Home » அதிசயம் ஆனால் உண்மை » நாவல்கள் » இரண்டாம் தேனிலவு – 30
இரண்டாம் தேனிலவு – 30

இரண்டாம் தேனிலவு – 30

ஊட்டி பி1 போலீஸ் நிலையத்தின் தொலைபேசி பலமாக அலறியது. இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ரிசீவரை எடுத்து காதுக்கு கொடுத்தார்.அவர் பேசுவதற்கு முன்பாகவே எதிர்முனையில் பேசிய நபர் பதற்றத்துடன் பேசினார்.

“சார்… போலீஸ் ஸ்டேஷன்தானே?”

“ஆமா… நீங்க யாரு? ஏன் இவ்ளோ பதற்றமா பேசுறீங்க?”

“சார்… நான் ஊட்டி லேக் ரோட்டில் உள்ள ….. லாட்ஜ் மேனேஜர் ஆறுமுகம் பேசுறேன். எங்க லாட்ஜ்க்கு இரண்டு நாளைக்கு முன்னாடி புதுமண ஜோடிங்க ஹனிமூன் கொண்டாட வந்திருந்தாங்க. இன்னிக்குக் காலையில இருந்தே அவங்க ரூம் ரொம்ப நேரமாக பூட்டி இருந்துச்சு. அவங்க ரெண்டு பேரும் வெளியே எங்கேயும் போகலங்கறது எங்களுக்கு தெரியும்ங்கறதுனால, சேஃப்டி கீயை யூஸ் பண்ணி இப்பதான், கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ரூமை திறந்து பார்த்தோம். அங்கே தங்கியிருந்த புதுமண ஜோடிங்க ரெண்டு பேரையும் யாரோ கொலை செஞ்சி இருக்காங்க. உடனே வாங்க…” என்று ஆறுமுகம் சொல்ல, அடுத்த பத்தாவது நிமிடத்தில் அந்த லாட்ஜ் முன்பு வேகமாக வந்து இறங்கியது போலீஸ் படை.

குணசீலனும் அமுதாவும் தங்கியிருந்த 207ஆம் எண் கொண்ட அறைக்கு வந்து சேர்ந்த இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், கொலை செய்யப்பட்டு கிடந்த குணசீலனையும், அமுதாவையும் கூர்ந்து பார்த்தார். குணசீலனின் நெஞ்சில் கத்திக்குத்து காயம் பலமாகத் தெரிந்தது. அவனது நெஞ்சைப் பதம் பார்த்த கத்தி, பெட் ஓரமாக சரிந்து விழுந்து கிடந்த அமுதாவின் கையில் இருந்தது.

இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனுக்குக் குழப்பம். கணவன் – மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் இருவரும் ஒருவரையொருவர் குத்திக் கொண்டார்களா என்று சந்தேகித்தவர், கொலைக்கான தடயம் ஏதாவது இருக்கிறதா என்று தேடினார். குணசீலன் பயன்படுத்திய லேப்-டாப் இரண்டு பாகமாக உடைந்து கிடந்தது. அமுதாவின் ஹேண்ட் பேக்கும் தூக்கி வீசியெறியப்பட்டு கிடந்தது. அமுதாவின் ஹேண்ட் பேக்கில் ஏதாவது தடயம் கிடைக்குமா என்று தேடிப் பார்த்தார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன். ஆனால், எதுவும் கிடைக்கவில்லை.

சுவர் ஓரமாக ஒருக்கழித்த நிலையில் கிடந்த அமுதாவின் உடலை, தன் கையில் இருந்த லத்தியால் மல்லாக்காக திருப்பிப் போட்டபோதுதான் எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இறந்ததாக நினைத்த அமுதாவின் வெள்ளைக் கழுத்தில் நாடித் துடிப்பு இருப்பது தெரிந்தது.

“யோவ் ஏட்டையா… இந்தப் பொண்ணு இன்னும் சாகல. உடனே ஆம்புலன்ஸை வரச் சொல்லுங்க. இந்தப் பொண்ணை காப்பாத்தினாதான், குற்றவாளி யாருங்கறதை கண்டுபிடிக்க முடியும்” என்று இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் பலமாக சொல்ல… ஏட்டு ஏகாம்பரம் வேகமாக வெளியேறினார்.

“அந்தப் பொண்ணு சாகலங்கறதை கண்டுபிடிச்சிட்டோம். ஒருவேளை… இவனும் உயிரோட இருக்கலாமோ…” என்று இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், குணசீலன் மீது சந்தேகப் பார்வையை வீசிய அக்கணமே அரசு மருத்துவ குழுவினர் அங்கே வந்து சேர்ந்தனர்.

குணசீலன் உடலையும், அமுதாவின் உடலையும் பரிசோதனை செய்த டாக்டர்கள் அமுதா உயிரோடு இருப்பதையும், குணசீலன் இறந்து விட்டதையும் உறுதிப்படுத்தினர். அடுத்த நிமிடமே அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள் அமுதா. கொலை நடந்த லாட்ஜில் போலீஸ் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. படுக்கை அறை மட்டுமின்றி குளியல் அறையிலும் ஏதாவது தடயம் கிடைத்து விடாதா என்று தேடிப் பார்த்தார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன். அவரது முயற்சி வீண் போகவில்லை. பாதி உபயோகப்படுத்தப்பட்டு மீதி இருந்த பான்பராக் பாக்கெட் ஒன்றை குளியல் அறையில் இருந்து கண்டெடுத்த இன்ஸ்பெக்டர் குணசீலன், சில நிமிடங்கள் அதையே கையில் வைத்துக்கொண்டு பலமாக யோசித்தார்.

அப்போது ஏட்டு ஏகாம்பரம் அவர் அருகில் வந்தார்.

“சார்… குற்றவாளி யாருன்னு கண்டுபுடிச்சிட்டீங்கன்னு நினைக்கறேன். சரிதானே?”

“எதை வெச்சியா அப்படி சொல்ற?”

“நீங்க பலமா யோசிக்கிறீங்களே… அதை வெச்சுதான்!”

“இந்த கேஸ்ல இதுவும் முக்கிய எவிடென்ஸ்தான். இங்கே தங்கியிருந்த ரெண்டு பேரும் ஓரளவு ரிச்சான ஃபேமிலியைச் சேர்ந்தவங்க. இறந்து போன குணசீலன் ஐ.டி. கம்பெனியில வேலை பார்த்து இருக்கான். தன்னோட கம்பெனி ஐ.டி.யை குடுத்துதான் இங்கே தங்கி இருக்கான். இவனுக்கும், உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்கற அமுதாவுக்கும் கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் கல்யாணம் ஆகி இருக்கு. ஹனிமூன் கொண்டாடுறதுக்குத்தான் இங்கே வந்து இருக்காங்க. அப்படி வந்த இடத்துலதான் குணசீலன் கொலை செய்யப்பட்டு இருக்கான். அவனோட மனைவி கொலை முயற்சியில இருந்து தப்பிச்சி இருக்கா. ஆனா, இப்போ உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்கா.

அந்தப் பொண்ணு சுயநினைவுக்கு வந்தாதான் நடந்தது என்னன்னு தெரிஞ்சுக்க முடியும். அதேநேரம், குற்றவாளி யாருங்கறதை நான் இப்பவே கண்டுபிடிச்சிட்டேன். குற்றவாளி எங்கேயும் ஓடிப் போயிடல. இதே ஊட்டியிலதான் இருக்கான். அவன், இங்கே கூட இருக்கலாம்…” என்ற இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஏட்டு ஏகாம்பரம் மீது அப்படியொரு பார்வையை வீசினார்.

“சார்… குற்றவாளி இங்கேகூட இருக்கலாம்னு சொல்லிட்டு, என்னைப் போய் அப்படி பாக்குறீங்களே. நீங்க நினைக்கற மாதிரி, இந்தக் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல சார்.”

“யோவ் ஏட்டு. அவசரப்படாதய்யா..! இந்த அவசரப் புத்தியினாலதான் 45 வயது ஆகியும் இன்னும் ஏட்டாவே இருக்குற. நான் சொல்ல வந்ததே வேற!”

“போன வாரம் டில்லியில, இரவு நேரத்துல பாய் ப்ரெண்டோட பஸ்ல போன மாணவியை சில பசங்க கற்பழிச்சிக் கொன்னாங்க இல்லீயா? அது மாதிரியான முயற்சியா இந்தக் கேஸ் இருக்குமோ?”

“இப்பதான்யா… நீ ஒழுங்கா யோசிக்க ஆரம்பிச்சி இருக்க. என்னோட சந்தேகமும் அதேதான். இங்கே மயங்கிக் கிடந்த பொண்ணு, பாக்கறதுக்கு ரொம்பவும் அழகா இருக்கா. அவளைக் கற்பழிக்கும் நோக்கத்தோடு உள்ளே நுழைஞ்சி, அதைத் தடுக்க வந்த இவனை கொலை செஞ்சுட்டும், அவளைத் தாக்கிட்டும் குற்றவாளி தப்பிச்சு இருக்கலாம்னு நினைக்கறேன்.”

“இப்பதான் சார், எனக்கு இன்னொரு டவுட் வருது..!”

“குற்றவாளி ஒருத்தனா, ரெண்டு பேரா? அல்லது, அதுக்கும் மேலேயான்னு கேக்குறீயாக்கும்!”

“ஆமா சார். என்னோட மைன்ட் வாய்ஸை எப்படி சார் கரெக்ட்டா கண்டுபிடிச்சிங்க?”

“அதனாலதான்யா நான் இன்ஸ்பெக்டரா இருக்கேன்! சரி, ஓவரா டயலாக் பேசினது போதும். ஏதாவது தடயம் கிடைக்குதான்னு பாரு…” என்று சொன்ன இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், எதார்த்தமாக உடைந்து கிடந்த நாற்காலிக்கு அடியில் ஏதோ ஒரு பொருள் விசித்திரமாய் தெரிய… அதை எடுக்கக் குனிந்தார்.

அது, வேறு ஒன்றுமல்ல; அமுதா குளியல் அறையில் குளிப்பதை படம் பிடிக்க ரூம்பாய் விவேக் வைத்துவிட்டுச் சென்ற அதே கீ – செயின் கேமராதான்.

 

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top