Home » உடல் நலக் குறிப்புகள் » தலைசிறந்த ஏழு மருத்துவர்கள்!!!
தலைசிறந்த ஏழு மருத்துவர்கள்!!!

தலைசிறந்த ஏழு மருத்துவர்கள்!!!

உலகின் தலைசிறந்த ஏழு மருத்துவர்கள்

தண்ணீர்
காற்று
அளவான உணவு
பரிதியின் ஒளி (சூரியஒளி)
உடற்பயிற்சி
ஓய்வு
நல்ல நண்பர்கள்

இன்றைய அறிவியல் உலகில், அன்றாட வாழ்வியல் கூறுகள் பல மாறிவிட்ட சூழலில் இந்த ஏழு மருத்துவர்களையும் நாம் இழந்துவிட்டோமோ என்றுதான் தோன்றுகிறது.

தண்ணீர் – நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாலும், பருவமழை தவறியதாலும் இன்றைய சூழலில் தண்ணீரும் தனியார் மருத்துவமனைகளைப் போல விலைமதிப்புமிக்கதாகிவிட்டது.

காற்று – காடுகளை அழித்ததாலும், விவசாயத்தை மறந்ததாலும் காற்றும் கூட இன்று மின்விசிறி, குளிரூட்டி என பெயர் மாற்றிக்கொண்டது. எதிர்காலத்தில் குழந்தைகளிடம் காற்று எங்கிருந்து வரும் என்று கேட்டால் குழந்தைகள் கண்களை மூடிக்கொண்டு காற்று மின்விசிறியில் இருந்து வரும் என்றுதான் கூறுவார்கள்.

அளவான உணவு– வேலைக்குச் செல்லும் அவசரத்தில் இன்று என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று கூட பலர் நினைவு வைத்திருப்பதில்லை. இச்சூழலில் அளவான உணவு என்பது அளவில்லாத ஆசை என்றுதான் தோன்றுகிறது.

பரிதியின் ஒளி – ஓசோன் படலம் முழுவதும் இல்லாமல் போய்விட்டதோ என்று எண்ணும் அளவுக்கு பரிதியின் ஒளி, உயிர்களை வாட்டி வதைக்கிறது. எதிர்காலத்தில் ஓசோன் படலம் போல செயற்கையாக ஏதாவது படலத்தை உருவாக்கினால்தான் பூமியில் வாழமுடியுமோ என்று தோன்றுகிறது.

உடற்பயிற்சி – வீடு விற்பனைக்கு என்ற பெயரில் விளைநிலங்களைக் கூட பட்டா போட்டு விற்றுவருகிறார்கள். அதனால் விளையாட்டுத் திடல்களெல்லாம், வீடுகளாக மாறிவருகின்றன. எதிர்காலத்தில் பள்ளிக்கூடங்களில் எல்லாம் விளையாட்டுப் பாடவேளை என்பது கணினிக்கூடங்களில் விளையாடும் விளையாட்டுதான் என்று மாறிப்போகலாம்,

ஓய்வு – ஏறிவரும் விலைவாசி உயர்வுக்குத் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஏழை, நடுத்தர மக்கள் கூடுதலாக உழைக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஓய்வு என்பது மரணம் மட்டுமே என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நல்ல நண்பர்கள் – பகக்கத்தில் இருக்கும் நண்பர்களைவிட முகநூலிலேயே நண்பர்களைத் தேடும் இந்தக் காலத்தில் நல்ல நண்பர் யார் என்பதற்கான இலக்கணமே மாறிவிட்டது. இன்றைய தலைமுறையினர் இன்பதுன்பங்களை அக்கம்பக்கத்து நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வதைவிட சமூகதளங்களில் பகிர்ந்துகொள்வதையே பெரிதும் விரும்புகின்றனர்.

இவ்வாறு மாறிப்போன காலச்சூழலில் இந்த தலைசிறந்த ஏழு மருத்துவர்களையும் நம் குழந்தைகளுக்கு நாம் அடையாளம் காட்டவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top