Home » அதிசயம் ஆனால் உண்மை » நாவல்கள் » இரண்டாம் தேனிலவு – 13
இரண்டாம் தேனிலவு – 13

இரண்டாம் தேனிலவு – 13

குன்னூருக்கு முன்னதாக அமைந்திருந்தது அந்த அழகான இடம். மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலையேறத் துவங்கிவிட்டாலே எல்லாமே அழகுதான் என்றாலும், போகப்போக அழகு இன்னும் மெருகேறிக்கொண்டே போகும். அப்படி அழகு மெருகேறி இருந்த இடம்தான் அது.

“ஆனந்த் இது எந்த இடம்? நாம மட்டும்தான் இங்கே இருக்கோம். இப்படி தனியா இருக்குறதுனால எந்தப் பிரச்சினையும் இல்லையே…”

மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி மெயின் ரோட்டில், வாடகைக்கு அமர்த்தி வந்த காரை ஓரமாக நிறுத்தி விட்டுக் காட்டுக்குள் சிறிது தூரத்திற்குத் தன்னை தனியாக அழைத்து வந்ததால் அப்படிக் கேட்டாள் ஷ்ரவ்யா.

“தனியா கூட்டிட்டு வந்து ஏதாவது செய்திடுவேன்னு பயப்படுறீயா?”

“ச்ச்சீ… அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாது. நம்ம காமெடி நடிகர் வடிவேலுக்கு எப்படி பிஞ்சி மூஞ்சோ, அது மாதிரி உங்களுக்கு அம்மாஞ்சி மூஞ்சி. நிச்சயமாக நீங்க அப்படியொரு காரியத்துல இறங்க மாட்டீங்க.”

“எப்படி உறுதியா சொல்லுற?”

“எல்லாம் ஒரு கெஸ்ஸிங்தான்!”

“அப்படீன்னா… உன் கணக்கு தவறாப் போகலாம் இல்லீயா?”

“ஏன் நெகட்டீவா திங் பண்ணச் சொல்றீங்க? எல்லாம் நல்லதா நடக்கும்னு நினைச்சா, நல்லதாவே நடக்கப் போகுது. அதை விட்டுட்டு, ஏன் தப்பு தப்பா நாமளே கற்பனை பண்ணிக்கனும்?” என்ற ஷ்ரவ்யா, தான் கொண்டு வந்த பேக்கைத் திறந்தாள்.

அவள் பேக்கின் ஜிப்பை திறந்த மாத்திரத்தில் அப்படியொரு சுவையான மணம் கமகமவென்று பரவியது.

“ஷ்ரவ்யா… அது என்ன பழம்? இவ்ளோ வாசனையா இருக்கு? எங்கே வாங்கின?”

“நாம கார் நிறுத்துன இடத்துக்குப் பக்கத்துல ரோட்டோரமா ஒரு அம்மா பலாப்பழத்தை விற்றுட்டு இருந்தாங்க. அவங்க கிட்ட வாங்கினதுதான். இது மலை உச்சியில் விளைந்த பலாப் பழமாம். அதனால்தான் இப்படியொரு வாசனை…” என்றவள், பலாப் பழத்தின் விதைகளை மட்டும் கீழேப் போட்டுவிட்டு பழத்தை மட்டும் ருசித்துக் கொண்டிருந்தாள்.

“ஷ்ரவ்யா… நீ மட்டும் பழத்தை சாப்பிட்டுட்டு இருக்கீயே… எனக்கும் தரக்கூடாதா?”

“கண்டிப்பா தர மாட்டேன்.”

“ஏன்… ஏதாவது கோபமா?”

“இப்போ டைம் என்ன ஆச்சு?”

ஷ்ரவ்யா அப்படிக் கேட்ட பிறகுதான் தனது வலது கையில் கிடந்த வாட்சை திருப்பிப் பார்த்தான். மணி மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது.

“ஆஹா… மணி மூணு ஆகப் போகுதா? நாம மதியம் சாப்பிடவே இல்லையே…” என்ற ஆனந்த், அவசரம் அவசரமாக அங்கிருந்து புறப்பட்டான். வந்த வழியில் சிறிது தூரம் வந்த பிறகுதான், விதைகள் நீக்கிய 5 பலாச்சுளைகளை ஆனந்திடம் நீட்டினாள் ஷ்ரவ்யா.

“நீதான் எனக்கு தர மாட்டேன்னு சொன்னீயே… வேறு எதற்கு அதை என்கிட்ட தர்ற?”

“பொய்க் கோபம் எல்லாம் வேண்டாம். பேசாமச் சாப்பிடுங்க…”என்றவள், அந்த பலாச்சுளைகளை அவனது கையில் திணித்தாள். அதை வாங்கிச் சாப்பிட்டவன் ஆச்சரியமாகப் பேசத் தொடங்கினான்.

“ஷ்ரவ்யா… இந்த பலாச்சுளையின் சுவை வித்தியாசமாக இருக்குதே… எப்படி?”

“மலை உச்சியில் விளைவதால் இந்த சுவையாக இருக்கலாம்.”

“உண்மையான காரணம் அதுவல்ல; அதற்கான உண்மையான காரணத்தை நான் கண்டுபிடித்து விட்டேன்.”

ஆனந்த் இப்படிச் சொன்னதும், என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ள அவனை ஆவலாகப் பார்த்தாள்.

“நான் அதற்கான பதிலை கவிதையாகத்தான் சொல்வேன்.”

“எப்படிச் சொன்னாலும் சரிதான், எனக்குப் பசிக்கிறது. சீக்கிரமாக ஏதாவது ஓட்டலுக்குப் போய் சாப்பிடுவோம். நீங்க பதிலை சொல்லிட்டே போங்க. நான் அதை கேட்டுட்டே வர்றேன்.”

ஷ்ரவ்யா இப்படிச் சொன்னதும், தனது பதிலை கவிதையாகவே சொன்னான் ஆனந்த்.

“பலாச்சுளை
இவ்ளோ இனிக்கிறதே…
அது
தேனீ முத்தமிட்டதாலா?
இல்லவே இல்லை
உன்
வெள்ளை விரல்களின்
இன்பத் தீட்டுப் பட்டதால்!

ஆனந்த் சொன்ன கவிதையில் ஏதோ உள் அர்த்தம் இருப்பது போல் உணர்ந்தவள், “கவிதை நல்லாத்தான் இருக்கு. ஆனா, பசி மயக்கத்துல என்னால அதை ரசிச்சுக் கேட்க முடியல. நாம ரூமுக்குப் போனதும், இன்னிக்கு நைட் அதுபத்தி சொல்லுங்க. ரசிச்சுக் கேக்குறேன். ஓ.கே.வா?” என்றாள்.

“கவிதையைப் பாராட்டுவாள் என்று பார்த்தால், ஜகா வாங்கிவிட்டாளே…” என்று உள்ளுக்குள் நினைத்த ஆனந்த், அடுத்த இரண்டு நிமிடத்தில் சாலையோரம் வந்துவிட்டான். ஆனால், அவர்கள் வந்த காரைக் காணவில்லை.

அங்கே இங்கே என்று ஓடிச் சென்று பார்த்தான். கார், இல்லவே இல்லை. ஷ்ரவ்யாவுக்கும் காரைக் காணாததால் அதிர்ச்சி.

இரண்டு பேரது லக்கேஜ்களும் காரில்தான் இருந்தன. காரை ஓரமாக நிறுத்தச் சொன்னதால் டிரைவர் கோபித்துக் கொண்டு வண்டியை எடுத்துச் சென்று விட்டாரா? இல்லை, இதுபோன்று ஏமாற்றுப் பேர்வழிகளும் இங்கே இருக்கிறார்களா?

ஆனந்த்துக்கு பெரிய குழப்பமாக இருந்தது. ஷ்ரவ்யாவும் பரபரப்பாக காணப்பட்டாள்.

அந்த நேரத்தில் அவசரமாக தனது பேண்ட் பாக்கெட்டிற்குள் கையைவிட்டு எதையோ தேடினான் ஆனந்த். அவனது மணிப் பர்ஸ் அங்கே பத்திரமாக இருந்தது. அவனது பிரஸ் அடையாள அட்டை, டெபிட் கார்டுகள் அதில் இருந்தன.

டிரைவர் சென்று விட்டதால் பணத்திற்குப் பிரச்சினை இல்லை. ஆனால், டிரெஸ்க்கு என்ன செய்வது? சரி… ஊட்டிக்குப் போய் புதுசா வாங்கிக்க வேண்டியதுதான் என்று முடிவெடுத்த ஆனந்த், ஷ்ரவ்யா பக்கம் திரும்பினான்.

”ஷ்ரவ்யா… நீ முக்கியமா எந்தப் பொருளையும் மிஸ் பண்ணலீயே…”

”நான் கொண்டு வந்தது இந்த ஒரு ஹேண்ட் பேக் மட்டும்தான். நல்லவேளை… பலாப் பழம் வாங்கிட்டு வந்ததுனால என் பேக் என்னோட வந்திடுச்சு.”

ஷ்ரவ்யா மேற்கொண்டு பேசுவதை எதிர்பார்க்காத ஆனந்த், சற்று தூரத்தில் பலாப்பழம் விற்றுக்கொண்டிருந்த வயதான பெண்மணியை நோக்கி ஓடினான்.

“அம்மா… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இங்கே ஒரு கார் நின்னுச்சே. அது எங்கே போச்சுன்னு தெரியுமா?”

“வண்டி வந்தது தெரியும். ஆனா, வந்த கொஞ்ச நேரத்துல அது மறுபடியும் திரும்பிப் போயிடுச்சு.”

“இந்த வழியாக ஊட்டிக்கு போச்சா? இல்ல… வந்த வழியே மேட்டுப்பாளையம் நோக்கிப் போயிடுச்சா?”

“மேட்டுப்பாளையம் நோக்கித்தான் போச்சுப்பா…”

பலாப்பழம் விற்கும் பெண்மணி இப்படிச் சொன்னதும், தன்னை அழைத்து வந்த கார் டிரைவர் தன்னை ஏமாற்றி விட்டதை உணர்ந்தான் ஆனந்த்.

தனது முதல் ஊட்டிப் பயணத்தின் ஆரம்பமே ஏமாற்றத்தில் முடிந்ததால் ஷ்ரவ்யாவும் அதிர்ச்சி ஆனாள்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top