Home » உடல் நலக் குறிப்புகள் » மருதோன்றி மருத்துவக் குணங்கள்!!!
மருதோன்றி மருத்துவக் குணங்கள்!!!

மருதோன்றி மருத்துவக் குணங்கள்!!!

மருத்துவக் குணங்கள்:

மருதோன்றி இலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆபிரிக்காவிலும், ஆசியாவிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது முடியை நிறம் மாற்றவும், அதன் பூவில் இருந்து நறுமணபொருள் தயாரிக்கவும் பயன்பட்டு வருகிறது.

எகிப்தின் மம்மியில் சுற்றப்பட்ட துணிகள் மருதோன்றி இலை சாரில்  நனைத்து  தயார் செய்யப்பட்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறைத்தூதர்  முகமது நபி அவர்களுக்கு மருதோன்றி பூவில் இ௫ந்து செய்யப் பட்ட வாசனை தைலம் மிகவும் பிடித்ததாகவும் ஒரு செய்தி உண்டு.

இந்தியாவிலும் இது ஒரு மூலிகை அழகு சாதன பொருளாக பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக உபயோகிக்கப்பட்ட வரலாறு உண்டு. இதைக்கொண்டு இயற்கை நிறங்கள் ஓவியத்திற்கு தயார் செய்யப்பட்டது. முடி, கரங்கள், கால்கள் அழகு படுத்தப்பட்டன.

இது ஒரு சிறந்த தோல் காப்பான். மருதோன்றி இலையைப் பற்றி அறியாத  இந்திய பெண்களே இருக்க முடியாது. பெண்களின் அழகு சாதனப் பொருட்களில்  மருதோன்றியும் ஒன்று.

இந்தியா முழுவதும் காணப்படும் பெருஞ்செடி மற்றும் சிறுசெடி வகையைச் சேர்ந்தது. இதன் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை.

இலை பித்தத்தை அதிகமாக்கும்; சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும்; வேர் நோயை நீக்கி உடலைப் பலப்படுத்தி உடல் சூட்டை அகற்றும்; விதை, சதை- நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் குணம் உடையது. தமிழகம் எங்கும் வளர்கின்றது.

நம் முன்னோர்கள் நகங்களின் மீது மருதோன்றி இலையை அரைத்து பற்று போட்டார்கள். அதனால்  நகக்கண்களில் ஏற்படும் நகச்சுற்று, புண், சொத்தை இவற்றைப் போக்கும் குணமுடையது. மேலும் நகங்களைப் பாதுகாக்கும் அரணாக  மருதோன்றி விளங்குகிறது.

பாலியல் நோய்களால் தாக்கப்பட்டவர்கள் கீழ்கண்ட முறையில் பயன்படுத்தலாம்.

மருதோன்றி இலை 6 கிராம், பூண்டுப்பல்,  மிளகு 5 இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் மேக நோய்களின் பாதிப்புகள் நீங்கும். இக்காலங்களில் உணவில் உப்பில்லாமல் சாப்பிட வேண்டும்.

மருதோன்றி இலையை நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி அதனை சுளுக்கு மற்றும் சிறு காயங்கள் ஏற்பட்ட இடத்தில் ஒற்றடமிட்டால் விரைவில் குணமாகும்.

மருதோன்றியின் வேர், பட்டையை அரைத்து பாலில் கலந்து காலையில் அருந்தி  வந்தால் அதிக ரத்தப்போக்கு குணமாகும். பித்தத்தைத் தணித்து உடல் நிலையை  சீராக்க உதவும்.

மருதோன்றி இட்டுக்கொண்டால் மனஅழுத்தம்  குறையும், வாதம், பித்தம் சம்பந்தப்பட்ட நோயைப் போக்கும் குணம் மருந்தோன்றிக்கு உண்டு.

கை கால்களில் எரிச்சல் உண்டாவதை தடுக்க மருதோன்றி இலையை நன்கு நீர்விட்டு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கை கால்களிலும், உள்ளங்கால்களிலும் தேய்த்து வந்தால் கை கால் எரிச்சல் உடனே நீங்கும். மருதோன்றி வேர்ப்பட்டையை அரைத்துக்கட்ட கால் ஆணி குணமாகும்.

கைப்பிடியளவு இலையை எடுத்து 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெய் போட்டு இலைகள் கருகும் வரை காய்ச்சி பின்னர் இறக்கி வடிகட்டி தலைக்குத் தேய்த்துவர முடி உதிர்வது நிற்கும்.

முடி விழுந்த இடத்தில் முடி முளைக்கும். இளநரை, பித்த நரை, பூனை முடி உள்ளவர்கள் தேய்த்து வர முடி கறுப்பு நிறமாக மாறும்.

மருதோன்றி இலையை எண்ணெயில் காய்ச்சிய பின்னர் பச்சை நிறமாக இருந்தால்தான் அது பதமாக இருப்பதாக பொருள். சிவப்பு நிறமாக இருந்தால் அது பதம் கெட்டு முறிந்துவிட்டது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

இது போல முறிந்த எண்ணெய் முடி உதிர்வதைத் தடுக்க உதவாது. தலை முழுகுவதற்குத்தான் அதைப் பயன்படுத்த வேண்டும். பதமான எண்ணெயை தொடர்ந்து வழுக்கைக்குத் தேய்த்து வர வழுக்கையில் முடி வளரும்.

கேசம் பளபளப்பாக இருக்கும். கேசத்தின் வேர்க்கால்கள் வலுவாகி முடி உதிர்வதைக் தடுக்கும். கேசம் நீண்டு வளரத் தூண்டும். ஈரத்தன்மையைத் தக்க வைக்கும். கண்களுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியைக் கொடுக்கும்.

மருதோன்றி பூவை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தைலமாகத் தடவ உடல் உஷ்ணம் குறையும். நல்ல உறக்கம் வரும். நீடித்த தலைவலிகள் அகலும். அழகுக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top