ஆபீசுக்கு பின்புறம், பீச் வியூ பார்க்கில், தாஸும் சந்தோஷூம் புகை பிடித்துக் கொண்டிருந்தனர்…
சந்தோஷ் ஆழ்ந்த சிந்தனையில் கடற்கரையை பார்த்தபடி புகை இழுத்துக் கொண்டிருந்தான்… சிகரெட்டை பிடித்திருந்த அவனது கைகள், அவனுக்கும் தெரியாமல் நடுங்கிக் கொண்டிருந்ததை எதிரிலிருந்த தாஸ் கவனித்தான்…
‘சந்தோஷ்..? ஏதாவது பிரச்சினையா..?’ என்று கேட்டதும், கவனம் கலைந்த சந்தோஷ் தாஸிடம் திரும்பினான்…
‘ஏன் பாஸ்… அப்படி கேக்குறீங்க..?’
‘உன் கை சிகரெட் பிடிக்கும்போது நடுங்குது!?! ஒருவேளை ஏதாவது பதற்றத்துல இருக்கியோன்னு தோணுது… அதான் கேட்டேன். அதுமட்டுமில்லாம, நீ என் ரூமுக்குள்ள கொஞ்சம் லேட்டா எண்ட்ரி ஆனதும், ஏதோ ப்ரிப்பேரஷனுக்கு டைம் எடுத்துக்கிட்ட மாதிரி இருந்தது… சம்திங் இஸ் ராங்…’ என்று கச்சிதமாக கணித்து கூறினான்.
‘பாஸ்… பிரச்சினையில இருந்தேன்.. ஆனா, என் லிஷா என்னை காப்பாத்திட்டா..’
‘அப்படியா..?’
‘அவமட்டுமில்லன்னா… இப்போ நான் ஜெயில்ல இருந்திருப்பேன் பாஸ்…?’ என்றதும், தாஸ் அதிர்ந்து போனான்.
‘ஜெயில்லயா..? என்னாச்சு சந்தோஷ்..’
‘அந்த குணா நான் நினைச்சதைவிட பயங்கர கேடியா இருக்கான் பாஸ்… நான் அவன் அட்ரஸை கண்டுபிடிச்சு, அவன் வீட்டுக்கு போயிருந்தேன்.. பீர் அடிச்சிட்டிருந்தவன், நான் கேணிவனத்தைப் பத்தி எங்கேயாவது சொன்னியான்னு மிரட்டி கேட்டதும், என்னை தள்ளிவிட்டுட்டு லைட்-ஐ ஆஃப் பண்ணிட்டு ஓடிட்டான். கொஞ்ச நேரம் நான் அவன் ரூம்ல ஏதாவது க்ளூ கிடைக்குதான்னு தேடிட்டிருந்தேன். திடீர்னு போலீஸோட வந்து நிக்கிறான். நான் ஆடிப்போயிட்டேன் பாஸ்… ஒரு நைட் ஃபுல்லா போலீஸ் ஸ்டேஷன்லியே இருந்தேன். எனக்கு சின்ன வயசுலருந்தே போலீஸ்னா ரொம்ப பயம்… ஆனா, என்னை சரியா பழிவாங்கிட்டான் ராஸ்கல்… இது எல்லாத்தையும் பொறுத்துக்குவேன் பாஸ்… ஆனா, லிஷாவைப் பத்தி போலீஸ் கம்ப்ளைண்ட்ல கேவலமா எழுதியிருந்தான்… அதுக்காகவே எனக்கு சேன்ஸ் கிடைச்சா அவனை கொலை கூட பண்ணிடுவேன்…’
‘ஓ மை காட்… என்னென்னவோ நடந்திருக்கு… ஆனா எங்கிட்ட ரெண்டு பேரும் எதுவும் சொல்லாம மறைச்சியிருக்கீங்க…’
‘சாரி பாஸ்… லிஷாவும் நானும் இது உங்களுக்கு தெரிய வேணாமேன்னு நினைச்சோம்… வழக்கமா எல்லாம் தண்ணி போட்டுட்டுதான் உளறுவாங்க… நான் சிகரெட்டுக்கே எல்லாத்தையும் உளறி கொட்டிட்டேன்…’ என்று கூறி, அடுத்து ஒரு பஃப்-ஐ இழுத்து ஊதினான்…
‘இந்த குணாப்பய இப்படி ஒரு வில்லனா எப்படி மாறுனான்னுதான் தெரியல. பாஸ்..’ என்று மீண்டும் புகை இழுத்தான்.
‘எல்லாத்துக்கும் காரணமிருக்கு சந்தோஷ்… அவனை நான் முதல் தடவை ட்ரெய்ன்ல மீட் பண்ணும்போது, ஜஸ்ட் ஒரு செல்ஃபிஷ் இளைஞனாத்தான் எடை போட்டேன். ஆனா, அவன் இந்தளவுக்கு குரூரமா மாற காரணம், இந்த டைம் ட்ராவல்தான்-னு நினைக்குறேன்..’
‘ஏன் பாஸ், டைம் டிராவலுக்கும் அவனோட கேரக்டர் மாறுனதுக்கும் என்ன சம்மந்தமிருக்கு…?’
‘ஏன் இல்லாம… நாம செய்யற ஒவ்வொரு செயலும் நம்மளை மனதளவிலும், உடலளவிலும் அடுத்த நிலைக்கு தயார் படுத்தும்… உதாரணத்துக்கு. முதல் தடவையா ஒரு திருட்டை செய்யிற ஒருத்தன், அந்த திருட்டுல கிடைச்ச பொருளையோ பணத்தையோ மட்டும் அனுபவிக்கிறதில்ல… அந்த களவுல, பொருட்களை பறிகொடுத்த இன்னொருத்தனோட தவிப்பையும் சேர்ந்து ரசிக்க ஆரம்பிக்கிறான்… அது அவனுக்குள்ள இருக்கிற மிருகத்தனத்தை ட்ரிக்கர் பண்ணி விடுது… அதே மாதிரி, நல்ல ஆளுமைத்திறன் இருக்கிற ஒருத்தன், ஒரு சாதாரண பைக் ஆக்ஸிடெண்ட்ல தப்பி பிழைச்சான்னா, கிட்டத்தட்ட 6 மாசத்துக்காவது அந்த ஆக்ஸிடெண்ட்-ஐ நினைச்சி உள்ளூர நடுங்குவான். இதனால அவனோட ஆளுமைத் தன்மை கம்மியாகும்… இப்படி ஒவ்வொரு செயலும் பெரிய மாற்றத்துக்கு காரணமா இருக்கும்.’
‘அப்போ, இந்த டைம் டிராவல்தான் அவனோட இந்த வில்லத்தனத்துக்கு காரணம்-னு சொல்றீங்களா..?’
‘இருக்கலாம்… பொதுவாவே டைம் டிராவல் ஆகும்போது, நம்ம உடம்புல பயங்கர பின்விளைவுகள் ஏற்படும்-னு பிஸிக்ஸ் சொல்லுது… அந்த பின்விளைவுகள் இந்த குணாவுக்கு மனரீதியா குரூரத்தை ஏற்படுத்தியிருக்கும்னு நினைக்கிறேன்…’
‘என்ன இருந்தாலும், அவனுக்கு சாவு என் கையிலதான்..’ என்று கூறி சிகரெட்டின் கடைசி இழுப்பை இழுத்து முடித்தான்…
‘ஏன் இப்படி லோக்கலா பேசிட்டிருக்கே… நீ கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போனா, மறுபடியும் லிஷா வந்து காப்பாத்துவான்னு தைரியமா… அவ உனக்கு கிடைச்ச கிஃப்டு… அனாவசியமா உன் அவசர புத்தியால அவளை தொலைச்சிடாதே…’ என்று தாஸ் அவனை அதட்டுகிறான்.
‘ஆமாம் பாஸ்… லிஷா என்னை வந்து காப்பாத்துனப்போ, நானும் போலீஸ் ஸ்டேஷன்ல… இதையேத்தான் நினைச்சிட்டிருந்தேன். She is a precious gift to me..’ என்று கடலைப் பார்த்தபடி ஃபீல் செய்து கூறினான்.
‘தெரியுதுல்ல… ஒழுங்கா அடக்கமா நடந்துக்க…’ என்று கூறி, அவனும் சிகரெட்டை அணைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
இருவரும்… ஆபீசுக்கு வந்து, வேறு விஷயங்களைப் பற்றி ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்… நேரம் ஆக ஆக, லிஷா திரும்பி வராததால்… சந்தோஷ் உள்ளூர லேசாக கலக்கமுற்றான்.
‘சரி சந்தோஷ்… நீ கிளம்புறதாயிருந்தா கிளம்பு… நாளைக்கு பாக்கலாம்… லிஷா வரலியா..?’ என்று தாஸூம் கேட்க… சந்தோஷின் கலக்கம் அதிகமாகிறது…
மொபைலை எடுத்து அவளது நம்பருக்கு டயல் செய்தான்…
ரிங் போய்க்கொண்டேயிருக்க… லிஷா ஃபோனை எடுக்கவில்லை…
இதனால், அவன் மேலும் கலக்கமுற்றான்…
‘என்ன சந்தோஷ்.. எங்கேயிருக்காளாம்..?’
‘தெரியல பாஸ்… ஃபோனை எடுக்க மாட்டேங்குறா..?’ என்று சொல்லும்போதே அவன் குரலில் தொணி மாறுகிறது…
‘சரி விடு.. எங்கேன்னா பிஸியா… யார் கூடயாவது பேசிட்டிருப்பா..?’ என்று தாஸ் கூறியபடி அவனது அலமாறியில் புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருக்க… சந்தோஷ் மனம் அமைதியுறாதவனாய், மீண்டும் அவள் நம்பருக்கு டயல் செய்தான்…
இம்முறையும், ரிங் முழுவதுமாக போய் கட் ஆனது… குழப்பத்துடன் மணி பார்த்தான்
இரவு 10.30…
‘எனக்கு பயமா இருக்கு பாஸ்…’ என்று கூற, தாஸ் செய்து கொண்டிருக்கும் வேலைகளை விட்டுவிட்டு, சந்தோஷூக்கு அருகில் வந்து அவன் தோள்களை தட்டிக் கொடுத்தான்.
‘விடு சந்தோஷ், ரிலாக்ஸா இரு… டோண்ட் பி டென்ஸ்டு… எனக்கென்னமோ உங்க ரெண்டு பேர்ல, அவதான் புருஷன், நீ பொண்டாட்டின்னு தோணுது… ‘ என்று அவனே அவன் கமெண்ட்டுக்கு சிரித்துக் கொண்டான். இந்த ஜோக், சந்தோஷை மேலும் பலவீனமாக்கியது…
மீண்டும் டயல் செய்து பார்த்தான்…
இம்முறை, ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது…
‘ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்னு வருது பாஸ்..’ என்று சொல்லும்போது, சந்தோஷின் குரல் உடைந்தது…
‘ஹே, சந்தோஷ், ஏன் பதட்டப்படுறே… ‘ என்று அவனுக்கு சமாதானம் செய்ய முயன்றான். ஆனால், உண்மையில் அவனுக்குள்ளும் ஏதோ ஒருவித பயம் தொற்ற ஆரம்பித்தது…
‘இந்நேரம் அவ திரும்பியிருக்கணும் பாஸ்… ஆனா, திரும்பலியே..? எனக்கு பயமாயிருக்கு பாஸ்… ஒரு வேளை, அவளுக்கு ஆக்ஸிடெண்ட் ஏதாவது..?’
‘ச்சீ… சும்மா இரு… என்ன பைத்தியக்காரத்தனமான அஸம்ஷன்ஸ்… அவ பேட்டரி ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருக்கும்… கொஞ்ச நேரத்துல வந்துடுவா.. கலங்காம இரு..?’ என்று அவனுக்கு செயற்கையாய் ஆறுதல் கூறினான்.
ஆனால், சந்தோஷ் இந்த ஆறுதல்களுக்கெல்லாம் மசிபவனாக தெரியவில்லை… அவன் கொஞ்சம் கொஞ்சமாக இன்ஸ்டால்மெண்ட்டில், விசும்பிக் கொண்டிருந்தான்.
மேலும் ஒரு மணி நேரம் நெருப்பு யுகமாக கடந்தது…
இல்லை…
அவள் வரவில்லை…
வருவதற்கான அறிகுறிகளும் எதவும் தென்படவில்லை… இனி, என்ன செய்வது.. என்று தாஸும் குழம்பிப் போயிருந்தான்.
‘சந்தோஷ்… கிளம்பு..’ என்று தாஸ் புறப்பட்டான்…
‘எங்கே பாஸ்..?’ குரலில் இன்னும் நடுக்கம் அவனுக்கு குறையவில்லை…
‘எங்கேயோ போய் தேடுவோம். இப்படி ஒரே ரூம்ல உக்காந்துட்டிருக்கிறது ஏதோ மாதிரியிருக்கு..’ என்று கூறி, அங்கிருந்து கிளம்ப… சந்தோஷ் அவனை நடைபிணமாய் தொடர்ந்து சென்றான்.
லிஷா ஏற்கனவே காரை எடுத்துக்கொண்டு போயிருந்ததால், தனது இன்னொரு கார்-ஆன இன்னோவா-வில், அந்த இரவு நேரத்தில்… எங்கு போகப்போகிறோம் என்றறியாமல் இருவரும் புறப்பட்டனர்…
—————————–
சென்னையின் முக்கிய பிரதான சாலைகள் அனைத்திலும், கிட்டத்தட்ட 3 மணி நேரமாய் தாஸ் காரில் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான். எல்லா நைட் ஹோட்டல், தியேட்டர் வாசல், பீச் ஓர சாலைகள் என்று எந்த ஒரு இலக்குமில்லாமல் கார் ஓட்டிக்கொண்டிருந்தான்.
சந்தோஷ் வெளியே வெறித்து பார்த்தபடி அமைதியாக வந்துக் கொண்டிருந்தான். அவன் மனதுக்குள், லிஷா திடீரென்று ஃபோன் செய்து, சாரி சேண்டி ரொம்ப லேட் ஆயிடுச்சு என்று செல்லமாய் கொஞ்சியபடி பேசுவாளோ என்று ஒரு ஆசை உள்ளூர உழன்றுக் கொண்டிருந்தது.
அப்படி பேசினாள் அவளை திட்டக் கூடாது… பரவாயில்லடா..! என்று பதிலுக்கு கொஞ்சியபடி சொல்லவேண்டும் என்று திட்டமிட்டிருந்தான். ஆனால் அப்படி எதுவும் ஃபோன் வராததால் அவன் மனதில் பயத்தின் விகிதம் அதிகரித்துக் கொண்டே போய்க்கொண்டிருந்ததை வெறுத்தான்.
அதே வெறுப்பில் மேலும் 2 மணி நேரம் ஊர் சுற்றியதுதான் மிச்சம்… சந்தோஷுக்கு, இந்த விஷயத்தை போலீசிடம் கொண்டு போக பயமாக இருந்தது… காரணம், அப்படி போலீஸில் சென்று கம்ப்ளைண்ட் செய்தால், அவளுக்கு ஏதோ ஆபத்து என்று தான் நம்புவது போலாகும் என்பதால், போலீசிடம் போவது பற்றி யோசிப்பதை தவிர்த்து வந்தான்.
ஆனால், தாஸ் போலீஸிடம் சென்று கம்ப்ளைண்ட் செய்தால் தேடுவது சுலபம் என்று எண்ணியிருந்தான். சந்தோஷை எங்காவது பத்திரமாக விட்டுவிட்டு, பிறகு போலீஸிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று இருந்தான்.
இப்படி ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல், அந்த இரவில் காரில் சென்னை சுற்றியபடி மனக்கணக்குகளை போட்டுக் கொண்டிருந்தனர்.
காரில் கடிகாரத்தில், மணி அதிகாலை 5.15… என்று காட்டியது…
இருவரும் பெயருக்குக்கூட கண்மூடவில்லை… தூக்கத்தை தொலைத்திருந்தனர். சந்தோஷ் மனதிற்குள் திடீரென்று ஏதோ தோன்ற, காரில் எஃப்.எம்.ரேடியோவை ஆன் செய்தான்.
அதில், கந்தன் கருணை படத்தில் திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்… என்ற பாடலின் சரணம் ஒலித்துக் கொண்டிருந்தது…
சென்னையிலும் கந்த கோட்டம் உண்டு – உன்
சிங்கார மயிலாடத் தோட்டம் உண்டு
உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை – அங்கு
உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை!
இந்த பாடலை கேட்டதும், சந்தோஷ் என்ன நினைத்தானோ பாவம், அவனுக்கு அழுகை பீறிட்டு வந்தது…
கதறி அழ ஆரம்பித்தான்…
தாஸ் காரை ஓரமாக நிறுத்தியபடி அவனை சமாதான் செய்தான். … ‘ஹே… சந்தோஷ்… என்ன இது.. சின்ன குழந்தை மாதிரி… அழாதே..’ என்று அவனுக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தான்…
‘இல்ல பாஸ்… என் லிஷாவுக்கு ஏதோ ஆபத்து… என்னால அதை உணர முடியுது… அவ உயிருக்கு ஏதாவது ஆயிருக்குமோன்னு… பயமாயிருக்கு பாஸ்…’
‘அதெல்லாம் ஒண்ணும் ஆகியிருக்காது…’
‘இல்ல பாஸ்… எனக்குள்ள ஏதோ கணமா இருக்கு… இந்த மாதிரி எனக்கு இருந்ததேயில்ல… நான் அவளை ரொம்ப லவ் பண்றேன்…’ என்று அவன் பேசிக்கொண்டிருக்கும்போது… சந்தோஷின் மொபைல் ஒலித்தது… தாஸ் சட்டென்று, சந்தோஷின் பாக்கெட்டிலிருந்து மொபைலை எடுத்து பார்த்தான்.
அதில் ‘லிஷா காலிங்…’ என்று வந்தது…
‘லி…லிஷா… லிஷா… ஆர் யு தேர்…?’
‘. . . . . . . . . . . . . . . . . ‘ பெரிய மௌனம்… ஆனால், லைனில் மறுமுணையில் இணைப்பு இருந்தது…
‘ஹலோ… லிஷா… கேக்குதா..?’
‘. . . . . . . . . . . . . . . . . ‘ மீண்டும் மௌனம்…
தாஸ் செய்வதறியாமல் திகைத்திருந்தான்… பாவம், சந்தோஷின் கண்ணீர் அவனையும் பலவீனப்படுத்தியிருந்தது…
இம்முறை சந்தோஷ் பேசினான்…
‘லிஷா… என்னம்மா ஆச்சு… எங்கேயிருக்கே நீ..?’ என்று அழுதபடி பேசினான்… ரேடியவில் சிக்னல் கிடைக்காத போது கேட்கும் ஹிஸ்… என்ற சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது…
மௌனம்…
‘பாஸ்… என்ன பாஸ்… ஒண்ணுமே பேச மாட்டேங்குறா..?’ என்று குழந்தையைப் போல், தாஸிடம் சந்தோஷ் புலம்பினான்.
‘இரு சந்தோஷ்…’ என்று மீண்டும் ஃபோனில் கவனம் செலுத்தியவன்… ‘லைன்ல வேற யாராவது இருக்கீங்களா..?’
அதே ஹிஸ் என்ற சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது…
‘என்னன்னு தெரியல சந்தோஷ்… அந்த பக்கத்துல லைன் ஆன்ல இருக்கு ஆனா…’ என்று தாஸ் ஏதோ பேசிக்கொண்டிருக்கும்போது… ‘சந்தோஓஓஓஓ’ என்று திடீரென்று லிஷாவின் குரல் சத்தமாக கேட்டு… அவள் முழுப்பெயர் சொல்லும்முன், ‘பட்’ என்று ஏதோ சத்தம் கேட்டு… லைன் துண்டிக்கப்பட்டது…
‘லிஷா.. லிஷா… என்னாச்சு… என்னாச்சு லிஷா… ஹலோ..?’ என்று சந்தோஷ் மொபைலைப் பார்த்து கத்திக்கொண்டிருந்தான்…
தொடரும்…