நம் முன்னோர்கள் உட்கொண்ட சத்தான உணவு பழக்க வழக்கங்கள் மாறி தற்போது அவசர காலத்திற்கேற்ப அதிகளவில் துரித உணவை நாடி சென்ற மக்கள், தற்போது மீண்டும் பின்நோக்கி பார்க்க துவங்கியுள்ளனர்.
இதன் விளைவு, பண்டை காலம் தொட்டு நம் முன்னோர்கள் உணவாக உட்கொண்ட வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, சோளம், ராகி, வரகு ஆகிய பாரம்பரிய தானியங்கள் மீது இன்று மக்களின் கவனம் சிறிது சிறிதாக திரும்ப துவங்கியுள்ளது.
நெற்பயிர் வந்த போதும் கூட சிவப்பு அரிசி தான் முதலில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் இதை பட்டை தீட்டி தற்பாது பயன்படுத்தும் அரிசி புழக்கத்தில் வந்தது.
சாமை, தினை, குதிரைவாலி, வரகு ஆகிய தானியங்கள் பண்டைக்காலம் தொட்டே எந்தவித மாற்றம் இன்றி பழைய முறையில் இன்றளவும் பயிரிடப்பட்டு வருகிறது.
ஆனால், சோளம், கம்பு ஆகியவை ஆராய்ச்சிக்கு பிறகு பல ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன.
தற்போது நாம் உட்கொள்ளும் உணவு வகைகளில், சத்தானது என எதை குறிப்பிடுவது என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.
வழக்கமான அரிசியை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் தான் அன்றாட வாழ்க்கையில் அதிகளவில் உட்கொள்கிறோம். இதை விட சத்து மிகுந்த சிறு தானியங்களை கண்டுகொள்வதில்லை.
இந்நிலை தற்போது சிறிதுசிறிதாக மாறிவருகிறது. இதன் விளைவு, இயற்கை முறையில் செயற்கை உரங்கள், பூச்சி மருந்துகள் பயன்படுத்தப்படாத சிறு தானியங்கள் பழமைமுறை மாறாமல் விளைவிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன.
இவற்றை மக்கள் வாங்குவது அதிகரித்துள்ளது.
ஆறு மாத குழந்தைகள் முதல் சிறு தானியங்களில் தயாரிக்கப்படும் சத்து மாவுகள் தான் ஊட்டச்சத்துக்கு உதவுகின்றன. நகர்புறங்களில் ரோட்டோரங்களில், ஆங்காங்கே கம்பங் கூழ் விற்கப்படுகிறது.
இதை வாங்கி குடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது.. குதிரைவாலி அரிசியில், காலை உணவாக பொங்கல் வைக்கலாம். வழக்கமாக பச்சை அரிசியில் பொங்கலை விட குதிரைவாலி பொங்கலின் ருசி தனி இதில், இரும்புச்சத்தும் அதிகளவில் உள்ளது.
கம்பு, ராகி உணவுகளில் கால்சியம், சோளத்தில் புரோட்டின் என ஒவ்வொரு தானியமும் குறிப்பிட்ட சத்துக்களை கொண்டதாக உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதாகவும் இருப்பதால் தானிய உணவுகள் மீது மக்களுக்கு பிரியம் ஏற்படதுவங்கியுள்ளது.
உடல் நோய்வாய்படுவதற்கு காரணம் உணவு பழக்கவழங்கங்களே. இதை முறைப்படுத்தினால் உடல் தொந்தரவை குறைப்பதுடன், மருத்துவ செலவும் குறையும்.
“உணவே மருந்து என்ற நிலை மாறி தற்போது மருந்தே உணவு’ என்று உள்ள நிலையில் மக்களின் மாறுதல் வரவேற்கத்தக்கதாக உள்ளது. கம்பு, ராகி தானியங்களில் கால்சியம் சத்து அதிகளவிலும், சோளத்தில் புரோட்டின் அதிகளவிலும், சாமை, குதிரைவாலி ஆகிய தானியங்களிலும் இரும்பு சத்து அதிகளவு உள்ளது.
தற்போது, இந்த தானியங்கள் இயற்கை உரங்கள் மற்றும் பூச்சி கொல்லி மருந்து பயன்படுத்தப்படாமல் விளைவிக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது.
உடல்நலம்: சிறு தானியங்களை முளை கட்டவைத்து உட்கொள்ளுவதன் மூலம் அதிக சத்துக்கள் பெறலாம். முளை கட்டுதல் என்பது பழைய தொழில்நுட்பம்.
முளைகட்டிய பயிர்களில் கால்சியம், சோடியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் வழக்கத்தைவிட 30 சதவீதம் அதிகம் கிடைக்கிறது.
சிறுதானியத்தில் உயிர் சத்துக்களும், தாதுக்களும் உள்ளன.
ஜீரண சக்தியை அதிகரிக்கும்
உடல் வெப்பநிலை சமநிலையில் வைத்திருக்கும்
கொழுப்புக்களை கரைத்து உடல்பருமனை குறைக்கும்
உடல் வலிமை அதிகரிக்கும்
மலச்சிக்கலை போக்கும், வயிறு சம்மந்தமான நோய்களை போக்கும்
சாமை – நீரிழிவுநோய் உள்ளவர்கள் சாப்பிடலாம்.
புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் சோளத்தில் உள்ளது.
வரகு, (ராகி) இரும்பு புரதம், சுண்ணாம்புச் சத்து உள்ளது
முளைகட்டிய பயிர்களை உட்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து, உடல் ஆரோக்கியத்தை பேணலாம். என்னதான் இருந்தாலும் தானிய உணவுகளில் உள்ள ருசி, அரிசி உணவுகளில் கிடைப்பதில்லை. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு சத்து நிறைந்த உணவாகவும் குதிரைவாலி, ராகி, கம்பு, சோளம் ஆகியவை இருந்தது. இப்போதுள்ள சந்ததியினருக்கு தானிய உணவுகள் பிடிப்பதில்லை. ..
நம் முன்னோர்கள் உண்ட உணவு தானியங்களை தற்போதுள்ள தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டும்.
மக்கள் சிறுதானியங்கள் மீது தங்கள் கவனத்தை செலுத்தவேண்டும் விவசாயத்தில் ஊடுபயிராகவும், வரப்பு பயிராகவும் சாகுபடி செய்து
எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழலாம்.