நேதாஜியின் குரு-சித்தரஞ்சன் தாஸ்
நேதாஜியை தெரிந்து இருக்கும் உங்களுக்கு அவரின் குருவான சித்தரஞ்சன் தாஸ் அவர்களை தெரியுமா ? அடிப்படையில் வக்கீலான இவர் நல்ல கவிஞரும் கூட .
அந்த காலத்திலேயே காங்கிரஸ் கூட்டங்களுக்கு தொடர்வண்டி முழுக்க ஆட்களை தன் சொந்த செலவில் அழைத்து செல்லும் அளவுக்கு வக்கீல் தொழிலில் பொருள் ஈட்டினார் .
அரவிந்தரை ஆங்கிலேயே அரசு தொடுத்த வழக்கில் இருந்து மீட்டு எடுத்தவர் இவர்தான் .
காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திய பின்னர் நடந்த தேர்தல்களில் பங்கு பெற மறுத்தது.
சித்தரஞ்சன் மற்றும் மோதிலால் நேரு இதிலிருந்து மாறுபட்டு சுயராஜ்ய கட்சியை துவங்கினார்கள்.
வங்க சட்டசபையில் ஆங்கிலேயே அரசை குதறி எடுத்தது அவரின் வாதங்கள். பல தீர்மானங்கள் நிறைவேறாமல் தடைபட்டன.
ஐரோப்பாவின் தொழில்மயமாக்கல் அப்படியே இந்தியாவில் புகுவது சரியில்லை என்று அவர் வாதிட்டார்.
எளியவர்களின் நலன்கள் காக்கப்பட வேண்டும் என்று உறுதியாக பதிவு செய்தார். காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாடு ஏற்பட்டு தன் கட்சியை அதோடு இணைத்தார். கல்கத்தா நகர மேயர் ஆனார்.
கல்கத்தா நகர மேயர் ஆன பொழுது நேதாஜியை உடன் நிர்வாகத்தில் வைத்துக்கொண்டு பல்வேறு அற்புதமான செயல்களை நிகழ்த்தினார்.
இன்றைக்கு நாமெல்லாம் இப்பொழுது கொண்டு வந்ததாக நினைக்கும் கிராம பஞ்சாயத்துகள்,கிராம சுயாட்சி ஆகியவற்றை தன்னுடைய ஐந்து அம்ச திட்டத்தில் இருபதுகளிலேயே பதிவு செய்திருக்கிறார்.
தொழிற்சங்கங்கள் அமைத்தலை துரிதப்படுத்த வேண்டும்,தொழிலாளிகளுக்கு உரிமைகள் பெற வேண்டியது முக்கியம் என்றும் முழக்கமிட்டார் அவர்.
ஒரு வழக்கிற்கு அன்றைக்கே லட்சம் வாங்கிய இவர் விடுதலைப்போரில் ஈடுபட்ட பொழுது அவற்றை எல்லாம் துறந்தார்.
கொடுத்து கொடுத்தே ஏழையாகிப்போனார் இவர் . இறப்பதற்கு முன் அவர் நேதாஜிக்கு எழுதிய கடிதத்தில் “சில நூறு ரூபாய்கள் எனக்கும் முழுமையான வறுமைக்கும் நடுவில் நிற்கிறது” என்றார் .
அப்பொழுது கூட தன் வீட்டை ஆதரவற்ற பெண்களின் முன்னேற்றத்திற்கு எழுதி வைத்துவிட்டு இறந்துபோனார் .
இறுதி ஊர்வலத்துக்கு செலவழிக்க கூட வழியில்லாத அளவுக்கு வறுமை அவரை பீடித்து இருந்தது.
மக்கள் லட்சக்கணக்கில் திரண்டு அவரை வழியனுப்பினார்கள். வங்கதேசத்திலும் இவர் இன்றைக்கும் அன்போடு நினைவுகூரப்படுகிற அளவுக்கு இவரின் பணிகள் மனிதநேயம் தோய்ந்ததாக இருந்தது .