“நான்காம் தேதி… ஏன், திடீர்னு தேதி கேக்குற?”
“அப்போ… நாம மீட் பண்ணி நாலு நாள்தான் ஆகுதா?”
“நாம மீட் பண்ணினது மட்டுமல்ல, நாம பிரியறதுக்கும் இன்னும் நாலு நாள்தான் இருக்கு…”
“ஏன் ஆனந்த் அப்படி பேசறீங்க?”
“நம்ம ரெண்டு பேரோட ரிலேசன்சிப்க்கு போட்டு இருக்கற அக்ரிமென்ட் கரெக்ட்டா எட்டே நாள்தான். அதை மீறிட்டா எனக்குதான் பிரச்னை. அதனாலதான் அப்படிச் சொன்னேன்..”
ஆனந்த் இப்படிச் சொன்னதால் ஷ்ரவ்யா முகத்தில் திடீரென்று வந்த சோகம் அப்பிக் கொண்டது. பேசுவதற்குத் திணறினாள். அவளது மவுனத்தை கலைக்கும் விதமாக அலறியது இன்டர்காம் தொலைபேசி.
“ஹலோ… நான் ஆனந்த் பேசுறேன்…”
“ஸார்… ரிசப்ஷன்ல இருந்து பேசுறேன். நீங்க முதுமலைக்கு போயிட்டு வர்றதுக்கு கேட்டிருந்த கார் ரெடியா இருக்கு. நீங்க வந்த உடனே கிளம்பிடலாம்.”
“சரி, இன்னும் 10 நிமிஷத்துல ரெண்டு பேரும் வந்திடுறோம்…”
தொலைபேசி இணைப்பைத் துண்டித்த ஆனந்த், காலையிலேயே ஓரிரு கண்ணீர்த் துளிகளை தியாகம் செய்த ஷ்ரவ்யாவின் அருகில் வந்து அமர்ந்தான். அவள் தோள்மீது ஆதரவாய்க் கைவைத்தான்.
“ஏன் ஷ்ரவ்யா திடீர்னு சோகமாயிட்ட? இன்னும் நாலு நாள்ல முடியப் போறதுன்னு நான் சொன்னது நம்ம ரெண்டு பேருக்கும் இடையிலே போடப்பட்டு இருக்குற ஜென்டில்மேன் அக்ரிமென்டைத்தான். இதுக்கு அப்புறமாத்தான் நம்மளோட உண்மையான ரிலேசன்ஷிப் ஆரம்பமாகப் போகுது. அந்த ரிலேசன்ஷிப்க்கு என்ன பெயர் வைக்கணும்ங்கறது உனக்கே தெரியும். ஸோ… சோகம் எல்லாம் வேண்டாம். பீ ஹேப்பி..!”
ஆனந்த் வாயில் இருந்து இப்படியொரு வார்த்தை வரும் என்பதை எதிர்பார்க்காத ஷ்ரவ்யா, சோகத்தை வேகமாகக் கரையவிட்டு, அன்றலர்ந்த தாமரையாய் முகத்தைப் பிரகாசிக்கச் செய்தாள்.
“ஆனந்த்… இவ்ளோ சீக்கிரத்துல என்னைப் புரிஞ்சிப்பீங்கன்னு நான் நெனைக்கல. இந்த நிமிஷம் ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்தறதுன்னு குழப்பமா இருக்கு. கொஞ்சம் ரூமுக்கு வெளியே போய் நிக்கறீங்களா?”
“என்ன சொல்ற ஷ்ரவ்யா? ரொம்பவும் சந்தோஷமா இருக்கறேன்னு சொல்லிட்டு, வெளியே போய் நிக்கச் சொல்ற?”
“காரணம் இல்லாமல் சொல்ல மாட்டேன் ஆனந்த். ப்ளீஸ் ஒரு அஞ்சே நிமிஷம் வெளியே நில்லுங்களேன்…”
“காலையிலேயே சஸ்பென்ஸ் எல்லாம் எதுக்கு?”
“நீங்க மட்டும் சஸ்பென்ஸ் வைக்கலாம், நாங்க வைக்கக்கூடாதா-? முதல்ல நீங்க வெளியே போய் நில்லுங்க ஆனந்த். நீங்க கேள்வி மேல கேள்வி கேட்டுட்டே இருந்தா, நான் கேட்ட அஞ்சு நிமிஷம் பத்து நிமிஷமா ஆயிடும். அப்போ முதுமலைக்கு கிளம்பற டைம் லேட் ஆயிடும்.”
“அஞ்சு நிமிஷத்துல நீ என்ன பண்ணப் போறேன்னு எனக்கு தெரியல. ஆனாலும், இந்த சஸ்பென்ஸ் கூட ஒருவகையில் எனக்கு புடிச்சிருக்கு. ஸோ… வெளியே வெயிட் பண்ணுறேன். நீ கேட்ட அஞ்சு நிமிஷத்தை ஐம்பது நிமிஷமா ஆக்கிடாத. கீழே கார் வெயிட்டிங். நீ லேட் ஆனா ப்ரோகிராம் கேன்சல் ஆயிடும்…” என்று சொல்லிவிட்டு லாட்ஜ் ரூமைவிட்டு வெளியே வந்தான் ஆனந்த்.
ஐந்து நிமிடம் வேகமாக நகர்வதற்குள் 100 தடவையாவது வாட்ச்சைத் திருப்பித் திருப்பிப் பார்த்திருப்பான் ஆனந்த். சரியாக ஐந்து நிமிடம் ஆனதும் காலிங்பெல்லை அழுத்த முயன்றான் ஆனந்த். அதற்குள் அறைக் கதவு திறந்து கொண்டது. ஆனால், ஷ்ரவ்யா வெளியே எட்டிப் பார்க்கவில்லை. ஆனந்த்தான் கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனான்.
அங்கே… அவன் எதிர்பாராத கோலத்தில் நின்றிருந்தாள் ஷ்ரவ்யா. ஆனால், அவனுக்கு ரொம்ப ரொம்ப பிடித்தக் கோலத்தில்! ஆம்… மெரூன் கலர் புடவை, எல்லோ கலர் ஜாக்கெட், நெற்றி வகிட்டில் குங்குமம், தலை நிறைய மல்லிகைப் பூ சகிதமாக நாணத்தோடு நின்றிருந்த ஷ்ரவ்யாவின் அழகில் நடிகை அனுஷ்கா தோற்றுப் போய்விட்டார். ஆனந்த் தனது கழுத்தில் கட்டிய தாலியான மஞ்சள் கயிற்றை பார்வைக்கு பளிச்சென்று தெரியும் வகையில் வெளியே இழுத்துப் போட்டிருந்தாள்.
ஷ்ரவ்யா இப்படியொரு இன்ப அதிர்ச்சிக் கொடுப்பாள் என்று ஆனந்த் துளியும் எதிர்பார்க்கவில்லை. அவளை வியப்பாய்ப் பார்த்தான்.
“ஷ்ரவ்யா… உன்னை இந்த ஊட்டியில இப்படியொரு மங்கலகரமான கோலத்துல பார்ப்பேன்னு நெனைக்கவே இல்லை. இந்தக் கோலத்துல உன்னைப் பார்க்கறப்போ… உண்மையிலேயே நீ என்னோட மனைவிங்கற ஃபீலிங் வருது…”
இதற்குமேல் பேச ஆனந்துக்கும் வாய்வரவில்லை. தன்னை அறியாமல் ஷ்ரவ்யா அருகில் சென்றவன், அவளை இறுகக் கட்டிப் பிடித்துக்கொண்டு உச்சி முகர்ந்தான். அந்த இன்பத்தில் ஷ்ரவ்யாவும் தன்னை மறந்தாள்.
அறைக் கதவு திறந்து கிடக்க… இருவரும் மெய்ம்மறந்து கட்டிப்பிடித்துக் கொண்டிருக்க… திடுதிப்பென்று அலறிய இன்டர்காம் அவர்கள் இருவரையும் பிரித்தது.