ஒருவழியாக ஜோனாதன் டிராகுலா கோட்டையிலிருந்து தப்பித்து காதலி மினாவிடம் வந்து சேர்ந்துவிட்டார்.
டிராகுலா பிரபுவைப் பற்றிய பயம் முற்றிலும் அகன்று விட்டது. அதுபோலவே லண்டனுக்கு வந்துவிட வேண்டும் என்ற டிராகுலா பிரபுவின் நோக்கமும் நிறைவேறிவிட்டதை ஜோனாதன் உணர்ந்தார்.
இதற்கிடையில் லூசியின் மரணம் குறித்து அறிந்து மிகவும் வேதனைப்பட்டார் ஜோனாதன்.
அந்த டிராகுலா பிரபுவை வேட்டையாடத் தகுந்த ஒரே மனிதர் டாக்டர் ஹென்சிங்தான் என்று ஏனோ அந்த நேரத்தில் ஜோனாதனுக்குத் தோன்றியது.
அதே சமயத்தில் டாக்டர் ஹென்சிங்கும் டாக்டர் செர்வாண்ட்டும் மருத்துவமனையிலிருந்த ஒரு குழந்தையைப் பற்றியும் லூசியைப் பற்றியும் தீவிரமாக விவாதித்துக் கொண்டி ருந்தனர்.
“நண்பரே… அந்தக் குழந்தையின் கழுத்தில் ஏற்பட்ட காயங்கள் லூசியால் ஏற்பட்டவைதான்.”
உடனே அது கேட்டு திடுக்கிட்டவராக பாய்ந்து எழுந்த செர்வாண்ட் கேட்டார்.
“ஹென்சிங்! நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? உங்களுக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா?”
அதனைக் கேட்டு மெலிதான ஒரு புன்னகை செய்தார்.
“இன்றைக்கு ராத்திரியில் நாம் சில காரியங்கள் செய்ய வேண்டும். நாம் இருவரும் லூசியைப் புதைத்துள்ள கல்லறைப் பகுதியில் இன்றைய இரவைச் செலவழிக்க வேண்டியிருக்கும். அந்த மயானத்தின் சாவிதான் இது. வெட்டியானின் கையிலிருந்து தந்திரமாக வாங்கியிருக்கிறேன்.”
அப்போது செர்வாண்ட், ஹென்சிங்கின் முகத்தை ஊன்றிப் பார்த்து, “பயங்கரமான ஏதோ ஒரு சோதனையை எதிர்கொள்ள வேண்டிவரும்’ என்று மிரண்டார். எனினும் தைரியத்தை வரவழைத் துக் கொண்டு, “சரி; தாமதிக்காமல் உடனே கிளம்புவோம். இப்போதே மதியத்தைக் கடந்துவிட்டோம்” என்றார்.
மருத்துவமனையை அவர்கள் அடைந்தபோது காயம்பட்ட அந்தக் குழந்தை விழித்திருந்தது. டாக்டர் வின்சென்ட் அந்தக் குழந்தையின் கழுத்தில் போட்டிருந்த கட்டை அவிழ்த்து உட்புற மிருந்த சிறிய காயங்கள் இரண்டையும் அவர்களுக்குக் காட்டினார்.
லூசியின் கழுத்தில் தென்பட்டதுபோல கொஞ்சம்கூட வித்தியாசமின்றி அதே மாதிரியான காயங்கள்தான் அவை.
டாக்டர் வின்சென்ட்டிடம் அந்தக் காயம் பற்றி அவர்கள் கேட்டபோது, “”எலி அல்லது எலி மாதிரியான வேறு ஏதாவது விலங்குகளால் இந்த காயம் ஏற்பட்டிருக்கலாம்” என்று கூறினார்.
அவரே திரும்பவும், “”ஒருவேளை லண்டன் மாநகரில் வடக்குப் பகுதிகளில் ஏராளமாகக் காணப்படும் ஒருவகை வௌவால்களில் ஒன்று கடித்திருக்கவும் வாய்ப்பு உள்ளது” என்றார்.
அதன்பிறகு வின்சென்ட்டிடமிருந்து விடைபெற்றுக் கிளம்பும்போது இருள் பரவத் தொடங்கிவிட்டது.
இரவுக் காவலர்கள் குதிரைமீதேறி ரோந்து சுற்றத் தொடங்கியிருந்தனர். அவர்கள் இருவரும் தேவாலயத்தின் மதிலை மிகுந்த சிரமத்துடன் தாண்டி உட்புறம் குதித்தனர்.
அங்கிருந்த அடர்த்தியான இருட்டில் மூழ்கிக் கிடந்த மயானத்தில், தட்டுத்தடுமாறி நடந்து ஒரு வழியாக லூசியின் கல்லறையைக் கண்டுபிடித்தனர்.
சாவியை எடுத்துக் கல்லறையின் பழைய வாசலைத் திறந்து உள்ளே நடக்க, டாக்டர் மெழுவர்த்தி ஒன்றை ஏற்றி அங்கே பரவியிருந்த இருளை அகற்ற முயற்சி செய்தார்.
பகல் நேரத்தில் பூக்களாலும் தோரணங்களாலும் நன்றாக அலங்கரித்திருந்த போதிலும் இரவின் அமைதியும் தனிமையும் வாடிக் கருகிய பூக்களின் நாற்றமும் எல்லாம் கலந்து ஒருவிதமான திணறலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
ஹென்சிங் அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது நடவடிக்கையைத் தொடங்கிவிட்டார். மெழுவர்த்தி வெளிச்சத்தைக் கொண்டு, சவப் பெட்டியின் மீதுள்ள எழுத்துகளை வாசித்து சவப் பெட்டியை அடையாளங்கண்டு அதனைத் திறக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
அந்த சவப் பெட்டியின் ஆணிகளை ஹென்சிங் ஒவ்வொன்றாகக் கழற்றி மேல் மூடியை அகற்றியபோது, உட்புறமிருந்த ஈயத் தகடால் ஆன மற்றொரு மூடி தென்பட்டது.
உயிருடன் இருக்கும் ஒரு இளம்பெண்ணின் உடைகளைக் களைவதைவிட வெட்கக்கேடான செயலாக அது தோன்றியதால் அதனைத் தடுக்க முனைபவராக செர்வாண்ட் ஹென்சிங்கின் கைகளைப் பற்றினார்.
ஹென்சிங் ஒரு வாளை எடுத்து ஒரு முனையில் செருகி, அந்த ஈயத் தகடை அறுக்கத் தொடங்கினார். அந்த இடைவெளிப் பகுதியிலிருந்து ஒரு வாரம் கடந்த பிணத்தின் நாற்றம் குப்பென்று பரவியது.
முற்றிலுமாக அந்த ஈயத் தகட்டை அறுத்து அப்புறப்படுத்திய பின் உள்ளே எட்டிப் பார்த்த இருவரும் திகைத்துப் போய் விட்டனர். அந்தச் சவப் பெட்டியின் உட்புறம் காலியாக இருந்தது.
லூசியின் உடல் அந்த சவப் பெட்டியில் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
“அந்த உடலை எவராவது திருடிக் கொண்டு போயிருப்பார்களோ” என்று கேட்டார் செர்வாண்ட்.
“நான் சொன்னது சரியாகிவிட்டதா… இப்போது திருப்தி தானே?” என்றார் ஹென்சிங்.
அந்த சவப் பெட்டியைப் பழையபடியே ஆணியடித்து இறுக்கி மூடினர். அதன்பின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தனர்.
ஹென்சிங் மயானப் பகுதியின் மத்தியில் நடந்துவந்தபோது செர்வாண்ட்டிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி கூறிவிட்டு வேறொரு பகுதிக்கு நடந்து சென்றார்.
ஒரு மரத்தின் அடியில் செர்வாண்ட் பத்திரமாக நின்று கொண்டிருந்தார். செர்வாண்ட் அங்கு நிற்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் கடிகாரத்தில் பன்னிரண்டு மணி அடித்தது கேட்டது. அந்தத் தனிமை பயங்கரமாக இருந்தது.
தனக்குப் பின்னால் ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பினார். மாதா கோவிலின் வளைவு திரும்பும் பகுதியில் மூலையில், வெள்ளையாக ஏதோ ஒன்று நகர்ந்தது தெரிந்தது.v அவர் அந்தப் பகுதிக்கு ஓடிச் சென்று பார்த்தபோது ஒரு சிறு குழந்தை மட்டும் நின்று கொண்டிருந்தது. ஹென்சிங் அந்தக் குழந்தையைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்தார்.
“இதை யார் இங்கே கொண்டு வந்து சேர்த்தது என்று தெரியவில்லையே…”
“விசாரிப்போம்… நல்லவேளை இந்தக் குழந்தையை சரியான நேரத்தில் வந்து காப்பாற்றினேன். குழந்தைக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.”
அதன்பிறகு இந்தக் குழந்தையை என்ன செய்வது என்று இருவரும் யோசித்தனர். காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்று சேர்த்தால் நடந்த எல்லாவற்றையும் விளக்க வேண்டும். புதிய சிக்கல் ஏற்பட்டுவிடும்.
கடைசியாக ஒரு முடிவு எடுத்தனர். இரவு காவலாளிகளின் கண்ணில் படுவது போல புதர்க்காட்டை ஒட்டியுள்ள வெட்ட வெளியில் அந்தக் குழந்தையை படுக்கவைத்துவிட்டு சீக்கிரமாக வீட்டுக்குத் திரும்பிவிடுவது என்று தீர்மானம் செய்தனர்.
வீட்டுக்குச் சென்றபிறகு மறுநாளும் அவர்கள் பழையபடியே ஆராய்ச்சியில் இறங்குவதற்கு மயானத்திற்கு வந்தனர்.
தொடரும்…