Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » மிரட்ட வரும் பேய் – 7

மிரட்ட வரும் பேய் – 7

அமைதியின் நிசப்தத்தில் அடங்கிக்கிடந்த அந்த இரவு வேளையில் எப்போதும் போல்  வயலுக்கு வந்து  மடையைதிறந்து தண்ணீர் விடுவதற்காக இரண்டு விவசாயிகள் அரிக்கன் விளக்கை கையில் பிடித்தபடி நின்று கொண்டிருந்தார்கள். தூரத்தில் எங்கோ நாய்கள் பலமாக ஊளையிட்டுக் குரைக்கும் சப்தம் மட்டும் வந்து கொண்டு இருந்தன..அரிக்கன் விளக்கை சற்று உயர்த்திப் பிடித்துப் பார்த்தவர்கள் அதிர்ச்சியாகிப் போனார்கள்…இருட்டோடு இருட்டாக ஒரு கறுத்த உருவம் ஒன்று காற்றோடு பறந்து செல்வது போன்ற நடையில் மயானத்தை நோக்கிச் செல்வது கண்களுக்குத்தென்பட்டன….யா..யாரப்பா..அங்கெ போறது..யா..யாரு.. என்று பயத்தின் தளதளத்த குரலில் குரல் கொடுத்தார்அந்த விவசாயி. அந்தக் குரல் யாதும் அந்த உருவத்தின் செவிக்குள் செல்லவில்லை போலும்… அந்த உருவத்தின் நடை ஒருநோக்கத்திலேயே ஆடாமல் அசையாமல் நேராக நடந்து சென்று கொண்டிருந்தன. அது மயானத்தை அடையும் போது…

டேய் தம்பி இந்த உருவம் அந்த சுடுகாட்டுப் பக்கமா போறத பாத்தா இது என்னமோ பேய் மாதிரித்தான்டா தெரியுது.போனவாரம் அடுத்ததெரு தம்பி ஒன்னு ஆக்சிடெண்ட்டுல செத்துச்சில அதுட ஆவியாத்தாண்டா இருக்கும். இதுக்குத்தான் ஒன்கிட்டே அப்பவே சொன்னேன்., நேரத்தோட கொஞ்சம் முன்னமே வந்து வேலைய முடிச்சிட்டு போலாம்ண்டு நா சொன்னத நீ கேக்கல. இப்பபாத்தியா..கடவுளே நீ தாங் காப்பாத்தணும் என்று சொல்லி புலம்பத்தொடங்கினான். இப்போ என்னடா பண்றது.? என்னா… பண்றதா…இதுக்கு மேல நாம இங்க நிக்க வேணாம் வா நாம இங்கேருந்து போய்டுவோம்.. என்று..அவசர அவரமாக அந்த இடத்தை விட்டு மூச்சிரைக்க ஓடினார்கள்.

ஓடிவந்து ஊர் எல்லையை அடைந்ததும்…… மூச்சிரைத்தபடி…. அந்ததம்பி சின்னவயசு… பாவம்… இப்புடி அநியாயத்துக்கு ஆக்சிடெண்ட்ல செத்துப் போயி ஆவியா அலையுது. நாம இனிமே ராத்திரியில வயக்காட்டுப் பக்கமா வரக்கூடாது என்று பேசியவாறு அவரவர் வீட்டுக்குச் சென்று விட்டார்கள்.

அடுத்தநாள் விடிகாலையிலேயே அவர்கள் சூரிய உதயத்திற்க்குமுன் வயலுக்குச் சென்றார்கள். அப்போது மயானத்தை சற்று உற்று நோக்கியவர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள். .. கருப்பு நிற போர்வையை போர்த்தியவாறு கல்லறையைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அங்கு ஒரு உருவம் உறங்கிக் கொண்டு இருந்தன.

அருகில் சென்ற அவர்கள்… தம்பி… யாரு நீங்க ஏந்திறிங்க…என்று எழுப்பி விட்டனர். கண்ணைக்கசக்கியபடி அந்த உருவம் எழுந்து அமர்ந்தவாறு…நா…நா..நா எப்படி இ..இங்கே..என்று .. சுற்றும்முற்றும் பார்த்தவாறு அவர்களிடம் கேட்டதும் அட ..நீங்களாதம்பி..என்றவாறு இரவு இவன் இந்த மயானத்திற்கு வந்ததையும் இவர்கள் பேய் என்று பயந்து ஓடியதையும் அவனிடத்தில் சொல்லிக் காட்டினார்கள்..அப்போதுதான் இவனுக்கு புத்தியில் உதித்தது. விபத்தில்  அகால மரணமடைந்த நண்பனின் ஞாபகத்தில் மூழ்கி அவன் நினைவுகளை மனதில் அதிகமாக்கிக் கொண்டதால் தூக்கத்தில் எழுந்து நடந்து வந்து அவனது கல்லறையில் வந்து உறங்கி விட்டோமென்று…!

FLASH BACK……l [ பதிவின்  முதல் பகுதி .! ]

——————–

சின்ன வயதிலிருந்து உயிருக்குயிராக பழகிய இணைபிரியா இருநண்பர்கள் இருந்தனர்.. ஒரு வாகன விபத்தில் தனது நண்பன் கொடூராமாக அடிபட்டு இறந்து விடுகிறான். அந்த கோரவிபத்தை நேரில் பார்த்த அன்று முதல் தனது சிந்தனைகள் எல்லாம் நண்பனைப் பற்றிய, நினைவால் அனைத்தையும், மறந்த நிலையில் இருந்தான். யாரிடமும் சரியாக பேசுவது கூட இல்லை.

ஏன்டா இப்டி இருக்கே..!? நாம என்னடா செய்றது..நாம கொடுத்து வச்சது அவ்வளோதான் அவனெய நெனச்சி நெனச்சி ஓஒடம்பெ கெடுத்துக்காதெடா… எல்லாத்தையும் மறந்துடுறா…. என்று அவனுக்கு அம்மா ஆறுதல் சொன்னாள். அது எப்புடிம்மா அவன நானு மறக்கமுடியும்.!? அவன் என் உசுரும்மா என்று அழுது புலம்பினான்.

என்னதான் அவனை சமாதானப்படுத்தியும் அவன் நண்பனை மறக்கமுடியாமல் சதா அவனை நினைத்துப் புலம்பிக் கொண்டிருந்தான். அன்று அம்மா வற்ப்புறுத்திக் கொடுத்த இரவு சாப்பாட்டை முடித்து விட்டு படுக்கைக்குச் சென்ற அவன் தனது நண்பன் தன்னிடத்தில் எவ்வளவு பாசம், அன்பு வைத்திருந்தான் என்பதையும் அவன் செய்த சினச்சின்ன குறும்புகளையும் நினைத்தபடியே சிந்தனைகள் யாவும் நண்பனின் நினைவுகளோடு ஒன்றிபோனவனாய் உறங்கிப் போனான். அன்று நடு இரவு நேரம்…

இவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது.. அந்த இருளின் நடுவில் தனது நண்பனைப் போன்ற தோற்றத்திலான ஒரு நிழல் உருவம் இவன் அருகில் வந்து அமர்ந்து கொண்டு டே..ய் நண்…பா நீ நல..மா..?? என்று கேட்டது போல் இருந்தது. ஆச்சரியத்தில் பதஸ்டமாக தூக்கம்களையாமலே எழுந்து அமர்ந்தான். அந்த நிழல் உருவம் போன்ற தோற்றம் இவனை வா…வா.. என்னோடு வந்துடு.. நாம போகலாம் என்று நினைவுகளின் பிம்பங்கள் நிஜ உணர்வைத் தூண்டி இழுத்து அழைத்தது.. தூக்கத்தை விட்டு விடுபடாமலேயே இவன் போர்த்தியிருந்த கருப்புநிற போர்வை அலங்கோலமாக இவன் உடலை அரைகுறையாக போர்த்தியபடி வீட்டுத்தாழ்ப்பாளை விரல்களால் திறந்துகொண்டு அந்தத் திறந்தவெளி நடு இரவு இருட்டினில் நடக்கத் தொடங்கினான். அவனின் எண்ணங்கள் யாவும் தன் நண்பன் வந்து அழைத்துச் செல்வது போல இருந்தது. இவனது அலங்கோல நிலையைக் கண்டு தெரு நாய்கள் ஓலமிட்டு குரைக்கத்தொடங்கின.

அக்கம்பக்கத்து வீட்டார்கள் ஒரு சிலர் நாய்களின் ஊளை சப்தம் கேட்டு ஏதோ பேயைப் பாத்துத் தான் நாய் இப்புடி ஊளையிட்டு குரைப்பதாக பயத்தில் படுக்கையை விட்டு எழும்பாமல் பேசிக் கொள்கிறார்கள்.

சற்று நேரத்திற்க்கெல்லாம் நாய்களின் சப்தம் அடங்கியதும் நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி தூங்கிப் போய் விடுகிறார்கள்.

இவன் தனது நடையை நிறுத்தாதவனாக ஊரைவிட்டுக் கடந்து அந்த ஒதுங்குப்புறமாக இருக்கும் மயானத்தை நோக்கி நடந்து கொண்டு இருந்தான். அப்போது…..

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top