நிலவு வானத்தில் அமைதியாக எரிந்து கொண்டு இருந்தது, யாரோ சோளபொறியை அள்ளி இறைத்ததைபோல் வானத்தில் நட்ச்சத்திரங்கள் சிதறி கிடந்தன, தூரத்தில் இருக்கும் பனை மரங்களும், தென்னைமரங்களும் பேய் நிழல்போல் காட்சியளித்தன, எனது காட்டின் அடப்போரத்தில் யாரோ நிழல்போல் அடிக்கடி நடமாடுவதைபோல் எனக்குள் ஒரு மாயை உணர்வு தோன்றி தோன்றி மறந்துகொண்டு இருந்தது, போன வருடம் எங்கள் காட்டிற்கும் பக்கத்து காட்டுக்காரர் வேப்பமரத்தில் தூக்கு போட்டுகொண்டு காட்டிலேயே இறந்துவிட்டதாகவும் அவர் ஆவி இரவு நேரங்களில் காட்டில் அலைந்துகொண்டு இருப்பதாகவும் அப்பா என்றைக்கோ சொன்ன அந்த வார்த்தைகள் என் எண்ணத்தில் அப்பொழுது தோன்றியது.
ஆனால் நான் பயப்படவில்லை, இளம் கன்று பயமறியாது என்பதைப்போல நான் கடல்கொடியை வேகமாய் பிடுங்கத்தொடங்கினேன், பனிபொழியும் இரவு குளிர்ந்து கொண்டு இருந்தது.
நான் வேகமாய் கடலைகொடியை பிடுங்கிக்கொண்டிருந்தேன், என் மணியும் என் பின்னாலேயே வந்து கொண்டு இருந்தான், எனது என்னம் எல்லாம் நாளை எப்படியாவது நண்பர்களோடு கிரிகெட் விளையாட போயாகவேண்டும் என்பதிலேயே இருந்தது, பொதுவாக ஒரு கைக்கு ஒரு செடிதான் பிடுங்குவார்கள் ஆனால் நான் ஒரு கைக்கு மூன்று செடிகளை பிடுங்கினேன், இந்த கையில் மூன்று செடி அந்த கையில் மூன்று செடி ஒரு இழுப்பிற்க்கு மொத்தம் ஆறு செடிகளை வேகமாய் பிடுங்கினேன், செடியில் இருந்து கடலை கொத்து சலங்கள் சரத்தை போல் கலகலவென்று வெளியே வந்தது.
அந்த சமயம் கடலை செடிக்குல்லிருந்த ஒரு முயல் வேகமாய் என்கால் இடுக்கில் புகுந்து மேற்கு திசையை நோக்கி ஓடியது என் மணி அதை துரத்திக்கொண்டு ஓடினான், நீண்ட தூரம் என்னைவிட்டுவிட்டு ஓட மணிக்கு விருப்பமில்லை போல…அதனால் அந்த முயலை விட்டுவிட்டு திரும்ப என்னிடமே வந்துவிட்டான், அவன் நினைத்திருந்தால் அந்த முயலை பிடித்திருக்கு முடியும் என்னவோ தெரியவில்லை பாவமென்று விட்டுவிட்டான் மணி.
சுற்றிலும் ஆளுக்குமேல் வளர்ந்த அடர்ந்த சோலைக்காடு நிலவின் ஒளியில் தன் பச்சை நிறத்தை மாற்றி நிலவின் ஒளி சில நேரம் பொன் நிறத்திலும், வெள்ளை வெள்ளி நிறத்திலும், சிலநேரங்களில் கரும்பொன் நிறத்திலும், சில நேரங்களில் வேறு நிறத்தில் தெரிந்தன, நான் எதையும் கவனிக்காமல் வேகமாய் கடலைச்செடியை பிடுங்கி கொண்டிருந்தேன், அந்த குளிர்ந்த பனி இரவிலும் எனக்கு வியர்த்தது, கடலைகொடி பிடுங்கும் வேகத்தில் வேருக்கடியில் இருக்கும் செம்புறை ஈரமண் என் கால்களில் அணிகலனாய் ஒட்டிக்கொண்டு இருந்தன,
நமது காட்டின் வரப்பில் ஒரு வேலமரம் உண்டு அதில் கூடு கட்டி குடியிருக்கும் ஆந்தை யாரோ இரவில் காட்டில் புகுந்துவிட்டார்கள் என்று அச்சத்தில் அடிக்கடி கத்தி அலறியது, நான் வேக வேகமாக கடலைக்கொடியை பிடுங்கிக்கொண்டு இருந்தேன், கரு நாகம், சாரைப்பாம்பு, சுருட்டை பாம்பு, மண்ணுளி பாம்பு, நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், நீர் விரியன், கொம்பேறி மூக்கன், பச்சை பாம்பு, இவைகள் எல்லாம் எங்கள் ஊர் பக்கம் அதிகம் வசித்து வருகின்றன, கடலைகொடி பிடிங்கிகொண்டு இருக்கும்பொழுது காற்றில் உதிர்ந்து கிடந்த ஒரு சோள சருகை பார்த்து பாம்பென்று பயந்துவிட்டேன், உற்று நோக்கியபிறகே அது சோள சருகென்று உணர்ந்தேன், இப்பொழுதுதான் பாம்பை பற்றிய பயம் எனக்குள் முளைத்தது, ஆனாலும் நான் தொடர்ந்து கடலைகொடியை வேகமாக பிடிங்கிகொண்டு முன்னேறிச் சென்றேன்.
நேரம் செல்ல செல்ல எனது வேலையும் வேகமாக நடந்துகொண்டு இருந்தது, (நடுசாமம்) தூரத்தில் இருந்த நிலவு இப்பொழுது என் தலைக்கு மேல் உச்சியில் இருந்ததுகொண்டு வெள்ளி மழையை பொழிந்துகொண்டு இருந்தது, மினுக் மினுக் என்று சிகப்பு விளக்கை ஒளிரவிட்டுகொண்டு இரவின் அமைதியை கிழித்துகொண்டு வானத்தின் உயரத்தில் ஒரு வானூர்தி சென்று தொலைவில் மறைந்தது, அப்பொழுது கொஞ்ச தூரத்தில் சல சளவென்று சலங்கை சத்தம் கேட்டது, எனக்கு பயம் இல்லை, அது சலங்கை முனி அல்ல! சலங்கை கட்டிய யாருடைய மாடோ வீட்டிற்கு போகாமல் திருட்டுத்தனமாய் யாருடைய காட்டிலோ பயிரை மேய்ந்து கொண்டு இருந்ததுதான் அந்த சலங்கை சத்தத்தின் காரணம் என்பதை நான் உணர்ந்துகொண்டேன்,
நான் என் வேலையை விடாமல் வேகமாய் செய்து கொண்டிருந்தேன், அப்பொழுது ஒரு இருநூறு மீட்டர் தூரத்திற்கும் அப்பால் இருந்த நரிகள் கூட்டத்தின் ஊளையிடும் சத்தம் கேட்டது, அப்பொழுது என் மணியும் சத்தம் போட்டு குறைக்க தொடங்கினான், அதை கேட்டு நம்ம வேல மரத்தில் இருந்த ஆந்தையும் கத்தி அலறியது.
இரவு பயங்கரமாய் கிழிக்கப்பட்டு என் காதுக்குள் அந்த சத்தம் நுழைந்தது, டேய் ஏண்டா கத்துற சும்மா இரு என்று நான் மணியை அதட்டினேன் மணி அடங்கினான், தூரத்தில் கேட்ட நரிகளின் ஊளை சத்தம் கொஞ்ச நேரம் நின்று மீண்டும் அதிகரித்தது, பாவம் எங்கள் வேலமரத்தில் இருந்த ஆந்தை அன்று உறங்கவே இல்லை, நான் எதையும் கண்டுகொள்ளாமல் என் வேலையை மட்டும் செய்து கொண்டு இருந்தேன், ரத்த காட்டேரி, ஜடா முனி, நொண்டி கருப்பு, கொள்ளிவாய் பிசாசு, மோகினி பிசாசு, இதைப்பற்றி எல்லாம் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
இரவுக்கு ஆயிரம் கண்கள் முளைத்து என்னையே உற்று உற்று பார்ப்பதாக எனக்குள் ஒரு உணர்வு ஓடிக்கொண்டே இருந்தது, ஆனாலும் எனது வேளையில் நான் முனைந்து செயல்பட்டுக்கொண்டே இருந்தேன், இயந்திர வேகத்தில் எனது வேலை நடந்துகொண்டு இருந்தது.
தொடரும்…