மனிதர்கள் எல்லோரும் சாதாரணமானவர்கள்.நோய் நொடியில் விழக்கூடியவர்கள். தவறு செய்யக்கூடியவர்கள். மிகப் பெரிய அபத்தங்களுக்கு ஆளாகக்கூடியவர்கள். ஆனால் சூரியனை வழிபடுவதால் ஆரோக்கியமும் தீர்க்க ஆயுளும் உண்டாகும்.
சூரியனால் இடையறாது பெரும் உதவி கிடைத்துக் கொண்டிருக்கிறது. சூரியன் ஒரு மகத்தான சக்தி. சந்திரன் இன்னொரு சக்தி. நட்சத்திரங்கள், கிரகங்கள் எல்லாமும் தனித்தனியே சக்தி வாய்ந்தவை.
அவை பூமியோடு நெருங்கிய சம்பந்தமுடையவை. அவற்றின் தாக்கம் இங்கே இருக்கிறது. அப்படித் தாக்கம் இருக்கின்ற, தொடர்பு இருக்கின்ற, நல்லது செய்கின்ற கிரகங்களையும் சூரியனையும் சந்திரனையும் வழிபடுவதில் என்ன தவறு?
எல்லா சக்தியும் வழிபடக்கூடியவை. சக்தியை அலட்சியம் செய்கிறவர் கடவுளை அலட்சியம் செய்கிறார். கடவுளின் பேச்சாக, கடவுளின் குணமாக, கடவுளின் உருவமாக, சூரிய, சந்திர கிரகங்கள் நம் முன்னே தோன்றி இருக்கின்றன.
கடவுளை கண்டறிய முடியாது. பேசிப்புரிந்துகொள்ள முடியாது. அதனால் பார்க்க முடிகிற கடவுளாக நினைத்து சூரியனை வழிபடுவதில் தவறே கிடையாது.
நம் நாட்டில் மட்டுமின்றி உலகம் எங்கிலும் சூரியவழிபாடு பலகாலமாக இருந்து வந்துள்ளது. 3000 ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்தியர்கள் சூரியனை வழிபட்டு வந்துள்ளனர்.
அந்நாட்டை ஆண்ட பாரோ வம்சத்து அரசர்கள் தங்களை சூரியன் வழி வந்தவர்களாக கருதினர். அங்கும் உழவுத்தொழில் சிறக்க சூரியனை மக்கள் வழிபட்டனர். பாரசீகர்களின் வேதநூலான ஜெந்த் அவெஸ்தாவில் மித்ரன் என்ற பெயரில் சூரியன் குறிக்கப்படுகிறார்.
மித்ரன் என்ற பெயர் சூரியனுக்கு உண்டு. மாகர்கள் எனப்படும் பாரசீகர்கள் சூரிய ஆராதனைக்காக இந்தியா வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
கிரேக்கர்கள் சூரியனை அபொல்லோ என்ற பெயரிலும், ரோமானியர்கள் ஹைபீரியன் என்னும் பெயரில் வழிபட்டனர். தென்அமெரிக்காவிலுள்ள பெருநாட்டில் இன்காஸ் இனத்தவர்களிடமும் சூரியவழிபாடு இருந்தது.