ரத்த காட்டேரி – 16

ரத்த காட்டேரி – 16

அதைத் திறக்கும் சாவி பிரபு அறையில்தான் இருக்க வேண்டும். ஜன்னல் வழியாக எப்படியாவது பிரபுவின் அறைக்குள் சென்றாக வேண்டும். ஒருவேளை இந்த முயற்சியில் பிரபு தன்னைக் கொல்வதாக இருந்தால்கூட பரவாயில்லை. இந்த மரணாவஸ்தை யிலிருந்து உடனடியாக மீள வேண்டும் என்று முடிவு செய்தார்.

கருங்கல் சுவர் வழியாக ஊர்ந்து இறங்கினார். பிரபுவின் அறையை அடைந்தபோது அந்த அறை காலியாக இருந்தது. அந்த நேரத்தில் டிராகுலா பிரபு எங்கே போயிருப்பார் என்று யூகிக்க முடிந்தது.

ஜோனாதன் நேராக மயானப் பகுதிக்குச் சென்றார். அங்கிருந்த அறையில் ஏற்கெனவே பார்த்த அந்த பழைய கல்லறைப் பெட்டியில்தான் டிராகுலா பிரபு படுத்துக் கிடப்பார் என்று அவருக்கு உறுதியாகியது.

ஆனால் ஒரு சின்ன மாற்றம். ஏற்கெனவே ஒரு முறை பார்த்தபோது அந்தப் பழைய பெட்டி திறந்திருந்தது. இப்போது மூடியிருந்தது.

எப்படியாயினும் அந்த டிராகுலா பிரபு உள்ளேதான் இருப்பார். அவரிடமுள்ள சாவியை எடுத்துவிட வேண்டும் என அந்த மூடியைத் திறந்தபோது ஜோனாதனுக்கு பெருத்த ஆச்சரியம் காத்திருந்தது.

மிகுந்த வயதான கிழவராக நேற்றுவரை தோற்றமளித்த டிராகுலா பிரபு மிகவும் இளமையோடு பளபளவென உருமாறி நீட்டி நிமிர்ந்து படுத்துக் கிடந்தார்.

வெள்ளை நரைமுடிகூட செம்பட்டையாகக் காட்சியளித்தது. வெளிறிப்போன அவருடைய முகத்தில் ரத்த ஓட்டம் ஓடுவது தெரிந்தது.

டிராகுலா பிரபுவின் கடைவாயிலிருந்து தாடையின் வழியாக கழுத்துப் பகுதிவரை ரத்தக்கறை வழிந்து உறைந்துபோன அடையாளம் தெரிந்தது.

திரும்பவும் அந்த முகத்தைப் பார்க்கக்கூடிய தைரியம் ஜோனாதனுக்கு இல்லை. ஆயினும் எப்படியாவது டிராகுலா பிரபுவிடமிருந்து சாவியைக் கைப்பற்றாவிட்டால் இந்த இரவுக்குள் தன்னுடைய கதை முடிந்துவிடும் என்று உறுதியாகியது.

சவப் பெட்டியில் படுத்துக்கிடக்கும் டிராகுலா பிரபுவின் உதடுகளில் ஒருவிதமான கேலிப் புன்னகை தோன்றி மறைந்ததைப் பார்த்து வேதனைப் பட்டார் ஜோனாதன்.

இவ்வளவு மோசமான மனிதனை லண்டனில் குடியமர்த்து வதற்காகவா தான் இத்தனை பாடுபட்டுக் கொண்டிருந்தோம் என்பதை நினைத்து நினைத்து ஜோனாதன் மிகவும் வருந்தினார்.

லண்டனுக்கு அவர் வந்தபின் ஏற்படும் பின்விளைவுகளை இப்பொழுது நினைத்தாலும் உடல் நடுங்கியது. அடுத்த பல நூற்றாண்டுகள் இந்தப் பிசாசு அங்குள்ள லட்சக்கணக்கான மனிதர் களின் ரத்தத்தைக் குடித்து அவர்களையெல்லாம் ஒருபோதும் மரணமடையாத ரத்தக் காட்டேரிகளாக்கிவிடும்.

இந்தப் பிசாசை ஒழிக்காத பட்சத்தில் இன்னும் இந்த உலகத்தில் என்னென்ன துயரங்கள் ஏற்படப் போகிறதோ? இந்த நிமிடமே இந்தப் பிசாசை கொன்றுவிடக்கூடிய வாய்ப்பு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணிய ஜோனாதனின் பார்வை ஏதாவது ஆயுதம் கிடைக்காதா என்று தேடியது.

மண்ணைக் கிளறுவதற்காக அந்த இடத்தில் கிடந்த நீண்ட கைப்பிடியுள்ள மண்வாரி கண்களில் பட்டது. அதை எடுத்து உயர்த்தி தன்னுடைய சக்தியனைத்தையும் ஒன்றுதிரட்டி ஓங்கிக் குத்தினார் ஜோனாதன்.

ஆனால் டிராகுலா பிரபுவின் தலை ஒரு இயந்திரம் போல சட்டென அச்சமயம் திரும்பியதால் அந்த மண் வாரியின் குறி தவறியது. அந்தப் பிசாசின் நெற்றியில் ஒரு காயத்தை மட்டும் அந்த அடி ஏற்படுத்திவிட்டு கீழே விழுந்தது.

அந்த சைத்தான் டிராகுலா பிரபு அந்நேரம் அசைவற்றிருந்த தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, தொலைவில் அந்த ஜிப்ஸி களின் சத்தமும் குதிரைகளின் குளம்பொலி சத்தமும் கேட்டது.

எப்படியாவது தப்பித்து அங்கே சென்றுவிட வேண்டும் என்ற வெறியில் ஜோனாதன் பாய்ந்தோடினார்.

கோட்டையின் ஏதாவது ஒரு பாதை தென்பட்டால் போதும் என்று கதவை நெருங்கியபோது, அப்போது அடித்த சூறாவளிக் காற்றில் சடாரென கதவுகள் திறக்க முடியாதபடி அடைத்துக் கொண்டன.

அந்தக் குதிரை வண்டிகளில் பெட்டிகள் அடுக்கி வைக்கப்படும் சத்தமும் ஆணியடித்து மூடிகள் இறுக்கப்படும் சத்தமும் கேட்கத் தொடங்கின.

அந்தப் பெட்டிகள் எல்லாம் எங்கோ கொண்டு செல்லப்படு கின்றன என்பது புரிந்தது. அந்தக் கோட்டைக்குள் தான் மட்டும் தனியாக சிறைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார். துணைக்கு மூன்று பெண் பிசாசுகள்!

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top