அந்த வீட்டின் படுக்கையறையுள் நுழைந்ததும் பெரிய புயல் வீசியபடி இருப்பதை உணர்ந்தேன். மெதுவாக ஆரம்பித்து பின் பலமாக வீசிய அந்தப் புயலால் சிறிது நேரத்தில் நிலத்தில் தூக்கி வீசப்பட்டேன். தரையில் இருந்து மெதுவாக என்னை சுதாகரித்தபடி அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து என்னை ஆசுவசப்படுத்திக் கொண்டேன். சில நிமிட நேரத்துக்கு பின் எழுந்து கண்ணாடி யன்னலை மெதுவாக மேலே உயர்த்த முயன்றேன். உயர்த்த முடியவில்லை.
மிகுந்த பலத்தோடு உயர்த்தியபோது மீண்டும் வெளியில் இருந்து வீசிய புயல் காற்று என்னை அடித்து வீழ்த்தியது. நான்; எழுந்து வெளியே கூடத்திற்கு வந்து புத்தக அலுமாரியில் இருந்து இரண்டு புத்தகங்களை எடுத்துக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேற நினைத்த போது அந்த புத்தக அலுமாரி நிலத்தில் விழுந்து புத்தகங்கள் தரையில் சிதறின. ஒன்றும் தேவையில்லை என வேகமாக வெளியே வந்து எனது சுவாசத்தை பலமாக உள்ளே இழுத்து விட்டு இது பேய்பிடித்த வீடு என நினைத்துக்கொண்டு திரும்பிப் பாராமல் அந்த வீட்டை விட்டு வெளியே வந்து நடந்தேன்.’
எனது நேர்சுக்கு இந்தக் கதையை டேவிட்; உரத்த குரலில் சொன்னபோது பரிசோதிக்கும் அறையில் இருந்த எனது காதுகளில் சிறுவயதில் விட்ட கடுதாசி ரொக்கட் போல் அக்கதை வந்தடைந்தது. எங்கேயோ இப்படியான வர்ணனையை படித்திருக்கிறேன் என நினைத்து எனது மூளையை கறி எலுமிச்சங்காயாக பிழிந்த போது மெதுவாக ஞாபகம் வந்தது.
(EMILY BRONTE)எமிலி புரன்ரி எழுதிய(WUTHERING HEIGHTS) வுதறிரிங் ஹயிற் என்ற ஆங்கில நாவலில் விவரிக்கப்பட்ட (LOCK WOOD) லொக்வூட் என்ற கதை சொல்லுபவர் தனது கெட்ட கனவை விவரித்தது போன்று இருந்தது. அங்கு ஆவி உள்ளே வர முயன்றது. டேவிட்டின் கதையில் ஏற்கனவே ஆவி வீட்டுக்குள் வந்து விட்டது.
நான் வெளியில் வந்து ‘டேவிட் அதன் பின் என்ன நடந்தது?’ எனக்கேட்டேன்.
‘சில காலம் வங்கரத்தாவில் பிரைவேற் பஸ் சாரதியாக வேலை கிடைத்த போது நான் இருப்பதற்காக அந்த வீட்டைத் தந்தார்கள். அந்த வீட்டில் ஒரு இளம் பெண் தற்கொலை செய்ததால் அந்த ஆவி இருக்கும் வீடு என நான் பின்பு ஊர் மக்களிடம் இருந்து அறிந்து கொண்டேன்.’
‘வேலைக்கு என்ன நடந்தது?’
‘சில நாட்களின் பின் அந்த வேலையை விட்டு நான் விலகி மீண்டும் மெல்பனுக்கு வந்து விட்டேன்.’
எனக்கு பல காலமாக பரிச்சயமான டேவிட் சொல்வதை நான் முற்றிலும் நம்பத் தயாரில்லை. ஒவ்வொரு முறையும் பணம் செலுத்த தவறும்போது ஏதாவது சுவையான கதை சொல்லும் வழக்கம் டேவிட்டிடம் இருக்கிறது. அவுஸ்திரேலியாவில்( BULLSHIT ARTIST) புல்சிட் ஆட்டிஸ்ட் என்பார்கள்
இன்னும் வைத்தியம் செய்த பணம் பாக்கியிருக்கிறது.
தனக்கு வேலை பல காலமாக இல்லை என்ற காரணத்தால் பணம் பாக்கி செலுத்தாது கடத்தப்பட்டு வருகிறது.
டேவிட்டிடம் இரண்டு நாய்கள் இருக்கின்றன. கிரேகவுண்இனத்தைச் சேர்ந்தவை. ஆனால் இதயத்தில் ஓட்டை இருப்பதால் ஓட்டப்பந்தயத்தில் இருந்து ஒதுக்கப்பட்டதை டேவிட் எடுத்து வளர்க்கிறான். அவுஸ்திரேலியாவில் பணக்காரர் குதிரைப்பந்தயத்தில் ஈடுபடும்போது பணவசதி குறைந்தவர்கள் ஈடுபடுவது இந்த கிரேகவுண் ஓட்டப்பந்தயம். டேவிட்டுக்கு கிரேகவுண் பந்தயத்தில் பற்று இருந்தது.
டேவிட்டின் அடுத்த நாய் அவுஸ்திரேலியவுக்கு உரிய கெல்பி நாய். அந்த நாய் சில வருடங்களுக்கு முன் அறுபதடி உயரமான பாலத்தில் இருந்து குதித்தது. ஆனால் சில காயங்களோடு தப்பி பிழைத்தது .பல நாட்களாக நான் வைத்தியம் செய்த பணத்தை தரவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது வேலை இல்லாமல் இருப்பதாகவும் கிடைத்தவுடன் தருவதாகவும் சொன்னார்
இப்படி சில வருடங்கள் ஓடிவிட்டன.
ஒரு நாள் மீண்டும் அந்த கெல்பி நாயுடன் வந்தபோது நாயின் வயிறு பெரிதாக வீங்கி இருந்தது.
‘என்னால் முதலுதவி வைத்தியம் மட்டும் செய்யமுடியும். .இரத்த பரிசோதனைக்கு பணத்தை கட்டினால் மட்டுமே மேற்கொண்டு வைத்தியம் செய்யமுடியும்’ என்றேன்.
டேவிட்டின முகம் மாறிவிட்டது.
‘என்ன இப்படி சொல்லி விட்டீர்கள்?’
‘எனது சேவைக்கு நீங்கள பணம் தராமல் விட்டால் பரவாயில்லை. ஆனால் இரத்த பரிசோதனைக்கூடத்தை நான் நடத்தவில்லை. அவர்களுக்கு பணம் கட்டவேண்டும். இல்லாவிட்டால் நான் ஏதும் செய்யமுடியாது’
நாயை என்னிடம் விட்டு விட்டு, ‘பணத்துடன் வருகிறேன்;’ என்று சென்றுவிட்டார்
எனக்கு ஒருவிதத்தில் பாவமாக இருந்தது
சில மணி நேரத்தில் பணத்துடன் வந்து பக்கத்து வீட்டில் கடன் வேண்டியதாக சொன்னார். .இரத்தத்தை சோதித்து பார்த்தபோது வயிற்றில் கட்டி இருப்பதும் அதில் இரத்தம் தொடர்ந்து வயிற்றுக்குள் வடிந்திருப்பதும் தெரியவந்தது.
‘மாற்று இரத்தம் ஏற்றி வைத்தியம் செய்யவெண்டியுள்ளது. ஆனால் பதின்மூன்று வயதில் இதை செய்தாலும் பலகாலம் உயிர்வாழப்போவதில்லை என்பது எனது அபிப்பிராயம்.’என்றேன்
வீட்டுக்குச் சென்ற சில நாட்களில் அந்த கெல்பி இறந்து விட்டது.
அதனது சடலத்தை அடக்கம் செய்ய மீண்டும் கொணடு; வந்த போது நான் அதன் ஒழுங்குகளை செய்தேன்.
இம்முறை அந்த அடக்கத்துக்கான பணத்தை தர வந்த போதுதான் இந்த பேய்கதையை டேவிட் எனது நர்சுக்கு கூறினார்.
பொய் சொல்வது உறுதியாக தெரிந்தாலும் பொய்யை அவதானமாக கேட்பது இந்த வைத்திய துறைக்கு தேவையாக இருக்கிறது.
‘டேவிட இப்பொழுது நிரந்தரமான வேலை உள்ளதா?’ எனக்கேட்டேன்.
சிறு பிள்ளைகளின் ஸ்கூல் பஸ் சாரதியாக வேலைக்கு சேர்ந்திருக்கிறேன். நான் வேகமாக ஓட்டுவதால் குழந்தைகளுக்கு என்னைப் பிடிக்கும.; இடையில் வாடகை பஸ் சாரதியாக சேர்ந்து இருந்த போது பல கனமான பெட்டிகளையெல்லாம் சுமக்க வேண்டும். அதனால் அதை விட்டு விட்டேன். இடையில் கொஞ்ச நாட்கள் வேலை இல்லாமல் இருந்ததால் உடல் பெருத்து விட்டது என சிரித்தபடி தனது வயிற்றை தடவினார்.