ரத்த காட்டேரி – 9

ரத்த காட்டேரி – 9

அவரது கையானது எதேச்சையாக ஜோனாதன் கழுத்தில் அணிந்திருந்த ஜெபமாலையில் பட்டுவிட்டது. விறுக்கென தீயைத் தொட்டதுபோல கைகளைப் பின்புறமாக இழுத்துக் கொண்டார்.

அதன்பின்பு மெல்ல தன்னை இயல்பு நிலைக்கு கொண்டுவர டிராகுலா பிரபு முயன்றார்.

“எப்பொழுதும் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். காயம் ஏற்படாமல் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். வீண் ஆபத்தை அது விளைவிக்கக் கூடும்” என்று யதார்த்தமாகப் பேசுவது போல டிராகுலா பிரபு பேசினார்.

அதே சமயம் சட்டென்று அந்த ஜன்னல் கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியைக் கோபத்துடன் பிடுங்கினார்.

“இத்தனைக்கும் காரணம் இந்தப் பாழாய்ப் போன கண்ணாடிச் சனியன்தான்” என்று ஆவேசத்துடன் கூறியபடி, தன்னுடைய இரும்புக் கையால் தொலைதூரத்துக்கு வீசி எறிந்தார்.

அங்கிருந்த ஒரு பாறையில் மோதி கண்ணாடியானது சுக்கு நூறாக நொறுங்கிச் சிதறியது.

டிராகுலா பிரபு அவ்வாறு செய்துவிட்டு அதன்பின் எதுவும் பேசாமல் அந்த அறையைவிட்டு வேகமாக வெளியேறிப் போனார்.

ஜோனாதன் அன்று மதியப்பொழுதில் உணவு உண்ணும் போதுதான் நினைத்தார் – டிராகுலா பிரபு இதுநாள்வரை ஒருமுறை கூட உணவு உண்பதைத் தான் பார்க்கவில்லை என்பதை! அதைப் பற்றி நினைக்கும்போது விசித்திரமாக இருந்தது.

சாப்பிட்ட பின்பு நிம்மதியற்ற மனதுடன் அந்தக் கோட்டைக்குள் தன்னால் நடக்க முடிந்த பகுதிகளெங்கும் நடந்தார் ஜோனாதன்.

ஆனால் எல்லா இடங்களிலும் கதவுகள் அடைக்கப்பட்டு பூட்டுகள்தான் தொங்கின. ஒட்டுமொத்தத்தில் அங்கே சுற்றிப் பார்த்தபோது மூடிக்கிடந்த கதவுகளும், கருங்கல் சுவர்களிலுள்ள பிரம்மாண்டமான ஜன்னல்களும் – அந்த இடம் ஒரு பெரிய சிறைச்சாலை போலத்தான் நினைக்கத் தோன்றியது.

அங்கிருந்து வெளியேறுவதற்கான எந்த ஒரு மார்க்கமும் இருப்பதாகத் தெரியவில்லை. தான் ஒரு கைதிதான் என்ற நினைப்பு ஒருவிதமான பயத்தையும் திகைப்பையும் ஏற்படுத்தியபோது, ஒரு பைத்தியக்காரனைப் போல கோட்டைக்குள் அங்குமிங்குமாக ஓடினார்.

மாடிப்படிகளில் ஏறுவதும் இறங்குவதும், எதிர்பட்ட ஜன்னல், கதவுகளை கால்களால் ஓங்கி மிதித்துத் திறக்க முயன்றும் பலவாறு நடந்து பார்த்தார். இவ்வாறு பலமுறை செய்தும் பயனில்லாது மிகவும் சோர்ந்து போனார்.

தன்னை இவ்வாறு கைதிபோல பாவிப்பதற்கு ஏதாவது காரணங்கள் உண்டா என்று டிராகுலா பிரபுவிடம் கேட்க வேண்டுமென்று ஜோனாதன் முடிவு செய்தார்.

எப்படியாவது புத்திசாலித்தனமாக யோசித்து அங்கிருந்து தப்பிக்க வேண்டுமென அவர் நினைத்துக் கொண்டிருந்தபோது கீழே கதவை மூடும் சத்தம் கேட்டது.

டிராகுலா பிரபுதான் கதவை மூடி இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார் ஜோனாதன். மேலும் தன்னை அந்த இடத்துக்கு அழைத்து வந்த வண்டிக்காரனும் இந்த டிராகுலா பிரபுவும் ஒருவர்தானோ என்ற சந்தேகம் இப்போது அவருக்குள் வலுத்தது.

அன்று இரவு இங்கே வந்து கொண்டிருந்தபோது, அந்த வண்டிக்காரர் தன்னுடைய கைகளை உயர்த்தி வீசி ஓநாய்க் கூட்டத்தை விரட்டியடித்த காட்சி இப்போது நினைவுக்கு வந்தது.

தன்னுடைய கழுத்திலிருந்த ஜெபமாலையைத் தொடும் போதெல்லாம் ஒருவிதமான நிம்மதியும் அதனைத் தனக்கு போட்டுவிட்ட வயதான மூதாட்டியும்தான் நினைவுக்கு வந்தது.

சீக்கிரமே இந்த டிராகுலா பிரபுவைப் பற்றிய ரகசியங்களைக் கண்டுபிடித்தாக வேண்டும் என்று தீர்மானித்தார் ஜோனாதன்.

அன்றைக்கு நள்ளிரவுவரை டிராகுலா பிரபு ஜோனாதனுடன் பேசிக்கொண்டிருந்தார். தான் அடிலா என்ற ஹுண மன்னர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர் என்று பெருமிதத்துடன் கூறினார்.

துருக்கி, மக்யார், லெம்பார்டு போன்ற நாட்டவர்களுடன் தமது மன்னர்கள் போரிட்ட வீர வரலாற்றைப் பற்றியெல்லாம் பல ருசிகரமான தகவல்களைக் கூறினார்.

அந்த பரம்பரையினருக்கு வீர ரத்தம் வழங்கியதும் தைரியம் கொடுத்ததும் இந்த டிராகுலா பிரபுவின் ரத்தம்தான் என்று ஆவேசத்தோடு தன்னைப்பற்றிக் கூறியபோது, ஜோனாதன் நடுநடுங்கிப் போனார்.

தனக்கு முன்பாக பேசிக் கொண்டிருக்கும் இதே பிரபுதான் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் என்ற செய்தியைக் கேட்டு தன்னுடைய உடம்பு முழுவதும் மின்சாரம் பாய்வது போலுணர்ந்தார்.

பொழுது விடியும் தறுவாயில் இருந்ததால் இருவரும் பேசுவதை நிறுத்திவிட்டனர். பிரபு எழுந்து சென்றுவிட்டார்.

மறுநாள் மாலை டிராகுலாபிரபு அங்கு வந்தபோது லண்டனி லுள்ள எஸ்டேட்டை வாங்குவது பற்றிப் பேசத் தொடங்கினார்.

“என்னுடைய நண்பர் பீட்டர் ஹாக்கின்ஸுக்கு அன்றைக்கு முதல் கடிதம் அனுப்பிய பிறகு, அவருக்கோ அல்லது வேறு யாருக்காவது மறுபடி கடிதம் ஏதும் எழுதி அனுப்பினீர்களா?” என்று டிராகுலா பிரபு கேட்டார்.

ஜோனாதன் “இல்லை’ என்று தலையாட்டினார்.

“அப்படியானால் நீங்கள் இனிமேல் எழுதும் கடிதத்தில், நீங்கள் விரும்புவதாக இருந்தால் இன்னும் ஒருமாத காலம் இங்கேயே என்னுடன் தங்கப் போவதாக எழுதுங்கள்” என்று பிரபு கூறியதைக் கேட்டு நடுக்கமுற்று, “”நான் அவ்வளவு காலம் இங்கேயே தங்க வேண்டியிருக்குமா என்ன?” என்று கேட்டார் ஜோனாதன்.

“ஆம். அப்படித்தான் நான் விரும்புவதாக வைத்துக் கொள்ளுங் கள். மிஸ்டர் ஹாக்கின்ஸ் உங்களுக்கு பாஸ்தானே. அவர் உங்களை இங்கே அனுப்பியது என்னுடைய தேவைகள் மற்றும் வசதிகளைக் கவனிப்பதற்குத்தானே?”

பிரபு அவ்வாறு கேட்டபோது அதற்கு பதிலேதும் கூறத் தோன்றவில்லை. ஆனாலும் ஒப்புக்கொள்வது போல தலையாட்டு வதைத் தவிர வேறு வழியில்லை.

“நீங்கள் கடிதம் எழுதும்போது நமது கொடுக்கல் – வாங்கல் தொடர்பான தகவல்களைத் தவிர வேறு எதைப் பற்றியும் எழுதக்கூடாது. நீங்கள் பத்திரமாகத் திரும்பிச் செல்ல வேண்டும் அல்லவா?” என்று கூறியபடி டிராகுலா பிரபு சில கவர்களையும் காகிதங்களையும் ஜோனாதனிடம் வழங்கினார்.

டிராகுலா பிரபுவின் கட்டளையின் உள்நோக்கம் புரிந்து விட்டதால், அவர் கூறிய விஷயங்களை மட்டும் எழுதுவது என்றும், அதன் பின்னர் ரகசியமாக ஷார்ட் ஹேண்ட் முறையில் பீட்டர் ஹாக்கின்ஸுக்கும் தமக்கு நெருக்கமானவர்களுக்கும் எழுதுவது என்றும் முடிவெடுத்தார்.

ஜோனாதன் கடிதங்களை எழுதி முடிக்கும் வரையில் பொறுமையாக இருந்துவிட்டு, பிறகு அவரைப் பார்த்துக் கூறினார்:

“இன்னும் சில விஷயங்களைப் பற்றி நான் உங்களுக்கு கூறவேண்டியுள்ளது. நீங்கள் தூக்கம் வரும்போது உங்கள் அறையில் மட்டும்தான் படுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் இந்தக் கோட்டையிலுள்ள மற்ற எந்தப் பகுதிக்கும் சென்று படுத்து உறங்காதீர்கள். அப்படிச் செய்தால் உங்களுக்கு ஆபத்தாகத்தான் முடியும்” என்று சற்று கோபம் தொனிக்கும் குரலில் கூறிவிட்டு டிராகுலா பிரபு கிளம்பிச் சென்றார்.

அவர் சென்ற பின்பு தன்னுடைய அறைக்குள் நுழைந்தவர், சிறிது நேரத்திற்கு அங்கே எந்தவிதமான சத்தமும் கேட்கவில்லை என்று உறுதி செய்தபின்பு அந்த அறையைவிட்டு வெளியே வந்தார்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top