற்பட்ட வலியால் பலமாகக் கத்தியவன், அதே கத்தியால் அமுதாவைக் குத்த முயன்றான். அவள் விலகிக் கொண்டாள்.
“என்னடி… தப்பிச்சிடலாம்னு பாக்குறீயா-? உன்னக் கொல்லாம விடமாட்டேன்…” என்ற குணசீலன் எழுந்திருக்க முயன்றான். அவனது கால்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உடம்புமே பலவீனமாக இருந்ததால் தடுமாறினான். ஆனால், அருகில் கிடந்த பெட்டைப் பிடித்து மெதுவாய் எழுந்து, உடம்பு ஆட்டம் கண்டபடியே நின்றான். அந்த நிலையிலும் அவன் கண்களில் கொலைவெறி தணியவில்லை.
“என்னிய இந்த நிலைமைக்கு ஆளாக்கின உன்னைக் கொன்னாத்தான் எனக்கு நிம்மதி” என்றவன், அந்தத் தள்ளாடிய நிலையிலும் தனது ரத்தக்கறை படிந்திருந்த கத்தியைக் கொண்டு அவளைக் குத்த முயன்றான். அந்தப் பலவீனமான நிலையிலும், அவளை அடிப்பது போன்று கத்தியை ஓங்கிச் சுழற்றினான். அவன் கத்தியைச் சுழற்றத் துவங்கிய அக்கணமே அதிர்ச்சியில் மயக்கமானாள் அமுதா. சட்டென்று கீழே சாய்ந்தாள். தள்ளாடிய குணசீலன் ஓங்கி சுழற்றிய கத்தி அவள் தலைக்கு மேலே வட்டமடித்து, மறுபடியும் அவனை நோக்கிச் சென்றது.
தன்னால் முடிந்த மட்டும் சக்தியைத் திரட்டிக் கொண்டு அமுதாவைக் கத்தியால் குத்த முயன்ற குணசீலன், அந்த வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினான். அவனது கால்கள் தடுமாற… தொப்பென்று பெட்டில் தலைகுப்புற விழுந்தான். அப்போது அவனே எதிர்பார்க்காத வகையில், அவன் கையில் இருந்த கத்தி, அவனது கை பலவீனத்தால் அவனது கழுத்தில் சட்டென்று செருகியது. அந்த ஓரிரு நொடிகளிலேயே அவன் உயிர் பிரிந்தது. அந்தக் காட்சியை ஆதாரத்தோடு பதிவு செய்தது, அந்த அறையில் வெகுநேரமாக கண் விழித்திருந்த கீ -செயின் கேமரா.ஊட்டி போலீஸ் நிலையத்தில் இருந்த டி.வி-யில் ஓடிக்கொண்டிருந்த அந்தக் காட்சியை நிறுத்தினார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன். பக்கத்தில் இருந்த அமுதாவை பார்த்தார். வெகுநிதானமான நிலையில், ஏற்கெனவே நடந்த காட்சியைப் பார்த்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வேகமாக பெருக்கெடுத்தது. முந்தானையால் முகத்தைப் பொத்திக் கொண்டு பொசுக்கென்று அழுதாள்.
“அழாதீங்க அமுதா. ஏதோ… உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கப் போய்தான், இப்போ நீங்க என்கிட்ட பேசிட்டு இருக்கீங்க. இஷ்டப்படாத வாழ்க்கை உங்களை இந்த அளவுக்கு கொண்டுவந்து விட்டுடுச்சு. இதே வாழ்க்கைதான் இனி காலம் முழுக்க வரப்போகுதுன்னு நினைக்காதீங்க. உங்களுக்குன்னு நல்ல வாழ்க்கை காத்துட்டு இருக்கு. காதல்ல வெற்றி, தோல்விங்கறது சகஜம்தான். அதுல வெற்றி கிடைச்சுச்சுன்னா ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுறோம்.
அதே காதல், சூழ்நிலைகளால தோல்வியில முடியும்போது மட்டும் வாழ்க்கையே வெறுத்துப் போயிடுறோம். தற்கொலைக்கு முயற்சி பண்ணுறோம். இன்னும் சிலர், தனக்குக் கிடைக்காதவள் அடுத்தவனுக்குக் கிடைக்கக் கூடாதுன்னு நொடியில முடிவெடுத்துக் காரியத்துல இறங்கிடுறாங்க. உங்களோட காதலர் ஆனந்த் இருக்காரே… அவரும் அந்த வகையைச் சேர்ந்தவர்தான். ஆனா, இவர் உங்களைக் கொல்லணும்னு நினைக்கல.
எந்தச் சூழ்நிலையிலும், குறிப்பா… நீங்க இன்னொருத்தருக்கு மனைவியாகிவிட்ட பின்னரும் கூட, உங்களால் அந்த இன்னொருத்தருடன் வாழமுடியாதுங்கறதப் புரிஞ்சிக்கிட்டு, அவர்கிட்ட இருந்த உங்களைப் பிரிச்சி, மறுபடியும் உங்களைக் காதலியா – மனைவியா அடையறதுக்கு முயற்சி பண்ணி இருக்காரு இந்த ஆனந்த். நடந்த சம்பவங்களால நீங்க யாருமே பயப்பட வேண்டாம்.
நடந்த சம்பவத்துக்கு ஆதாரமா வீடியோ இருக்கு. இறந்த குணசீலனை நீங்களோ அல்லது ஆனந்தோ கொல்லவில்லை. அந்த முடிவு அவனா தேடிக்கிட்டது. அது ஒரு விபத்து. அந்த விபத்துல இருந்து அதிர்ஷ்டவசமா நீங்க தப்பிச்சி இருக்கீங்க. உங்களோட காதல் ஆனந்த் கூட உங்களோட வாழ்க்கை மறுபடியும் மலரும்னு அந்தக் கடவுளே எழுதி வெச்சிருக்காருன்னு நினைக்கிறேன். அதனாலதான், இந்தக் கொலை வழக்குல உங்களுக்கு எல்லாமே சாதகமாக இருக்கு…” என்று சொல்லி நிறுத்தியவர், ஆனந்த் பக்கம் திரும்பினார்.“மிஸ்டர் ஆனந்த். நடந்த கொலையால உங்களுக்கோ, உங்களது காதலிக்கோ எந்தப் பிரச்னையும் வரப்போவது இல்லை. போலீஸ் விசாரணை எல்லாத்தையும் இன்னிக்கே முடிச்சிடலாம். என்ன நடந்ததுங்கறதுக்கு வீடியோ ஆதாரம் இருக்குது. நாளைக்கு உங்க ரெண்டு பேரையும் கோர்ட்ல ஆஜர்படுத்துவோம். இந்த வழக்குல மறைக்கறதுக்கு எதுவுமே இல்ல. எல்லாமே தெளிவா இருக்கு. அதனால நீங்க தைரியமா ஆஜராகலாம். ஜட்ஜ் கிட்ட உண்மையைச் சொல்லலாம்.
அதுக்குள்ள, முன்ஜாமீன் வாங்கறதுக்கான முயற்சியையும் பண்ணிடுங்க. இல்லன்னா… நானே எனக்குத் தெரிஞ்ச லாயர் மூலமா அதைப் பண்ணிடுறேன். இனியாவது நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா வாழுங்க. எந்தச் சூழ்நிலையிலும் பிரிஞ்சிடாதீங்க. நடந்த சம்பவங்களைப் பார்க்கும் போது, நீங்க ரெண்டு பேரும் தனித்தனியா வாழ முடியாதுன்னு தெரியுது. எனிவே… ஆல் த பெஸ்ட் அன்ட் அட்வான்ஸ் விஸ்ஸஸ் டூ யுவர் ஹேப்பி மேரிடு லைஃப்..!” என்று சொல்லிவிட்டு, தனது இருக்கையில் இருந்து எழுந்த இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், அமுதாவின் கையைப் பிடித்து, ஆனந்த் கையோடு இணைத்து வைத்தார்.நீண்ட இடைவேளைக்குப் பிறகான அந்த ஸ்பரிசத்தில் மெய்மறந்து நின்றனர், ஆனந்தும் அமுதாவும்! அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஷ்ரவ்யாவின் கண்களிலோ கண்ணீர் பெருகியது.