மை ஹீரோ ஸ்டோரி…!
ரொம்பச் சின்னவயதில் இந்தப்பேனாவை எப்படியாவது வாங்க வேண்டும் என்பது என் பெருங்கனவுகளில் ஒன்று. மேஜையில் துளி மையைத் தெளித்து இப்பேனாவின் கீழ்பாகத்தைக் அழுத்தி நிப்பால் உறிஞ்சி உள்ளிழுக்கும் லாவகம் எனக்கு அப்போது பேரதிசயம். சிங்கப்பூரில் மட்டும்தான் இது கிடைக்கும் என ஏமாத்தினான் இதை வைத்திருந்த கிராதகன். இவ்வளவுக்கும் மேஜையில் அவனுக்கு பலமுறை மைப் பிச்சை போட்டவன் நான். என் ஊரில் கேணிக்கரை தமிழ் ஸ்டோரிலும், பஜார் அருணா ஸ்டோரிலும் பண்டல்பண்டலாய் இதைப்பார்த்தபோது சந்தோஷம் தாள முடியவில்லை எனக்கு. சைக்கிளில் எழுதுப்பொருட்கள் வாங்க அப்பா அருணா ஸ்டோர்ஸுக்கு அழைத்துச் சென்றபோது ஆசைஆசையாய் இந்தப் பேனாவைக் கை காட்டினேன். ‘இதெல்லாம் புடிச்சு எழுதத் தெரியுமா உனக்கு? தொலைச்சிட்டு வந்து நிப்பே. அஞ்சு ரூபா பேனாவே வாங்கிக்க’ என்று கும்பி பெருத்த மரக்கட்டை இங்க் பேனாவை வாங்கிக் கொடுத்தார். எப்போதும் அப்பாவின் சாய்ஸ் அடிபெருத்த மைப்பேனாதான். மை ஊத்தினால் வாரக் கணக்கில் தீராது என்பது அவர் கணக்கு. உருட்டுக்கட்டையில் பாதி அளவு இருக்கும் அந்தப்பேனாவி…ன் சாயலில் அறிஞர் அண்ணாவின் கையில் ஒன்றைப் பார்த்தபோதுதான் கொஞ்சம் ஆறுதல். அடிக்கடி ‘நிப்’ வாய் பிளந்து பட்டை நாமம் அடித்து கையெழுத்தை பத்திர எழுத்தாய் மாற்றி வைக்கும் அந்தப் பேனா. சில நேரங்களில் வயிற்றுப்போக்கு வந்து பேப்பரையும் சட்டையையும் ஊதாவாக்கி விடும். உள்ளங்கை எல்லாம் ஊதாமயமாகிப்போனதால் சாப்பிடும் கஞ்சியும்கூட நிறம் மாறிச் சிரிக்கும். அம்மாவிடம் பேனா வேண்டி கண்ணைக் கசக்கினால், ‘மூடியை மூடாம வைக்கிறதே உன் பொழப்பு… உனக்குலாம் கடைசிவரை பென்சில்தான் லாயக்கு. மை ஊத்தணும்னு பத்துப் பத்துக் காசா கேட்டு அரிச்சு எடுப்பே. பேசாம லெட்டுப் பேனா வாங்கிக்க!’ என ஐந்து ரூபாய் ரெய்னால்ட்ஸ் பேனா ஒன்றை வாங்கிக் கொடுப்பாள்.
பொறுத்தது போதும் என பெட்டிக்கடை மஞ்சள் அட்டை சிறுசேமிப்பில் டிக் அடித்து பத்துக்காசும் இருபது காசுமாய் சிறுகச் சிறுக சேமித்து கனவுப்பேனாவை தமிழ் ஸ்டோரில் வாங்கினேன். முதன்முறை இப்பேனாவில் எழுதிப்பார்த்தபோது ஹீரோவாய் ஆனது போலவே தோன்றியது எனக்கு !!