ரத்த காட்டேரி – 13

ரத்த காட்டேரி – 13

மாடிப்படிகள் வழியே வேகமாக ஏறிச் சென்று, மேலே இருந்து அந்த குதிரை வண்டிக்காரர்களை சத்தம் போட்டு அழைத்தபோது, அவர்கள் அவரைப் பார்த்து தங்களுக்குள் கேலியாக சிரித்துப் பேசிக் கொண்டனர்.

அந்த வண்டி நிறைய நீண்ட சதுரப் பெட்டிகள் ஏராளமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்தக் குதிரைகள் அவற்றை மிகவும் சுலபமாக இழுத்துச் சென்ற தன்மையிலிருந்தே அவையத்தனையும் காலிப் பெட்டிகள் என்பது முடிவாயிற்று.

அந்தப் பெட்டிகள் எல்லாவற்றையும் அந்த கோட்டையின் பின்புறத்திலுள்ள முற்றப்பகுதியில் அவர்கள் அடுக்கி வைப்பதையும் ஜோனாதன் பார்த்தார்.

டிராகுலா பிரபு அன்றைக்கு ராத்திரியில் ஜோனாதனைத் தனியே விட்டுவிட்டு தன்னுடைய அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டார்.

அவருடைய நடவடிக்கைகளை எப்படியாவது அறிய வேண்டும் என்ற ஆர்வத்தில் தைரியமாக மாடிப்படி வழியாக மேலே வந்தார் ஜோனாதன்.v அந்தக் கோட்டைக்குள் புதிது புதிதாக ஏதேதோ நிகழ்ச்சிகள் நடந்து வருவது மட்டும் புரிந்தது. நீண்ட மண்வெட்டிகளைக் கொண்டு யாரோ மண்ணைக் கீறிவிடும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.

வெகுநேரம் ஜோனாதன் அந்த ஜன்னலருகில் நின்றபடி அங்கே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவர் சட்டென திரும்பி டிராகுலா பிரபு அறை பக்கம் பார்த்தபோது, அந்த அறையின் ஜன்னல் கம்பி வழியே யாரோ ஒருவர் வெளியேறியது தெரிந்தது.

அவர் டிராகுலா பிரபுதான் என்பது புரிந்தது. ஆனால் அவர் அணிந்திருந்த உடை தான் பயணம் செய்தபோது அணிந்திருந்த உடை என்பதைப் பார்த்து திடுக்கிட்டுப் போனார் ஜோனாதன். ஒருநாள் அந்த மூன்று பெண் பிசாசுகள் டிராகுலா பிரபுவிடமி ருந்து பறித்துச் சென்ற சாக்கு மூட்டையை அவர் தோளில் தொங்கவிட்டிருப்பதும் தெரிந்தது. ஜோனாதனுக்கு அதைக் கண்டு மிகுந்த பயம் ஏற்பட்டது.

ராத்திரி நேரங்களில் அந்தக் கோட்டையை விட்டு வெளியேறி டிராகுலா பிரபு நடத்திவரும் குரூரக் குற்றச் செயல்களுக்கு ஜோனாதனைப் பொறுப்பாளியாக்கும் அவரது திட்டம் புரிந்தபோது மிகவும் கலக்கமுற்றுப் போனார். தன்னைச் சிறைக் கைதிபோல் இருக்கச் செய்து தொடர்ந்து அவர் அத்தகைய குரூரச் செயல்களில் ஈடுபடும் திட்டம் தெளிவாகியது.

டிராகுலா பிரபு திரும்பி வரும்போது அதுகுறித்துப் பேச வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன் ஜோனாதன் அந்த ஜன்னலருகில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தபோது, தன்னை ஏதோ ஒரு பயங்கரம் சூழ்ந்து கொண்டிருப்பதாகக் கால்கள் வெடவெடத்தன.

அந்த முற்றப் பகுதியில் அன்று பார்த்த அதே இளம் பெண் பிசாசுகள் வந்து நின்று கொண்டிருப்பதைப் பார்த்து, அன்றைய தினத்தைப் போலவே மயங்கி விழக்கூடிய சூழ்நிலை உருவாவது போல் தெரிந்தது.

வெகுவிரைவாகத் தன்னுடைய அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டார். தன்னுடைய மூச்சிரைக்கும் சத்தத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு காதுகளைக் கூர்ந்து கேட்டபோது, டிராகுலா பிரபுவின் அறைக்குள்ளிருந்து ஒருவிதமான வேதனைக் குரல் உயர்ந்து படிப்படியாகக் குறைந்து மறைந்தது.

தன்னுடைய உயிருக்குப் பாதுகாப்பற்ற நிலையில், தன்னுடைய சுதந்திரம் அனைத்தும் பறிபோய் விட்டிருந்த நிலைமையை நினைத்து படுக்கையில் படுத்தபடி நெஞ்சுவலிக்குமளவு அழுது தீர்த்தார்.

சில நிமிடங்களில் கோட்டை வாசலில் யாரோ ஒரு பெண்மணியின் அழுகுரல் கேட்டு ஜன்னல் வழியே பார்த்தார்.

தலைவிரி கோலத்தில் மோசமான தோற்றத்தில் ஒரு பெண்மணி மார்பில் அடித்துக் கொண்டு அழுதாள்.

ஜோனாதனை ஜன்னல் வழியாகப் பார்த்துவிட்டு தன்னுடைய ஒட்டுமொத்த கோபத்தையும் ஒன்று திரட்டி உரத்த குரலில் திட்டினாள்.

“அடேய் சைத்தானே, கேடு கெட்டவனே… என் குழந்தையை எனக்கு கொடுடா” என்று அந்தக் கதவுக்கு வெளியே

முழங்காலிட்டு நின்றபடி மிகவும் பரிதாபமாக அலறிக்கொண்டே இருந்தாள். சில சமயம் துக்கம் தாளாது அந்தக் கோட்டைச் சுவரின் கதவில் தன்னுடைய தலையை மோதிக் கொண்டாள்.

அப்போது திடும்மென்று டிராகுலா பிரபுவின் உரத்த சத்தம் கேட்டது. அவரது குரலை கேட்ட மாத்திரத்தில் தொலை தூரத்திலிருந்து பெருத்த ஊளைச் சத்தத்துடன் கணக்கிலடங்கா ஓநாய்கள் கட்டவிழ்த்துவிடப்பட்ட மந்தை மாதிரி அந்தக் கோட்டை வாசலுக்குப் பாய்ந்து வந்தன.

அந்த இரக்கத்திற்குரிய பெண்மணியின் வேதனைமிக்க வீறல் சத்தம் உயர்ந்து மெல்லமெல்ல காற்றில் கலந்து அடங்கியது. அந்த ஓநாய்கள் நாக்கால் உதடுகளை ஒருவித திருப்தியுடன் நக்கியபடி திரும்பிச் சென்றுவிட்டன.

ஜோனாதன் அந்த துயரக் காட்சியைக் கண்டு மிகவும் வருந்திக் கண் கலங்கினார். பாவம், அவரால் வேறு என்ன செய்ய முடியும்!

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top