சூரியன் பூஜித்த சிவன், தஞ்சாவூர் மாவட்டம் பரிதியப்பர் கோவிலில், பாஸ்கரேஸ்வரர் என்ற பெயரில் வீற்றிருக்கிறார். பொங்கல் நன்னாளில் இவரை வழிபட்டால் ஆரோக்கியமும், வளமான வாழ்வும் கிடைக்கும்.
தல வரலாறு: சிவனின் அனுமதியில்லாமல், தட்சன் நடத்திய யாகத்தில் சூரியன் கலந்து கொண்டார், இதனால் அவருக்கு தோஷம் உண்டானது. தோஷத்திலிருந்து விடுபட சிவனிடம் வேண்ட, தன்னை பூஜிக்கும்படி அருள்புரிந்தார். சூரியனும் லிங்கம் அமைத்து வழிபட தோஷம் விலகியது. சூரியனின் பெயரால் சிவனுக்கு, பரிதியப்பர், பரிதீசர், பாஸ்கரேஸ்வரர் என்ற பெயர்கள் உண்டானது.
இன்னொரு வரலாறும் உண்டு. சூரிய குலத்தில் பிறந்த சிபி சக்கரவர்த்தி, சிவத்தல யாத்திரை புறப்பட்டார். இவர் புறாவிற்காக சதையை அறுத்துக் கொடுத்தவர். பரிதியப்பர் கோவில் வந்த இவர், களைப்பின் மிகுதியால் ஓய்வு எடுத்தார். அவரது சேவகன் குதிரைக்காக, அரிவளால் வெட்டி புல் சேகரித்து கொண்டிருந்தான். ஓரிடத்தில் அரிவாள் படும் போது, ஏதோ சத்தம் வரவே, மன்னரிடம் தெரிவித்தான். அந்த இடத்தைத் தோண்டிய போது, ஒரு சிவலிங்கம் இருந்தது. அவருக்கு பாஸ்கரேஸ்வரர் என்று பெயரிட்டனர்.
வணங்கும் சூரியன்: இங்குள்ள லிங்கத்தின் மீது சூரியக் கதிர்கள் ஒவ்வொரு பங்குனி 18,19,20 தேதிகளில் மட்டும விழுகிறது. இந்நாட்களில், சூரியனே நேரடியாக சிவபூஜை செய்வதாக ஐதீகம். சிவன் எதிரில், சிவதரிசனம் செய்யும் நிலையில் உள்ள சூரியன் சிலை உள்ளது.
இத்தகைய அமைப்பை காண்பது அரிது. ஒரே சந்நிதியில் மூன்று சண்டிகேஸ்வரர்கள் உள்ளது மிகவும் சிறப்பு. கோஷ்டத்தில் (கருவறை சுற்றுச்சுவர்) விஷ்ணு, ஆஞ்சநேயர் வீற்றிருக்கின்றனர். சம்பந்தர், அப்பர், சுந்தரரால் பாடப்பட்ட தலம் இது. கோயில் அமைப்பு: பழமையான இக்கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரமும், மூன்று நிலையுள்ள இரண்டாம் கோபுரமும் உள்ளன.
முதல் கோபுரத்தில் நுழைந்ததும் கொடிமரம், விநாயகர், நந்தி, பலிபீடம், வசந்த மண்டபம் உள்ளன. மங்களாம்பிகை சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்தால் விநாயகர், முருகன், கஜலட்சுமி, சந்நிதிகளைத் தரிசிக்கலாம். நடராஜசபை, முருகன், பைரவர், சூரியன், சந்திரன், நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. சூரிய, சந்திர புஷ்கரணி தீர்த்தங்களும் இங்குண்டு. அரசமரம் தலவிருட்சம்.
தோஷ நிவர்த்தி தலம்: இத்தலம், பிதுர் தோஷ (முன்னோர் சாப நிவர்த்தி) பரிகார தலமாக
விளங்குகிறது. பிதுர் தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபடுகின்றனர். சூரியனுக்குரிய கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்கள், சிம்மராசி, சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள், சூரிய திசை நடப்பவர்கள், சித்திரை, ஆவணி, ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் ஞாயிறன்று பாஸ்கரேஸ்வரரையும், சூரியனையும் வழிபட்டால் நல்வாழ்வு உண்டாகும்.
மார்க்கண்டேயன் இங்கு அருவ வடிவில் சிவனை வழிபடுவதாக ஐதீகம். சஷ்டியப்தபூர்த்தியை (அறுபதாம் கல்யாணம்) இங்கு நடத்தினால் ஆயுள் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
திருவிழா: தை ரத சப்தமி, பங்குனி சூரிய பூஜை.
இருப்பிடம் : தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை வழியில் 15 கி.மீ., தூரத்தில் உளூர். இங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ., திறக்கும் நேரம்: காலை: 6.30- பகல் 12.30, மாலை: 4.00- இரவு 8.30.