அடுத்த சில நொடிகளில் இன்ஸ்பெக்டர் அருகில் போடப்பட்டு இருந்த சேரில் பவ்வியமாக வந்து அமர்ந்தாள் ஷ்ரவ்யா. அவளுக்குப் பக்கத்தில், சோகம் அப்பிய முகத்தோடு இருந்தான் ஆனந்த்.
“ஷ்ரவ்யா… உங்களை இங்கே அழைச்சிட்டு வந்த ஆனந்த் எல்லா உண்மையையும் சொல்லிட்டார். நீங்களும் இதுவரைக்கும் உண்மையைத்தான் சொல்லிட்டு வர்றீங்க. உங்க தோழி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கூட உண்மைதாங்கறத நாங்க கன்ஃபார்ம் பண்ணிட்டோம். இனியும் இந்த விசாரணையில உண்மையை மட்டும்தான் நீங்க சொல்வீங்கன்னு எதிர்பார்க்கறோம்.”
“நான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை இன்ஸ்பெக்டர். என்னோட தோழி சாவுக்கு நியாயம் கிடைக்கணும், உண்மையாகக் காதலிச்ச ஒரே ஒரு தப்பு மட்டுமே பண்ணின இந்த ஆனந்த் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்கூடாதுங்கற ஒரே காரணத்துக்காகத்தான் யாருக்கும் தெரியாம நான் இவ்வளவு தூரம் வந்து இருக்கேன். அதனால நான் சொல்றத நீங்க அப்படியே நம்பலாம்.”
“அப்படின்னா… அமுதாவை ஸாரி… குணசீலனைக் கொலை செய்யறதுக்காக ஆனந்த் வெச்சிருந்த விசப் பாட்டல்ல விசத்தை எடுத்துட்டு தேனை ஏன் கலந்தீங்க? ”
“ஆனந்த் மீது நான் வெச்சிருக்கற லவ்தான் அதுக்குக் காரணம்!”
“என்னது… லவ்வா?”
“ஆமா… நான் ஆனந்த்தை இப்போ சின்சியரா லவ் பண்ணுறேன். ”
“விசாரணையை திசை திருப்புறதுக்காகப் பொய் சொல்லாதீங்க மேடம். நீங்க இங்கே வந்த நோக்கமும், ஆனந்த் இங்கே வந்த நோக்கமும் வேற வேற. அப்படி இருக்கும் போது உங்களுக்குள் எப்படி லவ் வர முடியும்?”
“இப்பெல்லாம் பார்த்த உடனேயே லவ் பண்ண ஆரம்பிச்சிடுறாங்க. சிலர் பார்க்காமலேயே கூட லவ் பண்ணுறாங்க. உண்மை இப்படி இருக்கும் போது, நாலைஞ்சு நாளா இவர்கூட நான் இருக்கேன். அவர் என்கிட்ட நிறைய மனம்விட்டுப் பேசி இருக்கார். நானும் நிறைய விஷயங்களை அவர்கிட்ட பகிர்ந்து இருக்கேன். இந்த சில நாள் பழக்கத்துலயே நான் அவரைப் பற்றி நிறைய புரிஞ்சுக்கிட்டேன். அவரும்தான்! அப்படி இருக்கும் போது நான் ஏன் அவரை லவ் பண்ணக்கூடாது? வேணும்னா, ஆனந்த் கிட்டயே கேட்டுப் பாருங்க; அவர்கூட இந்த லவ்வை ஒத்துப்பார். ”
ஷ்ரவ்யா இப்படிச் சொன்னதும் அவளைப் பார்த்து சட்டென்று திரும்பினான் ஆனந்த். அவன் பேசுவதற்கு முன்பாக இன்ஸ்பெக்டரே குறுக்கிட்டார்.
“ஆனந்த்… ஷ்ரவ்யா உங்களை லவ் பண்ணுறதா சொல்றாங்க? இது, எந்த வகையில உண்மை? ”
“இதுல உண்மையே இல்லை சார். என் மீது அவங்களுக்கு லவ் வர்றதுக்கு எந்தக் காரணமுமே இல்லை. சும்மா, விளையாட்டுக்குச் சொல்றாங்கன்னு நினைக்கறேன். ”
ஆனந்த் இப்படிச் சொல்ல, ஷ்ரவ்யா அவசரமாக குறுக்கிட்டாள்.
“ஆனந்த் சொல்றதுல உண்மை இல்லை சார். நான் அவரை சின்சியராத்தான் லவ் பண்ணுறேன். அவரும் என்னை லவ் பண்ணுறாருன்னு எனக்குத் தெரியும். ஆனா, வெளிப்படுத்த தயங்குறாரு. முதல் காதலோட வலி, என் காதலை வெளிப்படுத்த விடாம தடுக்குது. இதுதான் உண்மை! ”
சத்தியம் செய்யாத குறையாகச் சொன்னாள் ஷ்ரவ்யா. மறுபடியும் மறுத்துப் பேச வாயெடுத்தான் ஆனந்த். ஆனால் அவனை இன்ஸ்பெக்டர் தடுத்துவிட்டார்.
“சாரி… மிஸ்டர் ஆனந்த். உங்க லவ் மேட்டர உங்களுக்கு உள்ளேயே வெச்சிக்கோங்க. இப்போ நாங்க கேட்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க! ” என்ற இன்ஸ்பெக்டர், ஷ்ரவ்யா பக்கம் திரும்பினார்.
“ஷ்ரவ்யா… உங்ககிட்ட மறுபடியும் அதே கேள்விதான்; விசப் பாட்டல்ல இருந்த விசத்தை எடுத்துட்டுத் தேனை ஏன் கலந்து வெச்சீங்க? ”
“அதே பதில்தான் இன்ஸ்பெக்டர். ஆனந்த்தை நான் லவ் பண்ணுறேன். அவர் விசத்தைக் கலந்து, அதைக் குடிச்சி, அமுதாவோ அல்லது குணசீலனோ இறந்து போயிட்டா… பாவம், இவர் அல்லவா மாட்டிப்பார்? அப்படியொரு சம்பவம் நடந்தால் எங்களோட காதல் என்னிக்கு கைகூடும்? அதனால்தான் விசப் பாட்டலைட் தேன் பாட்டல் ஆக்கிட்டேன். ”
ஷ்ரவ்யா சொல்லவும், திடீரென்று எதையோ யோசித்தவனாக இன்ஸ்பெக்டரைப் பார்த்து அப்படிக் கேட்டான் ஆனந்த்.
“இன்ஸ்பெக்டர்… நான் வெச்சது விசம் இல்ல. அப்படின்னா… குணசீலனைக் கொலை பண்ணினது யாரு? தப்பான வீடியோ எடுக்க முயற்சி பண்ணின பையனா?”
“அது வந்து…”
உண்மையைச் சொல்ல வாயெடுத்தார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன். அதற்குள் அவசரமாக அவர் முன்பு வந்து நின்றார் கான்ஸ்டபிள் கந்தசாமி.
“சார்… ஜி.எச்ல ட்ரீட்மென்ட் எடுத்துட்டு வர்ற அமுதா சுயநினைவுக்கு வந்துட்டாங்களாம். அங்கேயிருந்து டாக்டர் பேசினார்.”
கான்ஸ்டபிள் சொல்லி முடிக்கவும் அவசரமாக ஜி.எச்-க்கு கிளம்பினார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்.