காட்டேரி

“உங்களுக்கு எல்லாம் ஆயிரம் பெரியார் வந்தாலும் பத்தாதுய்யா “

செந்தில் குமரன் கொஞ்சம்  கோபமாய் தான் பேசினான்.

” தினமும் டீக்கடைக்கு வர வேண்டியது. அங்க உக்காந்து கண்ணாபின்னான்னு பேச வேண்டியது. எதையாவது ஒண்ணு கெளப்பி விடவேண்டியது ”

” அட என்னப்பா… நீ மட்டும் என்ன? தினமும் தான் இங்க  வர்ர ” பெரியவர் ஒருவர் கையில் முடிந்து போய் வற்றி விட்டிருந்த  தேநீர் கண்ணாடிக் குவளையையும் மற்றோர் கையில் நாளிதழையும்  பிடித்துக் கொண்டு பேசினார்.

” அதுக்காக ரத்தக் காட்டேரில்லாம்  இருக்குதுன்னு  நம்புவீங்களா ?”

” அட போப்பா.. பேப்பர்ல போடறான்னா விஷயம் இல்லாமயா போடுவான் ” பெரியவர் தன் கையில் வைத்திருந்த பிரபல நாளிதழை எடுத்துக் காட்டினார்.

விஷயம் இது தான். யாரோ மந்திரவாதி தப்பு தப்பாய் மந்திரம் சொல்லியதால் அடங்கி இருந்த இரத்தக் காட்டேரி  வீறு கொண்டு எழுந்து ஊர் ஊராய் போய் தன் வேலையைக் காட்டிக் கொண்டிருக்கிறதாம்.  சிலர் வீட்டில் அந்தரத்தில் தட்டுகள் பறந்ததாகவும், ஆடுமாடுகள்  கழுத்தில்  யாரோ கடித்து இரத்தம் உறிஞ்சியது போன்று காயங்கள் இருப்பதாகவும் அந்த நாளிதழில் குறிப்பிட்டிருந்தது.  கூடவே ஒரு  அகோரமான உருவம் வரையப்பட்டு அதன் கோரைப்பல்லில் இரத்தம் சொட்டுவது போல ஓவியர் தன் திறமையை வேறு காண்பித்திருந்தார்.

” அதான் போட்டோவோட போட்டிருக்கான்ல… நம்ப மாட்டியா நீயி ” பெரியவர் விடாமல் பேசிக் கொண்டிருந்தார்.

செந்தில் குமரன் தலையில் அடித்துக் கொண்டான்.

” ஏம் பெருசு, நான் சாமியே இல்லைன்னு சொல்லிட்டுத் திரியற ஆளு. இதுல காட்டேரிய வேற கூட்டிவந்து பயமுறுத்திரியா ”

” நீங்கல்லாம் இளவட்டம் தம்பி. நம்ப மாட்டீங்க. ரத்தம் சூடா இருக்கிறப்ப இப்படி எல்லாம் பேசுவீங்க. நாங்கல்லாம் அப்பவே பாத்திருக்கோமப்பா. திடீர்னு காட்டுல நெருப்பு புடிக்கும். அது கொள்ளிவாப் பிசாசு.  ஆடுமாடுங்கல்லாம் காட்டுல கழுத்துல கடிபட்டு செத்து போயிருக்கும். அது ரத்தக் காட்டேரி.  நான் நேரடியா பாத்திருக்கேன். என் அனுபவத்துல… ” பெரியவர் பேசிக் கொண்டே போனார்.

செந்தில் குமரனுக்கு ரொம்பவும் எரிச்சலாக இருந்தது. ஏன் இப்படி அறியாமையில் திரிகிறார்கள் என்று.  அவர் கையில் இருத பேப்பரைப் பிடுங்கி படித்தான்.

” வீட்டின் முன் சூலம் வரைந்து, அதன் பக்கத்தில் இன்று போய் நாளை வா என்று எழுதி வைத்தால் ரத்தக் காட்டேரி வராது என்று இப்பகுதி மக்கள் நம்புகிறார்கள். மேலும் சிறப்பு பூஜைகள் செய்து, ரத்தக் காட்டேரியை விரட்டி அடிக்க வேண்டும் என்று இப்பகுதியினர் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.  ”

தினசரியை  வாய்விட்டுப் படித்தான்.

“தூத்தேறி. இவனுங்க பணம் பண்றதுக்கு என்னவேணும்னா பண்ணுவானுங்க…   ராஸ்கல்ஸ்…” கோபம் உச்சிக்கேறி கத்தினான்

” அட போப்பா, நீ நம்பாட்டி போ. நாங்க கெளம்பறோம். இப்பவே மணி ஏழாச்சு.   ஏற்கனவே நாங்க எங்க வீட்ல குங்கும வச்சு சூலம் போட்டு  இன்று போய் நாளை வான்னு எழுதியும் வச்சுட்டோம்.  என்னமோ.. நீ தனியா வேற இருக்க. உங்கூட்ல எல்லாரும் திருநாக்கு வெளியூரு போயிருக்காங்க. கொஞ்சம் பாத்து நடந்துக்க. எதுனா பயமா இருந்தா எங்கூட்டுக்கு வந்துடு ”

பெரியவர் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

” பாத்து பெருசு… அது தெலுங்கு பேயா இருந்து தொலைக்கப் போகுது. தமிழ் படிக்கத் தெரியாம உங்கூட்ல தான் முதல்ல நுழையும் “  எரிச்சலும் ஏளனும் கலந்து  பெரியவரைப் பார்த்து கத்திவிட்டு வீட்டுக்கு திரும்பினான்.

வழக்கமாய் பத்து மணி வரைக்கும் அரட்டைக் கச்சேரியாய் இருக்கும் டீக்கடை ஏழுமணிக்கெல்லாம் மூடியாயிற்று. எல்லார் வீட்டு முகப்பிலும் இன்று போய் நாளை வா என்று எழுதி இருந்தது.  தலையில் அடித்துக் கொண்டே வீட்டிற்கு வந்தான் செந்தில் குமார்.  இன்றைக்கு சீக்கிறம் தூங்க வேண்டியது தான்.  தூரத்தில் எங்கோ நாய் ஓலமிட்டு அழுகிறது. “வழக்கமாய் இந்த நேரத்தில் இப்படிக் கத்திக் கொண்டிருக்காதே “  யோசித்தான்.

“எங்கப்பனுக்கு எத்தன தடவ சொல்றது. ஆஸ்பெஸ்டாஸ் சீட்டு எடுத்துட்டு சிமண்டு கூர போடுய்யான்னு…  இந்த சிமண்ட்டு சீட்டு  மத்யான  வெயிலு எல்லாம் சேத்து வச்சு இப்ப அப்படியே எம் மேல கொட்டுது. தூங்க முடியுதா”

சலித்துக் கொண்டே அப்படியே அயர்ந்து தூங்கிவிட்டான். வெளியில் இருட்டு கனமாய் போர்த்திக் கொண்டிருந்தது.

சற்றேறக்குறைய பன்னிரண்டு மணிக்கு திடீரென முழிப்புத் தட்டியது. வீட்டுக் கூரையின் மேல் யாரோ கூரிய நகம் கொண்டு  கீறுவது போல் சத்தம் நன்றாகவே கேட்டது.  பாழாய்ப் போன மின்வெட்டு இரவில் தானா அமலாக வேண்டும். சரியான புழுக்கம். பக்கத்தில் இருந்த டார்ச் லைட்டைத் தேடினான்.
கருமம் புடிச்சது, எத்தனை தடவ சார்ஜ் போட்டாலும் எங்க நிக்குது. எட்டு மணி நேரம் தாங்கும் சார்னான். நாலு மணி நேரம் எரிஞ்சதுக்கே  டல்லடிக்குது லைட்டு.

கலைந்த தூக்கமும், புழுக்கத்தின் எரிச்சலுடன் வெளியில் வந்து பார்த்தான். வீட்டின் கூரையில் ஏதோ கருப்பாய் இருப்பது போலத் தோன்றியது.  பூனையாக இருக்குமோ?  டார்ச் லைட் வெளிச்சம் போதவில்லை. சில் வண்டுகள் அவ்வளவு நேரத்தில் அமைதியாக இருந்ததும் ஆச்சரியமாக இருந்தது.

திடீரென அவன் மீது யாரோ கை வைத்தது போல தோன்றியதும்  திடுக்கிட்டுப் பார்த்தான்.  கரு கருவென நெடுதுயர்ந்து நின்றார்போல இருந்தது அந்த உருவம்.  அவன் வாயில் க்ளக் க்ளக் என்று  இரத்தம் வெளிவந்தது. சத்தமே இல்லாமல் இறந்து போனான்.

மறுநாள் காலையில் ஊரே கூடி நின்று உச்சுக் கொட்டியது. இரத்தக் காட்டேரி அடித்து செந்தில் குமரன் இறந்து போனதாக.  போலீசுக்கு சொல்லி விடப்பட்டிருந்தது. அந்தப் பெரியவர் மட்டும் வீட்டில் தனியாக  அமர்ந்திருந்தார். அவன் பயப்படுவானோ என்று அவனை அந்த நள்ளிரவில் பார்க்கப் போனது பெருந்தவறு என்பது மட்டும் அவருக்குப் புரிந்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top