பூனைக்கு ஒரே சந்தோஷம். குரங்கு அதற்கு நண்பனாகக் கிடைத்ததால், அது தனக்குத் தெரிந்த எல்லாரிடமும் போய் பெருமையடித்துக் கொண்டது.
குரங்கு மரத்தில் குதிப்பது, குட்டிக் கரணம் போடுவது, இரண்டு கால்களால் நிற்பது, நடப்பது இவற்றையெல்லாம் அழகாகக் கூறி ஆனந்தம் அடைந்தது பூனை.
“”ஒரு நாள் என் வீட்டிற்கு நீங்கள் வர வேண்டும்,” என்று ஆசையாகக் குரங்கைக் கூப்பிட்டது பூனை .
“”உன் வீட்டிற்கு வந்தால் உன் எஜமானி என்னை அடித்து விரட்டுவாள்,” என்று குரங்கு பயத்துடன் கூறியது.
“”என் எஜமானி ரொம்ப நல்லவள். அவள் மடியில் தான் நான் எப்போதும் படுத்திருப்பேன். என்னைப் பார்க்கா விட்டால், என் எஜமானிக்குத் தூக்கமே வராது,” என்றது பூனை.
“”நீ அதிர்ஷ்டசாலிதான். என்னைக் கண்டால் எல்லாரும் கல்லை எடுத்து அடிப்பர், “சீ’ என்று விரட்டுவர், பல்லைக் காட்டி பழித்துக்காட்டுவர். எனக்கு அவமானமாக இருக்கிறது,” என்று குரங்கு வருத்தப்பட்டுக் கொண்டது.
“”மரத்தில் வசிப்பதால் தானே உன்னைக் கேவலமாகப் பேசுகின்றனர். என்னோடு என் வீட்டிற்கே வந்துவிடு,” என்று கையைப் பிடித்துக் கூப்பிட்டது பூனை.
“”நான் நாளைக்கு வருகிறேன்,” என்று குரங்கு கூறிவிட்டு கிடுகிடு என்று மரத்தில் ஏறிக்கொண்டு கை அசைத்தது. பூனையும், சந்தோஷமாக வாலை ஆட்டிவிட்டு, வீட்டை நோக்கி நடந்தது.
வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக தன் எஜமானியிடம் போனது பூனை. “மியாவ்’ என்று செல்லமாகக் கொஞ்சிக் கொண்டு எஜமானியின் காலடியில் உட்கார்ந்தது. எஜமானியும் பூனையின் முதுகில் அன்பாகத் தடவிக் கொடுத்தாள்.
பூனையும் இதுதான் சமயமென்று தன் நண்பனான குரங்கைப் பற்றி பேச்சை எடுத்தது. குரங்கைப் பற்றி புகழ்ந்து பேசியது.
“”குரங்கு என்றால் குறும்புத்தனம் அதிகமாக இருக்குமே. அது திருடும், சண்டைப் போடும், பொய் பேசும், ஏமாற்றும். அதனுடன் உனக்கு நட்பு வேண்டாம் போ,” என்று எஜமானி பூனையை விரட்டினாள்.
“”அந்தக் குரங்கு ஒன்றும் அப்படிப் பட்டதல்ல, பொய்யே அதற்குப் பேசத் தெரியாது. சண்டையும் போட வராது. அதைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்,” என்று பூனையும் சமர்த்தாகப் பேசியது.
எஜமானியும் யோசித்தாள்.
பிறகு பூனையிடம் சரி என்று சம்மதத்தைத் தெரிவித்து விட்டாள். பூனைக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. உடனே, நண்பனைக் கூப்பிட ஓட்டமாக ஓடியது.
குரங்குக்கு அந்த வீட்டில் நல்ல வரவேற்பு இருந்தது. அந்த வீட்டில் எட்டுக் குடும்பங்கள் இருந்தன. எல்லாரும் ஆசையுடன் குரங்கை பார்த்தனர்; ஆவலுடன் பேசினர். குரங்கும், அவர்களுக்கு சலாம் போட்டு வணக்கம் செய்தது.
பூனையும் குரங்கும் இணைபிரியாத நண்பர்களாக அந்த வீட்டில் சுற்றிச் சுற்றி வந்தன. எல்லாருடைய வீட்டுக்கும் போய் போய் வந்தன. குழந்தைகளுடன் ஒன்றாக விளையாடின. பெரியவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து கொண்டன. பலகாரங்கள் வாங்கித் தின்றன.
குரங்குக்கு மனதிலே ஒரு வருத்தம் இருந்தது. மற்றவர்கள் தருகின்ற ருசியான பண்டங்கள் இன்னும் அதிகமாகக் கிடைக்கவில்லையே… என்பது தான் அந்த வருத்தம். போதும் என்ற மனம் குரங்குக்கு இல்லை. அதிக ஆசை வந்துவிட்டது. அதிக ஆசை அதிக நஷ்டம் என்பார்கள். அது மட்டுமல்ல. அதிகக் கஷ்டமும்தான்.
ஒரு வீட்டில் ஒரு குழந்தைக்கு பிறந்த நாள் விழா. அந்த வீட்டில் அதிகமாக லட்டு செய்தனர். ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்தனர். குரங்குக்கும் ஒன்றுதான். லட்டு தின்ற குரங்குக்கு, இன்னும் சாப்பிட வேண்டும் போல் இருந்தது. ஆனால், யார் கொடுப்பார்! வீட்டுக்காரரிடம் கேட்க வெட்கம். பூனையிடம் கேட்கப் பயம், குரங்குக்கு ஒரே கவலை.
வீட்டுக்காரர்கள் எல்லாரும் வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தபோது, குரங்கு நைசாக உள்ளே புகுந்தது. இரண்டு லட்டை எடுத்துக்கொண்டு, பின்புற வழியாகப் போய் ஒரு மரத்தில் ஏறி மறைந்து கொண்டு ஆசை தீர தின்றது.
இப்படியாக குரங்கு ஒவ்வொரு வீட்டிலும் புகுந்து, ஆசையாய் தின்பண்டங்களைத் திருடிக் கொண்டு, மரத்தில் ஏறித் தின்பது வழக்கமாகப் போய்விட்டது.
ஒவ்வொரு வீட்டிலும் தின்பண்டங்கள் திருட்டுப்போவது அதிகமாகப் போயிற்று. முதலில் குழந்தைகள் மீது சந்தேகப்பட்டனர். அவர்கள் இல்லையென்றதும், பூனை மீதும் சந்தேகப்பட ஆரம்பித்தனர். பூனையோ, “”நான் எடுப்பதே இல்லை,” என்று சத்தியம் செய்தது.
குரங்கோ, “”எனக்குத் திருட்டுப் பழக்கமே கிடையாது,” என்று தலையிலடித்து சத்தியம் செய்தது.
தனியே விசாரித்தபோது, பூனைதான் திருடியது என்று குரங்கு கூறியது. பூனையோ, “”எனக்கு தெரியவே தெரியாது!” என்று கூறியது.
ஆனால், வீட்டுக்காரர்களுக்கு இந்த இருவர் மேலும் சந்தேகம் இருந்ததால், வருகிற ஞாயிற்றுக்கிழமை உங்களை விசாரிக்கப் போகிறோம் என்று கூறி விட்டனர்.
காலை 6 மணிக்கு விசாரணை. பூனை குரங்கை சமாதானம் செய்தது. நாம் எப்படியும் மாட்டிக் கொள்ளப்போகிறோம் என்று குரங்கு தனக்குள்ளே பேசிக்கொண்டு திட்டம் போட்டது. ஞாயிற்றுக்கிழமை காலையில் விசாரணை அல்லவா?
ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை நான்கு மணிக்கு பூனையை எழுப்பியது குரங்கு. விசாரணைக்கு முன் நாம் கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டு விட்டு வருவோம். என்று பூனையை குரங்கு அழைத்தது. அது மார்கழி மாதம், பனியும் குளிர் காற்றும் அதிகம் இருந்தது.
ஒரு மைல் தூரம் நடந்து பூனையும் குரங்கும் கோவிலுக்கு போய்விட்டு வந்தன. பூனைக்கோ அதிகக் குளிர். நடுங்கிக்கொண்டு நின்றது. குரங்குக்கு அந்தக் குளிர் ஒன்றும் செய்யவில்லை. அதற்குத்தான் பழக்கம் ஆயிற்றே! இரண்டும் சரியாக விசாரணைக்கு நின்றன.
“”நீதானே திருடினாய்?” என்று குரங்கைக் கேட்டனர்.
“”நான் இல்லவே இல்லை,” என்று குரங்கு பொய் சொல்லிவிட்டு தைரியமாக நின்றது.
“”நீ தானே திருடினாய்?” என்று பூனையைக் கேட்டனர். ஏற்கனவே குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த பூனை, பயத்தில் மேலும் நடுங்கிக் கொண்டு இருந்தது.
பூனை நடுங்கியதைப் பார்த்துவிட்டு, பூனைதான் திருடியது என்று முடிவு செய்து, நான்கு அடி கொடுத்து, வீட்டை விட்டே விரட்டி விட்டனர்.
குரங்கை, “நல்ல குரங்கு’ என்று பாராட்டி வீட்டிலேயே வைத்துக் கொண்டனர்.
குரங்கை வாழ்த்திவிட்டு, பூனை போய் விட்டது. குரங்கோ தன் திட்டம் பலித்த தென்று கும்மாளம் போட்டது. இனி எல்லா தின்பண்டமுமே தனக்குத் தான் கிடைக்கும் என்று நினைத்து சந்தோஷம் அடைந்தது.
முதல் முதலில் திருடிய அந்த வீட்டைக் குரங்கு எட்டிப் பார்த்தது. அந்த வீட்டில் யாரும் இல்லை. மெதுவாகக் கதவைத் தள்ளிவிட்டு, குரங்கு உள்ளே போனது. எள்ளுருண்டை வாசம் ஜம்மென்று வந்தது. அதிக உயரத்தில் இருந்ததால் அந்த ஜாடி எட்டவில்லை. கீழே உட்கார்ந்தபடி பார்த்துக் கொண்டே குரங்கு யோசனை செய்தது.
அந்த நேரத்தில் ஒரு எலியானது அந்த ஜாடி பக்கம் ஓடிவரவே, கண்ணாடி ஜாடியின் மீது மோதி கீழே தள்ளிவிட்டது. அந்த ஜாடி குரங்கின் தலைமீது மடாரென்று விழுந்தது. தலையில் ரத்தக் காயத்தையும் உண்டாக்கி விட்டது. ரத்தம் கொட்டோ கொட்டு என்று கொட்டியது.
சத்தம் கேட்ட வீட்டுக்கார அம்மாள் உள்ளே இருந்து ஓடிவந்தாள். குரங்கு ரத்தம் சொட்டச் சொட்ட தரையில் கிடந்தது. இத்தனை நாளும் நீ தான் திருடி இருக்கிறாய், திருட்டுக்குரங்கே! என்று ஒரு அடி கொடுத்தாள்.
அந்த வீட்டுக்குழந்தைகளும் வந்து குச்சி எடுத்துக்கொண்டு அடிக்கவே, தப்பித்தேன், பிழைத்தேன் என்று குரங்கு ஓட்டம் பிடித்தது.
“திருடியபோது தண்டனை கிடைக்க வில்லை. திருடாத போது தண்டனை கிடைத்தது எப்படி?’ என்று குரங்குக்குப் புரியவே இல்லை. யோசித்துக் கொண்டே இருந்நதது.
திருட்டுக்குத் தண்டனை எப்போதும் உண்டு என்பதுதானே கடவுளின் கட்டளை!