இறந்தவர்கள் சஞ்சரிக்கும் உலகத்தை சூட்சும உலகம் என்று கூறுவது மிகவும் பொருத்தமாயிருக்கும். சூட்சும உலகம் என்பது எமது சட உலகத்தின் செறிமானத்தை (Density) விட பலமடங்கு குறைந்த செறிமானத்தையுடைய நுண்பொருளால் (Astral Matter) உருப்பெற்ற தளம் எனக் கூறலாம். சட உலகத்தின் ஸ்தூல வடிவமாக இருக்கும் சகல பொருட்களையும் நமது கண்களால் பார்க்க முடிகிறது. திண்மமாக, திரவமாக, வாயு வடிவமாக இருப்பவைகளை நாம் காண்கிறோம் அல்லது உணர்கிறோம்.
சூட்சுமமாக இருக்கும் காற்றும், மின்சாரமும், காந்தப் புலமும் நமது கண்களுக்குத் தெரிவதில்லை. ஆனால் அவைகளையும் நம்மால் உணர முடிகிறது. அதே நேரம் சூட்சும உலகத்தை நுண்நோக்காற்றல் உடையவர்களைத் தவிர வேறு யாராலும் பார்க்கவோ உணரவோ முடியாது.
நமது சட உலகிலுள்ள திண்மமான, திரவமான, வாயுவான வடிவங்கள் பூமியின் ஈர்ப்பு சக்திக்குக் கட்டுப்பட்டு உலகின் மேற்பரப்பில் படிந்து கிடக்கின்றன. ஆனால் ஆவி பூமியின் ஈர்ப்பு சக்தியின் மிகக் குறைந்த பிடிமானத்துக்கு உட்பட்டது என்பதால் உலகின் மேற்பரப்பின் மேல் தளத்தில் படிந்திருக்கிறது.
ஆவியைவிட மிகக்குறைந்த செறிமானமுள்ள நுண்பொருளால் ஆனது தான் சூட்சும உலகம். எனவே அது விண்ணை நோக்கிப் பரந்து கிடக்கின்றது. அதன் காரணமாகவே அதற்கு விண்ணுலகம் என்ற காரணப்பெயரும் உண்டு.
சூட்சும உலகம் நமது சட உலகத்தோடு ஊடுருவிக் கொண்டு (Interpenetrating) இணைந்திருக்கின்றது. ஆனால் அது மிக நுட்பமான பரிமாணத்தை உடையதாகையால் சூட்சுமமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. சட உலகின் கண்களுக்கு அது தெரிவதில்லை.
நம் கண்ணுக்கு தெரியாததாலும் நம்மால் உணரமுடியாததாலும் ஆவிகள் பற்றிய கதைகள் பயத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துவதுடன், நமக்குள் நம்பிக்கை இல்லாத தன்மையையும் தோற்றுவிக்கிறது.
இவை பற்றிய சரியான தெளிவுகளே நம்மை ஆவிகள் பற்றிய சரியான முடிவுக்கு கொண்டு செல்லும் என்பதால் இந்த சூட்சும உலகம் பற்றி அடுத்து இன்னும் விரிவாகப் பார்க்கலாம்.