இங்கிலாந்தில் டிராகுலா பிரபு வாங்க முடிவு செய்திருந்த அந்த எஸ்டேட், பேர்பிளீஸ் என்ற இடத்தில் ஏறத்தாழ இருபது ஏக்கர் பரப்பைக் கொண்டது.
கருங்கல் சுவர்களால் நான்குபுறமும் கட்டப்பட்ட அந்த இடத்திற்குள் “ஃபோர் ஃபேசஸ்’ என்ற புராதன காலத்து பங்களா ஒன்று இருந்தது.
அந்த பங்களாவையும் நிலப்பகுதியையும் வெவ்வேறு கோணங்களில் புகைப்படங்கள் எடுத்து ஜோனாதன் அவருக்காகக் கொண்டு வந்திருந்தார்.
இங்கிலாந்திலுள்ள தனது நண்பர் ஹாக்கின்ஸுக்கு கடிதம் எழுதி இதற்குரிய ஏற்பாட்டினைச் செய்திருந்தார் டிராகுலா பிரபு.
அந்த இடத்தை முறைப்படி கிரயம் பேசி பத்திரங்களை ஒழுங்கு படுத்துவதற்குத்தான் ஹாக்கின்ஸ் தனது உதவியாளர் ஜோனாதன் ஹார்க்கரை டிரான்ஸில்வேனியாவுக்கு அனுப்பி வைத்திருந்தார்.
டிராகுலா பிரபு அவர் கொண்டு வந்த வீட்டின் புகைப் படங்களை ஒவ்வொன்றாகப் புரட்டிப் புரட்டிப் பார்த்தபடி இருந்தார். மாதா கோவில் ஒன்று அந்த வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தது.
நீண்ட காலமாக செயல்படாமல் இருந்த அந்த எஸ்டேட் டையும் மூடிக் கிடக்கும் அந்த பங்களாவையும் பார்த்தால் ஒரு பெரிய கல்லறை மாதிரி இருந்தது.
டிராகுலா பிரபுவுக்கு அந்த இடம் மிகவும் பிடித்துப் போய் விட்டதாகக் கூறினார். புதிய கட்டிடங்களைவிட புராதனமான கட்டிடங்களும் அதன் தனிமையும் இருட்டும் மிகவும் பிடித்திருப்ப தாக அவர் கூறியதைக் கேட்டு ஜோனாதனின் உடம்பு நடுங்கியது.
தன்னுடைய இருக்கையிலிருந்து திடும்மென எழுந்த டிராகுலா பிரபு ஒப்பந்தத்துக்குத் தேவையான மற்ற எல்லா பத்திரங்களையும் முறைப்படுத்துமாறு கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
அவர் திரும்பி அந்த அறைக்கு வந்தபோது நிச்சயம் ஒரு மணி நேரமாவது கடந்து போயிருக்கும். “நீங்கள் இன்னுமா புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஏதாவது ஒரு வேலையை எப்போதும் செய்து கொண்டிருப்பது சரியில்லை. வாருங்கள், உணவு தயாராகியிருக்கும்” என்று கூறியபடி ஜோனாதனை சாப்பாட்டு அறைக்கு அழைத்துச் சென்றார் பிரபு.
டிராகுலா பிரபு அன்றைக்கும் தன்னுடன் சேர்ந்து அமர்ந்து சாப்பிடமாட்டார் என்பது அவருக்குப் புரிந்தது. ஆனாலும் தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்து பேசுவதற்கு அவர் விருப்பம் தெரிவித்ததே மகிழ்ச்சியாக இருந்தது.
ராத்திரி உணவுக்குப் பின்பு இருவரும் நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்தனர். முதல்நாள் ராத்திரி நன்றாகத் தூங்கியதால் ஜோனாதனுக்கு அவ்வளவாக தூக்கம் வரவில்லை.
நேரம் கடந்ததே தெரியாமல் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது தூரத்தில் எங்கோ சேவல் ஒன்று கூவியது. தொடர்ந்து காகங்கள் கரையும் சத்தமும் கேட்டபோது, திடுக்கென்று டிராகுலா பிரபு தான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து நின்றார்.
“பார்த்தீர்களா… நேரம் ஆனதே தெரியவில்லை. உங்களையும் இவ்வளவு நேரம் தூங்கவிடாது தவறு செய்துவிட்டேன். நீங்களும் இப்படியெல்லாம் பேசியதால்தான் நானும் பதில் கூறிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.”
ஜோனாதனுக்கு குட்நைட் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
அதன்பின்னர் ஜோனாதன் தன்னுடைய அறைக்குச் சென்று படுத்துக் கொண்டார். ஆனால் நீண்ட நேரம் தூங்க பிடிக்கவில்லை. சூரிய வெளிச்சம் நன்றாகப் பரவிவிட்டதால் எழுந்து தன்னுடைய சிறிய முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து சுவரில் மாட்டி சவரம் செய்யத் தொடங்கினார்.
எதிர்பாராத அந்த நேரத்தில் திடீரென கருமையான கையொன்று ஜோனாதனனின் தோள்மீது பதிந்தது.
திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தபோது பின்னால் டிராகுலா பிரபு நின்று கொண்டிருந்தார்.
அவர் குட்மார்னிங் சொன்னார். ஆனாலும் தன்னுடைய உடம்பெல்லாம் நடுங்குவது போல் உணர்ந்தார் ஜோனாதன்.
அதற்குக் காரணம் இருந்தது. ஏனென்றால் அந்த அறையிலிருந்த எல்லாப் பொருள்களும் கண்ணாடியில் தெளிவாகத் தெரிந்தன. ஆனால் டிராகுலா பிரபுவின் முகத்தை மட்டும் அந்தக் கண்ணாடியில் பார்க்க முடியவில்லை.
அதை நினைத்து நடுங்கிப்போய் சற்றே உதறலுடன் பின்னால் திரும்பிய ஜோனாதனின் முகத்தில், அந்த சவரக்கத்தி சிறிய கீறலை ஏற்படுத்தியது. ஜோனாதன் அது சிறிய கீறல்தான் என்று பொருட்படுத்தவில்லை.
பின்னால் நின்று கொண்டிருக்கும் டிராகுலா பிரபுவின் முழு உருவத்தையும் தன்னால் பார்க்க முடிந்த போதிலும், கண்ணாடியில் சுத்தமாக அவரது பிம்பம் விழாதது ஜோனாதனை மனம்
பேதலிக்கச் செய்தது.
இது எப்படி சாத்தியம்? சந்தேகம் ஏற்பட்டு பயத்துடன் மீண்டும் கண்ணாடியில் பார்த்தபோதுதான் தன்னுடைய முகத்தில் ஏற்பட்ட கீறலிலிருந்து ரத்தம் வழிவது தெரிந்தது.
உடனே சவரக்கத்தியைக் கீழே வைத்துவிட்டு அந்த ரத்தத்தை துடைப்பதற்கு ஏதாவது துணி கிடைக்குமா என்று ஜோனாதன் தேடினார். அச்சமயம் டிராகுலா பிரபுவும் ஜோனாதனின் முகத்தைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
அந்தக் கணத்தில் டிராகுலா பிரபுவின் முகமானது திடும்மென ஒரு தீய ஆவியின் ஊடுருவலாய் மாறியது போலாயிற்று.
காட்டு விலங்கு உறுமுவது போல உறுமிக் கொண்டு ஜோனாதனின் கழுத்தைப் பற்றுவதற்குப் பாய்ந்தார் டிராகுலா பிரபு.
தொடரும்…