ரத்த காட்டேரி – 12

ரத்த காட்டேரி – 12

தன்னுடைய பாக்கெட்டைத் தடவிப் பார்த்தபோது டைரி மற்றும் சில பொருட்கள் அப்படியே இருப்பதைப் பார்த்து நிம்மதியடைந்தார்.

அந்த டைரியை டிராகுலா பிரபு பார்த்திருந்தால் கண்டிப்பாக அதை அழித்திருப்பார். அந்த டிராகுலா கோட்டையைப் பற்றி தன்னுடைய குறிப்புகளைப் பார்த்திருந்தால் ஒருவேளை தன்னுடைய உயிருக்குக்கூட ஆபத்தை உண்டாக்கியிருக்கலாம். எப்படியோ உயிர் தப்பியது அதிர்ஷ்டம்தான்.

இரவு முழுவதும் நடந்த நிகழ்ச்சிகளை ஒன்றன்பின் ஒன்றாக கோர்வையாக நினைத்துப் பார்த்தபோது, அந்த அழகிகள் பற்றிய நினைவு மனதை அலைக்கழித்தது.

இரவில் பார்த்த அந்த சம்பவம் நடந்த அறைப்பகுதியை பகல் வெளிச்சத்தில் இன்று பரிசோதனை செய்ய முடிந்தால் நல்லது என்று நினைத்தார்.

அப்படியே தன்னுடைய அறையிலிருந்து வெளியேறி ஜோனாதன் கீழே இறங்கிச் சென்று அந்த அறைப்பக்கம் வந்து நின்றார்.

எப்போதும் திறந்து கிடக்கும் அந்த அறை புதிய தாழ்ப்பாள் போட்டு பூட்டப்பட்டிருந்ததைப் பார்த்து திடுக்கிட்டார். அப்படியென்றால் இரவில் நடந்தது கனவல்ல – நிஜம்தான். மெல்ல உடம்பு முழுவதும் ஒருவிதமான அதிர்வு பரவியது.

எப்படியாயினும் இந்த இடத்திலிருந்து ஒருபோதும் தப்பித்துச் செல்ல முடியாதபடி ஒரு பேராபத்தில் சிக்கியிருக்கிறோம் என்பது மட்டும் உண்மை.

அன்றைக்கு ராத்திரி அவரது அறைக்குள் எந்தவித முன்னறி விப்புமின்றி திடும்மென நுழைந்த டிராகுலா பிரபு வேறு எதுவும் பேசாது உடனே கடிதம் எழுதச் சொன்னபோது ஜோனாதனுக்கு சந்தேகம் வலுவடைந்தது.

முதல் கடிதத்தில் அவருடைய பணிகள் அனைத்தும் முடிந்து விட்டதாகவும் உடனே தான் புறப்படுவதாகவும் எழுதும்படி கூறினார். ஜோனாதன் அவ்வாறே எழுதி முடித்தபோது, இரண்டா வது கடிதத்தில் தான் அந்தக் கோட்டை வாசத்தை முடித்துக் கொண்டு மறுநாள் காலையிலேயே ஊருக்கு கிளம்புவதாகவும் எழுதும்படி கூறினார்.

பிரபு கூறியபடியே மறுப்பேதும் கூறாமல் ஜோனாதன் எழுதினார். எதற்காக இத்தனை அவசர அவசரமாக தன்னை அவ்வாறு கடிதம் எழுதச் செய்தார் என்பது விளங்கவில்லை.

இரண்டாவது கடிதத்தில் தான் அந்த கோட்டையை விட்டுக் கிளம்பி பிஸ்ட்ரீடஸை அடைந்துவிட்டேன் என்று எழுதச் சொன்னபோது ஜோனாதனின் கை நடுங்கியது.

முதல் கடிதத்துக்கு பன்னிரண்டாம் தேதியும், இரண்டாவது கடிதத்துக்கு பத்தொன்பதாம் தேதியும், மூன்றாவது கடிதத்துக்கு இருபத்தொன்பதாம் தேதியும் எழுதி டிராகுலா பிரபுவே கடிதங்களை மடக்கி உறைக்குள் போட்டார்.

டிராகுலா பிரபுவுடன் இது தொடர்பாக இப்போது முரண்படுவது புத்திசாலித்தனமல்ல என்பதை ஜோனாதன் அறிவார். அவருடன் பகைமை கொண்டால் அது ஆபத்தில் முடியும் என்பதால் கடிதம் எழுதுவதில் அவர் தயக்கம் ஏதும் காட்டவில்லை.

ஆனால் பிரபு எழுதிய அந்த மூன்று தேதிகளைப் பார்த்ததும் தான் ஜோனாதனின் நம்பிக்கைகள் யாவும் உடைந்து தூள் தூளாயின. தொண்டை வரள, பாதம் நடுநடுங்க கடவுளை மனமுருகப் பிரார்த்தனை செய்தார்.

ஒரு நிரபராதி தன்னுடைய மரணத் தேதியை அறிந்து கொண்டால் எப்படிப் புலம்புவானோ அவ்வாறே புலம்பினார்.

எப்படியாவது அந்த இடத்தைவிட்டுத் தப்பித்துச் சென்றுவிட வேண்டும் என முடிவு செய்து ஒரு வழியையும் கண்டுபிடித்தார்.

அந்த டிராகுலா கோட்டையின் முன்பகுதியில் சிறிது தூரத்தில் நாடோடிக் கூட்டத்தைச் சேர்ந்த ஜிப்ஸிகள் கூடாரம் அடித்து தங்கியிருந்தனர்.

எந்தவித மூட நம்பிக்கைகளும் இல்லாதவர்கள் அவர்கள். தங்கள் கூட்டத்திலுள்ள உயர்ந்த நபர் ஒருவரை மட்டும் அவர்கள் வணங்குவதைப் பார்த்தார்.

இந்தக் கூட்டத்தினரிடம் தன்னைப் பற்றிய விவரங்களை கடிதத்தில் எழுதி, தன்னுடைய வீட்டாருக்குக் கிடைக்குமாறு செய்துவிடலாம் என்று ஜோனாதன் கருதினார்.

தான் இத்தகைய ஆபத்தில் சிக்கியிருக்கும் தகவல் மட்டும் எப்படியாவது தன்னுடைய நாட்டவருக்குக் கிடைத்துவிட்டால் நிச்சயம் தன்னைக் காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

தான் இங்கிருந்தவாறே ஜன்னல் வழியாக அந்த ஜிப்ஸிகளிடம் அறிமுகம் செய்து கொண்டு, பேசிப் பழகினால் நிச்சயம் அவர்கள் அந்த உதவியை செய்வார்கள் என்று நம்பினார்.

ஜன்னல் வழியாக சில தங்க நாணயங்களை ஜோனாதன் அவர்களை நோக்கி வீசியதுடன், தாம் எழுதிய கடிதங்களையும் அவர்களிடம் ஒப்படைத்தார்.

தபால் பெட்டியில் போட்டுவிடுமாறு சைகையில் ஜோனாதன் தெரிவித்தார். ஒரு பெரிய வேலையை சுலபமாக முடித்துவிட்ட திருப்தியுடன் தனது அறைக்குத் திரும்பி ஒரு புத்தகத்தில் தன்னுடைய வாசிப்பைத் தொடங்கினார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போதுதான் ஒருவித நிம்மதியும் மகிழ்ச்சியும் அவருக்குள் ஏற்பட்டது.

தன்னுடைய அன்புக்குரிய மினாவுக்கு எழுதிய கடிதத்தில் கோட்டை சம்பவங்கள் எதையும் குறிப்பிடவில்லை. வீணாக அவள் மிரண்டு போவாள் என்று தவிர்த்துவிட்டார்.

ஆனால் தன்னுடைய முதலாளி ஹாக்கின்ஸுக்கு எழுதிய கடிதத்தில் விலாவாரியாக எல்லாவற்றையும் எழுதினார். அது அவருக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

ஆனால் அந்த ஆறுதல் இத்தனை சீக்கிரம் அற்ப ஆயுளில் முடிந்துவிடும் என்று ஜோனாதன் நினைக்கவேயில்லை.

ஜோனாதன் ஜிப்ஸிகளிடம் வீசியெறிந்த அந்த இரண்டு கடிதங்களுடன் கோபாவேசமாக டிராகுலா பிரபு அந்த அறைக்குள் நுழைந்தார். அவரது இரண்டு கண்களிலும் தீயின் ஜுவாலை தென்பட்டது.

நுழைந்த வேகத்தில், “”நீங்கள் எழுதியதுதானே இந்த இரண்டு கடிதங்களும்? ஜிப்ஸிகள் என்னிடம் கொடுத்தார்கள். தக்க நடவடிக்கை இதற்கு எடுக்கிறேன்.”

சிறிது நேரம் கோபத்துடன் அங்குமிங்கும் உலாவியபடி கர்ஜித்தவர் முகபாவத்தை சட்டென மாற்றிக் கொண்டு, “இந்தாருங் கள். ஹாக்கின்ஸுக்கு எழுதிய கடிதத்தை நீங்களே அனுப்பிக் கொள்ளலாம். இந்தக் கடிதத்தை பிரித்ததற்காக என்னை மன்னித்துவிடுங்கள். நீங்களே அதனை மீண்டும் ஒட்டி விலாசம் எழுதித் தாருங்கள்” என்றார்.

அதன்பின்னர் டிராகுலா பிரபு வெளிக்கதவைத் தாழ்போட்டு விட்டு வெளியே செல்வது தெரிந்தது. இரண்டு மணிநேரம் கழித்து அங்கே வந்த டிராகுலா பிரபு ஜோனாதன் உறங்குவதைப் பார்த்து திடுக்கிட்டு, “ஓ…. நீங்கள் களைப்பாக இருக்கிறீர்களா? சரி, நன்றாக ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு இன்று நிறைய வேலை இருக்கிறது. ராத்திரியில் இன்று நாம் பேசிக் கொள்ள முடியாதென்று நினைக்கிறேன்” என்று கூறினார்.

டிராகுலா பிரபு சென்றவுடன் ஜோனாதன் களைப்பு நீங்க நன்றாக உறங்கிக் காலையில் எழுந்தார். தன்னுடைய ஊருக்கு கடிதம் எழுதலாமென்று நினைத்தபோது ஜோனாதனுடைய அனைத்துப் பொருட்களும் அங்கே காணாமல் போய்விட்டிருந்தன.

அது நிச்சயம் டிராகுலா பிரபுவின் வேலையாகத்தான் இருக்க வேண்டுமென்று முடிவு செய்தார்.

மறுநாள் அந்தக் கோட்டை வழியாக எட்டுக் குதிரைகள் பூட்டப்பட்ட இரண்டு சாரட் வண்டிகள் போவதைப் பார்த்து விட்டு, எப்படியாவது அதில் தப்பித்து சென்றுவிட நினைத்தபோது, வெளிக்கதவு பெரிய பூட்டு போடப்பட்டிருப்பது கண்டு அசைவின்றி அப்படியே சிறிது நேரம் நின்றார்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top