காகத்திற்கு உணவிடுவது ஏன்?
நாம் உணவு உண்ணும் முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வழங்க வேண்டும். காரணம், நம்முடைய முன்னோர்கள் காகத்தின் வடிவில் வருவதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது.
அவர்களுடைய ஆசியினால் தான் நாம் இவ்வுலகில் அமைதியாக, சந்தோஷமாக, நிம்மதியாக வாழ முடிகிறது.
எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு காகத்திற்கு தினசரி உணவிடுகின்றனர்.
காகத்திற்கு உணவிடும் பழக்கத்தினால் கணவன், மனைவி ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலைக்கும் என்பது நம்பிக்கை.
சனீஸ்வர பகவானின் வாகனமாகையால், காகத்திற்கு உணவளிப்பதன் மூலம் சனி பகவான் தரும் கெடுபலன்களிலிருந்து விடுபடலாம்.
இறைவனின் பரிபூரண அருளையும், அன்பையும் பெறலாம். இதில் இன்னொரு தத்துவமும் இருக்கிறது. காகத்தை “ஆகாயத்தோட்டி என்பர்.
இந்தப் பறவை யாருக்கும் கெடுதல் செய்வதும் இல்லை. இது நம்மைச் சுற்றியுள்ள அசுத்தங்களை அடியோடு களைவதாலும் இந்த இனம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதின் அடிப்படையிலும் உணவிடும் பழக்கம் வந்தது.
நாம் பூஜை செய்யும் போதும், அமாவாசை மற்றும் திதி நாட்களிலும் படைத்த படையலில் இருந்து சிறிது உணவை எடுத்து காகத்துக்கு வைத்து பிறகு சாப்பிடும் வழக்கத்தை வைத்துள்ளோம்.
நமது மூதாதையர், காகம் உருவில் வந்து நாம் வைக்கும் உணவை சாப்பிடுவதாக நாம் நம்புகிறோம்.
அந்த நம்பிக்கையே வராத காகத்தையும் கா.. கா.. என கத்தி கத்தி அழைத்து சாப்பிட வைப்பதற்குக் காரணமாகும்.
சிலர், உணவை வைத்துவிட்டு காகம் வந்து சாப்பிடுகிறதா என்று பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.
அவ்வாறு வந்து எடுக்கவில்லை என்றால், அது குறித்து கவலை அடைந்து, ஏதோ தெய்வக் குத்தம், மூதாதையர் கோபத்துக்கு ஆளாகிவிட்டதாகக் கருதுவார்கள்.
ஆனால், உண்மையில் அப்படி இல்லை. உங்களுக்கு சாப்பாடு போட்டுவிட்டு உங்களையே பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும். நிம்மதியாக சாப்பிடுவீர்களா? காகத்துக்கும் அப்படித்தான்.
எனவே, காகத்திற்கும் சோறு வைத்துவிட்டு அதையே பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி வரும், பிறகு சாப்பாட்டை எடுக்கவில்லை என்று கவலை அடைந்து, ஜோதிடர்களிடம் பரிகாரம் கேட்பது தவறு.
காக்கை உருவில் முன்னோர் வந்து சாப்பிடுகிறார்கள் என்ற நம்பிக்கையோடு காகத்துக்கு சாப்பாடு வைத்துவிட்டு ஓரிரு முறை கா கா கா என்று அழைத்துவிட்டு வந்து விட வேண்டும்.
காகம் தானாகவே வந்து எடுத்துக் கொள்ளும். நம்பிக்கையை சோதிக்கும் போது அது உங்களுக்கு சோதனையாகிவிடக் கூடும்.
காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம். அதுபோல, பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு.
காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்லப்படுகிறது.
காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை.
காகம் நாம் வைத்த உணவைத் தீண்டாவிட்டால் இறந்து போன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாக கருதுவதும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
பிதுர் தர்ப்பணத்திற்குரிய கயாவில் உள்ள பாறைக்கு காக சிலை என்று பெயர். அந்த பாறையில் தான் பிண்டம் வைத்து வணங்குவர்.
தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பிற காக்கைகளையும் கரைந்து அழைத்த பின்னரே, காகம் உணவு உண்ணும்.
அப்படிப் பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும்.
எப்படியிருப்பினும், ஜீவகாருண்யம் மிக்க புண்ணியச்செயல் இது.